Published:Updated:

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

Published:Updated:
அக்கம் பக்கம்

அட, ஆயில் புல்லிங்!

அக்கம் பக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த மதுரை மாநரகாட்சி தற்போது சோதனைரீதியாக 'ஆயில் புல்லிங்’ என்ற புதிய முறையைப் பயன்படுத்திவருகிறது. கொசுக்களை ஒழிக்கப் பூச்சி மருந்து தெளிப்பு, புகை எனப் பல்வேறு வழிகளைப் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆனால், இதற்கெல்லாம் இப்போது கொசு கட்டுப்படுவதில்லை. எதிர்த்துச் செயலாற்றும் நிலையைக் கொசுக்கள் பெற்றுவிடுகின்றன. இதனால், தற்போது வைகை ஆற்றில் ஆகாயத் தாமரையை அகற்றி அதன் மீது எண்ணெய் மற்றும் கொசு மருந்து தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் கொசுவின் லார்வா புழுக்களின் சுவாசம் தடுக்கப்பட்டு, அழிக்கப்படுகிறது. இந்த முயற்சி வெற்றிபெற்றால் மாநகராட்சி முழுவதும் செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

 அலுவல்... அதிர்ச்சி!

அக்கம் பக்கம்

பெங்களூருவில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் புரோகிராம் மேனேஜராகப் பணிபுரிந்தவர் 29 வயதான ஆர்த்தி ஷர்மா. உயர்ந்த பதவி, நல்ல சம்பளம். வாழ்க்கை மிக மகிழ்ச்சியாகவே இருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அதிக மன அழுத்தம், மனப் பதற்றம், திடீர் திடீரென மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டன. மாதவிலக்கு வருவதிலும் சீரற்ற நிலை. அதனால் மகளிர் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவர் ஒருவரைச் சென்று சந்தித்து ஆலோசனை பெற்றுள்ளார் ஆர்த்தி.  சில ஹார்மோன் பரிசோதனைகளை மேற்கொண்ட டாக்டருக்கு அதிர்ச்சி. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸின் ஆரம்ப நிலையில் இந்த இளம் பெண் இருந்ததுதான் அதிர்ச்சிக்குக் காரணம். இன்னும் திருமணம்கூடச் செய்துகொள்ளாமல் வேலை வேலை என்று இருந்த அந்தப் பெண்ணும் அதிர்ச்சியில் உறைந்துபோனார். ஆர்த்தி ஷர்மாவுக்கு மட்டும் அல்ல...  வேலைக்குச் செல்லும் பல பெண்களுக்கும் மெனோபாஸ் முன்கூட்டியே ஏற்படுகிறது என்று 'சாத்வம்’ என்ற அமைப்பு நடத்திய ஐந்து ஆண்டு ஆய்வு முடிவு கூறுகிறது. இதற்கு மாறிவரும்

அக்கம் பக்கம்

நகர்ப்புற வாழ்க்கைமுறை முக்கியமான காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். எச்சரிக்கையுடன் இருந்தால் இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியுமாம்.

ஓட்டமா... நடையா?

ஓட்டத்தைவிட நடைப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு இதய நோய்களுக்கான வாய்ப்புக் குறைவு என்று அமெரிக்காவின் 'நேஷனல் வாக்கர்ஸ் ஹெல்த்’ ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பாக இவர்கள் 33 ஆயிரத்து 60 ஓட்டப் பயிற்சியாளர்களிடமும், 15 ஆயிரத்து 45 நடைப் பயிற்சியாளர்களிடமும் ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆறு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்படி, நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்குச் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்ததைக் கண்டறிந்து உள்ளனர்.

 சீனாவை மிரட்டும் பறவை!

சீனாவின் கிழக்கு மாகாணங்களில் பறவைக் காய்ச்சல் படு வேகமாகப் பரவி வருகிறது. ஷாங்காய் நகரில் அமைந்துள்ள இரண்டு மார்க்கெட்களில் இருந்துதான் நோய் பரவுகிறது என்பதைக் கண்டறிந்த அந்நாட்டு சுகாதாரத்துறையினர், அந்த இரண்டு மார்க்கெட் உட்பட ஷாங்காய் நகரில் இருக்கும் அனைத்து மார்க்கெட்களையும் மூட உத்தரவிட்டு உள்ளனர். மேலும் வேறு இடங்களில் இருந்து ஷாங்காய் நகருக்குள் உயிருள்ள கோழிகள், பறவைகள் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டது. இது அப்பகுதியின் முக்கியத் தொழில் நகரான ஷாங்காயில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சீன அரசு, 'எங்கள் நாட்டுச் சுகாதார ஊழியர்கள், திறம்படச் செயல்பட்டுப் பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்துவார்கள்’ என உறுதி அளித்துள்ளது. இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பின் உதவி தேவைப்பட்டால் உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்று உலக சுகாதார நிறுவனமும் ஆதரவுக்கரம் நீட்டி உள்ளது.

 பயணிகள் கவனிக்க!

ரயில்களிலும், ரயில் நிலைய வளாகங்களிலும் விற்கப்படும் உணவின் தரத்தைப் பற்றிப் பயணிகள் புகார் தெரிவிக்க வசதியாக, இலவச போன் நம்பர்களை, ரயில் டிக்கெட்டின் பின்புறம் வெளியிட, ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. ரயில்வே கேட்டரிங் சர்வீஸ் குறித்து, பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவினாலும், ரயில்வே நிர்வாகத்திடம் புகார் செய்யப் பயணிகளிடம் தயக்கமும், சரியான வழிகாட்டுதலும் இல்லாமல் இருந்தது.  பயணிகள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க 1800 111 321 என்ற இந்தப் பத்து இலக்க இலவச தொலைபேசி எண் மூலம் பதிவு செய்யலாம். காலை ஏழு மணி முதல் இரவு பத்து மணிவரை இந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் புகாரைப் பெற்றதும், உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிடப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

 வெற்றிகரமான மூன்றாம் ஆண்டு!

அக்கம் பக்கம்

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் போலியோ பாதிப்பு இல்லை. தற்போது மூன்றாவது ஆண்டில் இந்தியா அடியெடுத்துவைத்துள்ளது. இதைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து போலியோ ஒழிப்புச் சான்றிதழை வாங்க இந்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகப் போலியோவால் ஒருவர்கூடப் பாதிக்கப்படவில்லை என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே, அந்த நாட்டுக்கு இந்தச் சான்றிதழை உலக சுகாதார நிறுவனம் அளிக்கும். அரசு எடுத்துவரும் போலியோ ஒழிப்பு நடவடிக்கைகள், அதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு ஆகியன காரணமாகப் போலியோ இல்லாத இந்தியா உருவாகிக்கொண்டு இருக்கிறது.

 அதிர்ச்சிப் புள்ளிவிவரம்!

அக்கம் பக்கம்

இந்தியாவில் 23.10 சதவிகித ஆண்களும், 22.60 சதவிகித பெண்களும் உயர் ரத்த அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதாரப் புள்ளிவிவரம் கூறுகிறது. நாட்டின் உயர் ரத்த அழுத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2030-ல் 21.4 கோடியாக அதிகரிக்கும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். உயர் ரத்த அழுத்தப் பிரச்னையைத் தவிர்க்க, கொழுப்பு, சர்க்கரை உள்ள உணவு வகைகளைச் சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உப்பு அதிகம் உள்ள ஊறுகாய், அப்பளம், சிப்ஸ் வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

அக்கம் பக்கம்

அதிக அளவில் பழங்கள், காய்கறிகள், கொழுப்பு குறைந்த பால் பொருட்களைச் சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்றும் ஆலோசனை கூறுகின்றனர்.

பின்வாங்கும் ஃபேஸ்புக்!

ஃபேஸ்புக் ஆர்வம் இளைய தலைமுறையினரிடம் குறைந்து வருகிறது என்கிறது வாஷிங்டனில் உள்ள 'வர்ஜ்’ எனும் ஆய்வு நிறுவனம். டம்ளர், ஸ்னேப் சேட், இன்ஸ்டாகிராம் போன்ற புதிய சமூகத் தளங்களுக்குத்தான் இப்போது இளைஞர்களின் ஓட்டு. வீட்டு விஷயங்கள், நாட்டு நடப்புகள், பாலிடிக்ஸ் முதல் காதல் துரோகம் வரை எல்லா விஷயங்களையும் அலசித் துவைத்த அவர்களுக்கு முகநூல் அலுத்துவிட்டதாம். இதற்கு முக்கியக் காரணம் தங்களின் ரகசியம், அந்தரங்கம் நட்பு காதல் இவை எல்லாம் பேணிக் காக்க வேண்டியவை...  கடைபரப்ப அல்ல என்கிற புரிதல்தானாம்! இப்போது எல்லாவற்றையும் மறைத்துக் காப்பதே டிரெண்ட் என வர்ஜ் நிறுவன ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.

 பாவம் திருச்சி!

தமிழகம் முழுவதுமே வெயில் பட்டையைக் கிளப்புகிறது. வழக்கமாக, வெயில் விஷயத்தில் வேலூரை அடித்துக்கொள்ள முடியாது.  ஆனால், இப்போது திருச்சியில் அனல் காற்று வீசுகிறது. அங்கு இதுவரை சராசரியாக 107 டிகிரி வெயில் காய்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகிறார்கள். திருச்சியைப் போலவே மதுரை, ஈரோட்டிலும் இதே நிலையே நீடிக்கிறது. இந்த நகரங்களுக்கு அடுத்தபடியாக அதிக வெயில் அடிக்கும் ஊர்கள் பட்டியலில் தஞ்சை, அரியலூர், சென்னை, கரூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், சேலம், புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய ஊர்கள் இடம் பெற்றிருக்கின்றன.

 போப் சொன்னா கேட்டுக்கங்க!

அக்கம் பக்கம்

''குழந்தைகள் மீது பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக உறுதியுடன் செயல்பட வேண்டும்; அத்தகைய குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்; குழந்தைகள் பாதுகாப்புக்கு அனைவருமே உதவிபுரிய வேண்டும்'' -புதிதாகத் தேர்வு செய்யப்பட்டு உள்ள போப் ஃபிரான்சிஸ் கருத்து இது. 'போப் ஆண்டவரிடம் இருந்து வெறும் கருத்துக்களை மட்டும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை; குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ எனச் சிறுவர் பாலியல் குற்றங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் 'ஸ்நாப்’ என்ற அமைப்பு கருத்துத் தெரிவித்துள்ளது.

அக்கம் பக்கம்

சுற்றுச்சூழல் பத்திரம்!

''புவி வெப்பமயமாவதால் எதிர்காலத்தில் கடல் நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் கொல்கத்தா, ஷாங்காய், தாகா, போன்ற கடலோர நகரங்களுக்கு மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது'' எனப் பிரபல விஞ்ஞானியும் சர்வதேசச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான குழுவின் தலைவருமான ஆர்.கே.பச்சோரி கூறியிருக்கிறார்.

சமீபத்தில் கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆர்.கே.பச்சோரி, ''சுற்றுச்சூழல் பாதிப்புகளால் புவி வேகமாக வெப்பமயாகி வருகிறது. இதனால், பனிப் பாறைகள் உருகி, கடல் நீர்மட்டம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடல் நீர்மட்டம் அதிகரிப்பதால், உலகெங்கும் உள்ள கடலோர நகரங்களுக்குள் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கொல்கத்தா, ஷாங்காய், தாகா போன்ற கடலோர நகரங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும்; அப்போது அந்த நகரங்களில் வாழும் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரிய அளவில் சேதம் விளையும். இந்த அபாயத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு, சர்வதேச நாடுகள் இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும்; சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதே இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு'' என பச்சோரி எச்சரிக்கிறார்.