Published:Updated:

அழகு, ஆண்களுக்கும்தான்!

அழகு, ஆண்களுக்கும்தான்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

''பெண்களுக்குத்தான் அனுஷ்கா மாதிரி எப்போதுமே அழகாக  இருக்கணும்கிற நினைப்பு இருக்கும். ஆனால், ஆண்களுக்கு அஜித் மாதிரி அழகாக இருக்கணும்கிற நினைப்பு இருப்பது இல்லை; அழகில், அக்கறையும் கொள்வது இல்லை. இது தவறு!'' என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்கள். அழகு என்பது பெண்களுக்கானது மட்டுமே கிடையாது. ஆண்களுக்கும் அவசியம் தேவை. ஆண்களுக்கான அழகுப் பாதுகாப்புப் பற்றி இங்கே விளக்குகிறார் தஞ்சை நேச்சுரல்ஸ் அழகு நிலையத்தின் பிரபா விக்னேஷ்.

''சில ஆண்களுக்கு முகம் மட்டும் கறுப்பாக இருக்கும். இது அவர்கள் வெயிலில் தொடர்ந்து அலைந்து திரிவதால் ஏற்படுவது. காரணம் பெரும்பாலான ஆண்கள் வெயிலில் செல்லும்போது எந்தவிதமான முன்னேற்பாடுகளும் செய்துகொள்வது இல்லை. அதிகபட்சம் ஒரு கூலிங் கிளாஸ் அணிந்துகொள்வார்கள். இதனால்தான் வெயில் அவர்களை எளிதில் பாதிக்கிறது. இந்தப் பிரச்னை வராமல் தடுக்க வெயிலில் செல்லும்போது மட்டும், தவறாமல் சன் ஸ்க்ரீன் லோஷன்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னைக்கு ஆளானவர்கள், தினமும் காலையில் காய்ச்சாத பசும்பாலை முகத்தில் தடவிக்கொண்டு சில நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வந்தால் முகம் பளிச்சென மாறும். இதேபோல தேனை முகத்தில் தடவியும் செய்யலாம்.

அழகு, ஆண்களுக்கும்தான்!

நிறைய ஆண்களுக்கு அவர்களின் சருமம் எந்த வகையானது என்பதே தெரியாது. உங்களது சருமம்

அழகு, ஆண்களுக்கும்தான்!

வறட்சியானதா, எண்ணெய் பசையுள்ளதா இல்லை சாதாரண சருமமா என்பதை அழகுக் கலை நிபுணர்களை அணுகி தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு, உங்களுக்கு எந்த வகை சருமமோ... அதுக்கு ஏற்றவாறு மாதத்துக்கு ஒரு தடவை ஃபேஷியல் செய்துகொள்ள வேண்டும்.

பைக்கில் செல்லும்போது கண்களில் தூசி விழுவது சாதாரணமாக எல்லோருக்கும் நிகழ்வதுதான். இரவு படுக்கப்போகும் முன்பு கண் பாதுகாப்பு சொட்டு மருந்தை கண்களில் விட்டுக்கொண்டால், கண்கள் பாதுகாப்பாக இருக்கும். உருளைக் கிழங்கு அல்லது வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி, 10 நிமிடங்களுக்குக் கண்களை மூடிவைத்திருப்பதும் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

நகப் பராமரிப்பு விஷயத்தில் பல ஆண்கள் எல்.கே.ஜி யைக்கூடத் தாண்டுவதில்லை. நகத்தைக் கடித்தோ அல்லது விரல்களால் பிய்த்தோ எறிவார்கள். இன்னும் சிலர் நகங்களை வெட்டாமலே விட்டுவிடுவார்கள். இதுவும் தவறு. வாரம் ஒருமுறை நகவெட்டியைக்கொண்டு முறையாக நகங்களைச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். விரல்களுக்கு அழகைத்தருவது இரண்டாம்பட்சம் என்றாலும், உடலுக்கு ஆரோக்கியம் என்பதற்காகவாவது இதனைத் தவறாமல் செய்யவேண்டும். கால் நகங்களில் சேரும் அழுக்கு ஆபத்தானது. இது நகத்தையே சொத்தையாக்கிவிடும். இதைத் தவிர்க்க, சுடுதண்ணீரில் சிறுது உப்பைப் போட்டு அதில் சிறிது நேரம் கால்களை ஊறவைத்து எடுத்தால் நகங்கள் சுத்தமாகும்.

ஆண்கள் செய்யும் இன்னொரு முக்கியமான தவறு ஷேவிங் விஷயம். முடி வளரும் திசைக்கு எதிர் திசையிலோ அல்லது குறுக்கும் நெடுக்குமாகவோ ஷேவிங் செய்யாதீர்கள். இது சருமத்துக்கு ஆகாது. சிலருக்கு ஒவ்வாமையையும் ஏற்படுத்தும். முடி வளரும் திசையிலேயே ஷேவிங் செய்யுங்கள். ஷேவிங் செய்வதற்கு முன்பும் பின்பும் பயன்படுத்தக்கூடிய லோஷன்கள் தரமானதாக இருக்கவேண்டும். தரமற்ற லோஷன்கள் சருமத்தைப் பாதிக்கும்.

அழகு, ஆண்களுக்கும்தான்!

சில ஆண்களின் உடலில் ஈரப் பசையே இருக்காது. நண்பர்களுக்கு அல்லது அதிகாரிகளுக்குக் கைகொடுக்கும்போது அவர்களுக்கு இது சிறிய அளவில் உறுத்தலைத் தரும். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க தரமான மாய்ச்சரைஸர்களைத் தொடர்ந்துப் பயன்படுத்தவேண்டும். வீட்டு வேலைகளைச் செய்யும்போது பெண்கள் அடிக்கடி தண்ணீரில் புழங்குவதால் அவர்களுக்கு இந்தப் பிரச்னை இருக்காது. போதுமான அளவில் அவர்கள் உடம்பில் ஈரப் பசை கிடைத்துவிடும். ஆண்களுக்கு மட்டுமே இந்தப் பிரச்னை இருக்கும்.

முகம் கழுவும்போது முகத்தில் கைகளை மேல்நோக்கித்தான் பயன்படுத்தவேண்டும். கீழ்நோக்கித் தேய்த்து முகம் கழுவுவது நல்லதல்ல. இது கன்னம் ஒட்டிப்போவதைத் தடுக்கும்.

ஆண்கள் அழகைப் பாதிப்பதில் பெரும்பங்கு வகிப்பது தலைமுடி உதிர்வு. இதைத் தவிர்க்க வாரம் ஒருமுறையாவது தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்துகொண்டால் தலைமுடி உதிர்வைத் தடுப்பதோடு ரிலாக்ஸாகவும் இருக்கும். ஷாம்புகளைப் பயன்படுத்தாமலே இருப்பதும் தவறு. தினமும் ஷாம்பு பயன்படுத்துவதும் தவறு. வாரம் ஒருமுறை மட்டும் ஷாம்பு பயன்படுத்தவேண்டும். மிகவும் தேவையான நேரம் தவிர மற்ற நேரங்களில் தொப்பி அணியக்கூடாது. தொப்பி அணிவதால் தலைக்குள் ஏற்படும் வியர்வை, தலையிலேயேத் தங்கி முடி உதிர்வை ஏற்படுத்தும்.

அழகு, ஆண்களுக்கும்தான்!

பொடுகுப் பிரச்னை இருப்பவர்கள், இதைத் தடுப்பதற்கென இருக்கும் பிரத்யேக ஷாம்புகளை அழகுக் கலை நிபுணரின் ஆலோசனைப்படி, அவர் குறிப்பிடும் காலம்வரை பயன்படுத்தவேண்டும். தினமும் பயன்படுத்தக்கூடாது. சலூன்களில் பொடுகைத் தடுப்பதற்கு எனச் சிகிச்சை முறைகள் செய்வது உண்டு. அதை எடுத்துக்கொள்ளலாம். இல்லை என்றால் தயிரைத் தலையில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்துப் பிறகு குளித்தால் நல்லது. பொடுகுப் பிரச்னையைக் கவனிக்காமல் இருந்தால், பொடுகானது காது மடல்களிலோ பின் கழுத்திலோ, அல்லது மற்ற இடங்களிலோ படிந்து சோரியாஸிஸ் தோன்ற வாய்ப்பு உண்டு. எனவே பொடுகு விஷயத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். பொடுகு பிரச்னை இருப்பவர்கள் சூடான எண்ணெய்க் குளியல் எடுத்துக்கொள்ளவேண்டாம்.

சில ஆண்களுக்கு உதடு கறுத்து இருக்கும். அவர்கள் கொத்தமல்லிச் சாறை உதட்டில் பூசி சிறிதுநேரம் கழித்து கழுவ வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்துவந்தால் உதடு கறுப்பு மாறும். தினமும் தவறாமல் இரவு படுக்கப்போகும் முன்பு முகம் கழுவிவிட்டு படுக்கச் செல்லவேண்டும்.

இதைப் படித்து முடித்ததும் 'அட நமக்கு எதுக்குப்பா இதெல்லாம்’ என நினைக்கிறீங்களா? திரும்ப முதல் பத்தியைப் படியுங்கள். படித்து முடித்ததும் மேற்சொன்ன ஆலோசனைகளை பின்பற்றுங்கள். பிறகென்ன? பெண்கள் உங்களை 'ஹாய் ஹேண்ட்சம்... ஹாய் ஹேண்ட்சம்’ என்று சுத்தி வருவார்கள்

- உ.அருண்குமார்

படம்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு