Published:Updated:

240 கிலோ எடை 107 கிலோவானது எப்படி?

240 கிலோ எடை 107 கிலோவானது எப்படி?

பிரீமியம் ஸ்டோரி
##~##

க்கிய அரபு எமிரேட்டைச் சேர்ந்தவர் அப்ஃகர் அலி. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய அவரை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது. காரணம், அவரது எடை 240 கிலோ. ஒருவழியாக அவரை ஏற்றிக்கொண்டு விமானம் இந்தியாவுக்கு வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக அவருக்கு உடல் எடைக் குறைப்பு அறுவை சிகிச்சை செய்யத் தயாராகினர். அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. இப்போது அவரது எடை 107 கிலோ. கிட்டத்தட்ட 130 கிலோ எடை குறைந்திருக்கிறது. அறுவை சிகிச்சைக்கு முன்பு அவருக்கு இல்லாத உடல் பிரச்னைகளே இல்லை. எழுந்து நடக்க முடியாமல் அவதிப்பட்டுவந்தார். தற்போது மற்றவர்களைப் போல எழுந்து நடக்கிறார். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. மூட்டுப் பிரச்னைகள் குறைந்துள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து உடல் எடையைக் குறைத்த கோவை அனுராக் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஜான் தனக்குமார் கூறுகையில், ''இந்தியாவில் ஐந்து சதவிகித மக்கள் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். வளர்ந்த நாடுகளில் உடல் பருமன் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்து உள்ளது. அந்த அளவுக்கு உடல் பருமன் பிரச்னையை நாம் அணுகுவது இல்லை. பசி, வறுமை, ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்னை உள்ள நம்நாடுதான் இதய நோய்கள், சர்க்கரை நோயின் தலைநகராக விளங்குகிறது.

240 கிலோ எடை 107 கிலோவானது எப்படி?
240 கிலோ எடை 107 கிலோவானது எப்படி?

கொழுகொழு என்று இருப்பது ஆரோக்கியமானது என்று பலரும் தவறாக நினைக்கின்றனர். உடல் பருமனால் டைப்-2 சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், மாரடைப்பு, ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவது, மூட்டு வலிகள், எலும்பு முறிவு போன்ற பிரச்னைகள் ஏற்படும். மேலும் தூங்குவதில் ஏற்படும் பிரச்னை காரணமாக மூளைக்கு ரத்தம் செல்வது பாதிக்கப்பட்டு அதனால் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. உடல் பருமனானவர்களுக்குப் புற்றுநோய்க்கான வாய்ப்பும் அதிகம். குழந்தைப் பெறுவதிலும் பிரச்னைதான். கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிவதால் கல்லீரல் செயல் இழப்பு, கல்லீரல் சுருக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இது தவிர, மனஅழுத்தம் போன்ற உளவியல் பிரச்னைகளும் அதிகரிக்கும்.

உடல் பருமன் பிரச்னையைத் தவிர்க்க முடியும். இதற்கு உணவு, உடல் பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையில் சிறிய மாற்றம் செய்தாலே போதுமானது. தென்னிந்தியர்கள் அதிக அளவில் கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகள் மற்றும் எண்ணெயை அதிகம் சேர்த்துக்கொள்கிறோம்.

240 கிலோ எடை 107 கிலோவானது எப்படி?

ஆனால், உணவில் அதிக அளவில் புரதச் சத்தும் குறைந்த அளவில் கார்போஹைட்ரேட்டும், மிகமிகக் குறைந்த அளவில் கொழுப்பும் இருக்க வேண்டும். எனவே, உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள், வழக்கமாக எடுத்துக்கொள்ளும் உணவில், 600 கலோரிகளாவது குறைத்துக்கொள்ள வேண்டும். துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்த்து ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மிகக் குறைந்த அளவு கலோரி உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு காலை உணவாக ஓட்ஸ், குறைந்த கலோரி பிஸ்கட் 2, மதியத்துக்கு எண்ணெய் சேர்க்காத சப்பாத்தி மற்றும் பச்சைக் காய்கறி, மாலையில் கலோரி குறைந்த ஏதாவது ஒரு உணவு, இரவு உணவுக்குப் பிறகு ஏதாவது ஒரு பழம் (வாழை, மாம்பழம் தவிர்த்து), அதிக அளவில் தண்ணீர் பருகுவது என இருந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

உடல் பருமன் அளவு குறிப்பிட்ட பி.எம்.ஐ. அளவைத் தாண்டும்போது அவர்களுக்கு பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை லேப்ராஸ்கோபி கருவியைப் பயன்படுத்தியோ அல்லது ஓப்பன் சர்ஜரி முறையிலோ செய்யப்படும். மூன்று துளை மற்றும் ஒரு துளை லேப்ராஸ்கோபி சிகிச்சை முறைகள் உள்ளன. ஒரு துளை லேப்ராஸ்கோபியில் அறுவைசிகிச்சை செய்யும்போது தழும்புகள் வெளியே தெரியாது. தொப்புளில் துவாரம் இட்டு அதன்வழியே கருவிகள் செலுத்தி அறுவை சிகிச்சை செய்யப்படும். உடல் எடைக் குறைப்பு அறுவை சிகிச்சைகளில் லேப் பேண்ட் (Lap Band), லேப் ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி (Lap Sleeve Gastrectomy) மற்றும் லேப் கேஸ்ட்ரிக் பைபாஸ் (Lap Gastric Bypass)  என மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.

தற்போது பெரும்பாலும், ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றன. இந்த சிகிச்சையின்போது, இரைப்பையின் அளவை உணவுக் குழாய் அளவுக்குச் சுருக்கிவிடுவோம். பொதுவாக இரைப்பை 60 முதல் 100 மி.லி. அளவு உணவை எடுக்கும். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு உணவு எடுத்துக்கொள்ளும் அளவு 30 மி.லி. முதல் 50 மி.லி. வரையே இருக்கும். மேலும் வயிற்றில் பசியை உண்டாக்கும் க்ரிலின் என்ற ஹார்மோன் சுரப்பையும் அகற்றிவிடுவோம். இதனால் பசி குறைந்துவிடும். இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வதால் உடல் பருமன் காரணமாக ஏற்படும் உயிர் இழப்பை 29 சதவிகிதம் வரை குறைக்க முடியும்'' என்றார் விளக்கமாக.

பருமன் குறைப்போம்... படிப்படியாக!

- பா.பிரவீன்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு