##~## |
திருமணம் ஆனவுடன், கணவன் மனைவி இருவரும் கலந்துபேசி எப்போது குழந்தை பெற்றுக்கொள்ளாலாம் என்று திட்டமிடும் நிலை இன்று பெயரளவில்தான் இருக்கிறது. பெண்ணுக்குத் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஆவதற்குள், சுற்றமும் நட்பும் சூழ்ந்துகொண்டு, 'என்ன, இன்னும் உண்டாகலையா?’ என்று கேள்விக்கணைகளைத் தொடுத்துவிடுகின்றனர். இதுவே தம்பதிகளின் திட்டமிடுதலையும் தவிடுபொடியாக்கிவிடுகிறது.
கருத்தரிப்புக்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயம்குறித்து சென்னையின் மூத்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமமூர்த்தி பேசுகையில், 'கணவனும் மனைவியும் கலந்துபேசி, ஒரு சந்தோஷமான மனநிலையில் கர்ப்பம் தரிக்கும்போதுதான், தாயும் சேயும் நலமாக இருப்பார்கள். குடும்ப சூழ்நிலை, வேலை, டென்ஷன், கணவன்-மனைவி உடல்நலம் ஆகிய விஷயங்கள் அடிப்படையில் இந்தத் திட்டமிடல் இருக்க வேண்டும். இதன் பிறகு மகளிர் நல மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும். இதனால், குழந்தைப்பேறைத் தள்ளிப்போட நினைப்பவர்களுக்கு, தேவையற்ற கருக்கலைப்பு பிரச்னை ஏற்படாமல் தடுக்க முடியும். கருத்தரிப்பதற்கு மூன்று

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாதங்களுக்கு முன்பு இருந்தே தினமும் ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 போன்ற சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சிசுவின் வளர்ச்சிக்கு இதுபோன்ற ஊட்டச் சத்துக்கள் மிகவும் அவசியம்.
அதேபோல் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு, தைராய்டு, உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு போன்ற பரிசோதனைகள் அவசியம் செய்துகொள்ள வேண்டும். ஏதேனும் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டால், அதற்குத் தேவையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இது கருத்தரிப்பதற்கான வாய்ப்பையும், கருவில் உள்ள குழந்தை நல்ல வளர்ச்சி அடையவும் உதவியாக இருக்கும். இன்றைய வாழ்க்கைமுறை மாற்றம் காரணமாக கருத்தரிப்பதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. உடல் பருமன், ஹார்மோன் மாற்றம் போன்றவை இதற்கு முக்கியக் காரணங்கள். 40 சதவிகிதப் பெண்களுக்குச் சீரான இடைவெளியில் மாதவிலக்கு வருவது இல்லை. சில பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு, ஆறு மாதங்களுக்கு... ஏன், வருடத்துக்கு ஒரு முறைகூட மாதவிலக்கு வரும். அதுவும், ஊசி மருந்து எடுத்துக்கொண்ட பிறகு மாதவிலக்கு வரும் நிலை உள்ளது. இதனால் இவர்களுக்குக் குழந்தைப்பேறுக்கான வாய்ப்பு தடைபடுகிறது. ஆனால், இந்தப் பிரச்னையைத் தவிர்க்க முடியும். பல பெண்கள் இதை வெளியே சொல்லக் கூச்சப்படுகின்றனர். பிரச்னையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுப்பதற்குப் பதில், பிரச்னை முற்றிய நிலையில் மருத்துவமனைக்குச் செல்கின்றனர்' என்று சொல்லும் டாக்டர் நித்யா, இது தொடர்பான விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில், நம்மிடையே 15 நாட்கள் தொடர்ந்து பேச உள்ளார். காது கொடுப்போமா...
திட்டமிட்டுக் குழந்தை பெறுவதன் அவசியம், கருத்தரிப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள், செய்யக்கூடிய பரிசோதனைகள், உட்கொள்ளவேண்டிய ஊட்டச் சத்துக்கள், உணவுப் பழக்கம் என ஆக்கபூர்வக் கருத்துகளை விளக்கும் வகையில், டாக்டர் நித்யா ராமமூர்த்தி, ஏப்ரல் 16 முதல் 30-ம் தேதி வரை தொடர்ந்து 15 நாட்கள் விரிவாகப் பேச இருக்கிறார்.
- பா.பிரவீன்குமார்
படம்: ஜெ.வேங்கடராஜ்
