பிரீமியம் ஸ்டோரி

சபாஷ் சவூதி!

அக்கம் பக்கம்

 உடற்பயிற்சி மற்றும் ஸ்பா சிகிச்சைகளின் மூலம் தீவிரவாதிகளையும் மிதவாதிகளாக மாற்ற முடியும் என சவூதி அரேபிய அரசு களத்தில் இறங்கி உள்ளது. சவூதி அரேபிய சிறைகளில் இருக்கும் தீவிரவாதிகளான அல்கொய்தா உறுப்பினர்களுக்காக, ஆடம்பரமான மறுவாழ்வு மையத்தை அந்த நாட்டு அரசு நிறுவி உள்ளது. அல்கொய்தா உறுப்பினர்களுடன் கலந்தாய்வு செய்வதன்மூலமும், அதிக உடற்பயிற்சி மற்றும் ஸ்பா சிகிச்சைகள் மூலமும், தீவிர மதவாதிகளான இவர்களை மிதவாதிகளாக மாற்ற முடியும் என்பது சவூதி அரசின் நம்பிக்கை. ஏழு வருடங்களுக்கு முன், உள்நாட்டு அல்கொய்தா தீவிரவாதிகளைத் திருத்துவதற்காக, சவூதி இளவரசர் முகம்மதுபின் நயெப் என்பவரால் உருவாக்கப்பட்டது இந்தத் திட்டம். இந்த மையத்தில் உள்ள மிகப் பெரிய நீச்சல் குளம், நீராவிக் குளியல், உடற்பயிற்சி அரங்கம், தொலைக்காட்சி அரங்கம் ஆகியவற்றில் தீவிரவாதிகள் தங்கள் நேரத்தைச் செலவழிப்பதன் மூலம் மனம் மாறுவார்கள் என அந்த நாட்டு அரசு எதிர்பார்க்கிறது. இதேபோல மேலும் மூன்று மையங்களை நிறுவுவதற்கான மும்முரத்தில் இறங்கியிருக்கிறது சவூதி அரசு.

முக்கிய முகாம்!

கிராமப்புற குழந்தைகளுக்கு ஏதேனும் பிறவிக் குறைபாடு உள்ளதா எனக் கண்டறியும் முகாம் மே 3-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடக்க உள்ளது. தமிழக சுகாதாரத் துறை சார்பில் இந்த முகாம் நடக்கிறது என்கிறார் மருத்துவ சேவைகள் துணை இயக்குநர்          ஆர்.தாமோதரன். 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்தப் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வில் குழந்தைகளுக்கு ஏதேனும் குறைபாடு கண்டறிப்பட்டால் அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியார் மருத்துவமனைகளிலோ அரசு காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 2.2 சதவிகிதம் பேர் பிறவிக் குறைபாடுகளால் அவதிப்படுகின்றனராம்!

அக்கம் பக்கம்

குறைப் பிரசவம் ஒரு குறை அல்ல!

டெல்லியில் நான்கு மாதக் குறைப் பிரசவத்தில் பிறந்த ஒரு குழந்தையை மூன்று மாதத் தீவிர மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு, காப்பாற்றி இருக்கின்றனர் மருத்துவர்கள். டெல்லியில் வாழும் பிங்கி சவுத்ரி என்ற 29 வயதுப் பெண் ஆறு மாத கர்ப்பிணி. இவர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கருச்சிதைவு ஏற்பட்டு, அதன் பின்னர் தற்போது கருத்தரித்த அவருக்கு சிகிச்சையின்போது பிரசவ வலியும் உண்டானது. கருத்தரித்த 23-வது வாரத்திலேயே அவருக்கு 500 கிராம் எடை உள்ள பெண் குழந்தை பிறந்தது. உடல் முழுவதும் ரத்தத் தேமல், உணவு ஒவ்வாமை, நுரையீரல் நோய்த் தொற்று உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்கு ஆளான அந்தக் குழந்தையை, 12 வாரங்களாக 'இன்குபேட்டர்’ கருவியில் வைத்து டாக்டர்கள் பராமரித்துவந்தனர். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சையால் தற்போது அந்தக் குழந்தை எல்லா நோய்களின் தாக்கத்தில் இருந்தும் மீண்டு உள்ளது. பிறந்தபோது இருந்த உடல் எடை தற்போது இரட்டிப்பாகி உள்ளது. குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு உண்டாகும் மூளை மற்றும் இதர உறுப்புகளின் பாதிப்பு ஏதுமின்றி சராசரி குழந்தையாக அது வளர்ந்துவருகிறது எனக் குழந்தைக்குச் சிகிச்சை அளித்த டாக்டர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

 காசு... கவலை... கண்கள்!

பார்வையற்றவர்கள் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் போனை அகமதாபாத்தைச் சேர்ந்தவர் கண்டுபிடித்துள்ள நேரத்தில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நாணயம் தங்களுக்குச் சிரமமாக உள்ளதாகப் பார்வையற்றவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். ரிசர்வ் வங்கி 2011-ம் ஆண்டு வெளியிட்ட புதிய 50 காசு, ஒன்று, இரண்டு மற்றும் ஐந்து ரூபாய் நாணயத்தின் வடிவம் மற்றும் அளவு போன்றவை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளதால் பார்வையற்றவர்களால் அதை எளிதில் தெரிந்துகொள்ள முடிவதில்லை. கையில் வைத்திருக்கும் நாணயம் எவ்வளவு மதிப்புகொண்டது என்பதைத் தெரிந்துகொள்ளக்கூட மற்றவர்களின் உதவியை நாட வேண்டியுள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கைவிடுத்தும் எந்தப் பதிலும் இல்லை. நாணயங்களின் வடிவமைப்பை மாற்ற

அக்கம் பக்கம்

வேண்டும் என்று பார்வையற்றவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறியலாம் ஆட்டிசத்தை!

அமெரிக்கா மற்றும் கனடா நாட்டுப் பல்கலைக்கழகங்களின் மூளை நரம்பியல் விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாட்டை கண்டறியும் புதிய வழியைக் கண்டறிந்து உள்ளனர். மூளையின் செயல்பாட்டை வைத்து இந்தப் புதிய முறையில் ஆட்டிசம் பிரச்னை உள்ள குழந்தையும், சாதாரண குழந்தையையும் எளிதில் வேறுபடுத்தி கண்டறிய முடியும் என்கிறார் இந்த ஆராய்ச்சிக்குத் தலைவராக இருக்கும் காலன். ஒன்பது ஆட்டிசம் குழந்தைகள் மற்றும் 10 சாதாரண குழந்தைகளிடம் இது தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சியில் 141 மூளையின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, ஒவ்வொரு செயல்பாடும் எப்படி மற்ற குழந்தைகளுக்கு வேறுபடுகிறது என்று கண்டறிந்து, இந்தப் புதிய வழியைக் கண்டறிந்ததாக அவர் தெரிவிக்கிறார். இந்தப் புதிய முறையானது 94 சதவிகிதம் வரை நம்பகத்தன்மைகொண்டது என்கிறார்.

அக்கம் பக்கம்

காதுகொடுங்க பாஸ்..!

காது கேளாதவர்களும் இனி செல்போனில் பேசலாம். அதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிவனேஷ், வேலரசன் மற்றும் செல்வராஜ் ஆகியோர். எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் படிப்பின் இறுதி ஆண்டு புராஜெக்டாக இவர்கள் கண்டறிந்து உள்ள இந்தக் கருவி மூலம், மறுமுனையில் பேசுபவரின் பேச்சை உணர முடிவதோடு அல்லாமல், நம்மைப் போலவே காது கேளாதவர்கள் பொழுதுபோக்காகப் பாடல்களைக் கேட்டும் ரசிக்கவும் முடியும். ஹெட்போன் போன்று இருக்கும் இந்தக் கருவியில் பிரத்யேகமாக இணைக்கப்பட்டிருக்கும் மோட்டாரில்தான் இருக்கிறது சங்கதி. ஹெட்போனை மொபைலுடன் இணைத்துப் பேசும்போது மோட்டாரின் அதிர்வினைப் பயன்படுத்தி மறுமுனையில் பேசுபவரின் பேச்சைக் கேட்க முடியும் என்பதே இதன் செயல்பாடு. மூக்கு, தொண்டை, காது போன்றவை ஒரே நரம்பால் பிணைக்கப்பட்டு இருப்பதால், இவை எல்லாவற்றையும் இணைக்கும் பாலமாக பற்கள் இருக்கும். ஹெட்போனில் இருக்கும் நீண்ட குச்சி போன்ற அமைப்பு பேசும்போது, தொடர்ந்து பற்களில் பட்டு அதிர்வினை ஏற்படுத்தி, காது கேளாதவர்கள் உணர உதவி செய்கிறது!

அக்கம் பக்கம்

விஷக் கடிதம்!

அமெரிக்காவில் விஷமிகள் சிலர், விஷம் தடவிய கடிதம் அனுப்பி தலைவர்களைப் பீதிக்கு உள்ளாக்கி வருகின்றனர். முதலில் அமெரிக்க செனட் உறுப்பினருக்கு விஷம் தடவிய கடிதம் வந்திருக்கிறது. அதற்கு மறுநாளே, அதிபர் ஒபாமாவுக்கும் அத்தகைய கடிதம் வந்துள்ளதால் அமெரிக்காவே பீதியில் நடுங்கி இருக்கிறது. முதல்கட்ட சோதனையில், அந்தக் கடிதத்தில் 'ரைசின்’ என்ற கொடிய விஷம் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்திருக்கிறது. இந்தக் கடிதத்தைக் கையாளும்போது, எந்த வகையிலாவது வாயில் பட்டுவிட்டால், உயிரைக் குடிக்கும் அபாயம், இந்த விஷத்துக்கு இருக்கிறதாம். இத்தகைய கொடிய விஷத்தை அனுப்பியது யார் என்று எஃப்.பி.ஐ. தீவிர விசாரணையில் இறங்கி உள்ளது. அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் குண்டு வெடிப்பு நடந்து மூன்று பேர் பலியான ஓரிரு நாளில் அடுத்தடுத்து இந்தக் கடிதங்கள் வந்திருப்பதால், அந்த நாட்டுத் தலைவர்கள் வசிக்கும் பகுதிகள் தீவிரக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு அமெரிக்காவில், கடந்த 2001-ம் ஆண்டு, கடிதங்களில் 'ஆந்த்ராக்ஸ்'' கிருமிகளை அனுப்பிவைத்து தீவிரவாதிகள் பீதி உண்டாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது!

பெட் வெட்டிங்!

ஆரோக்கியமான உணவுப் பழக்கம்தான் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அடிப்படை. அதில் குறைபாடு ஏற்படும்போது 'பெட் வெட்டிங்’ போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. குழந்தைக்குக் கொடுக்கும் உணவில் சரிவிகித சத்துகள் அவசியம். மூளை வளர்ச்சி அடைய, ஐந்து வயது வரை கொழுப்புச் சத்துள்ள உணவுகளை அடிக்கடிச் சேர்க்க வேண்டும். உணவின் மூலமே பெட் வெட்டிங் பிரச்னையைச் சரிசெய்ய முடியும். காலை உணவைத் தவிர்க்கும் குழந்தையால் மாலை வரை எந்த விஷயத்தையும் சரியாகச் செய்ய முடியாது. அதிக காரமான உணவுகள்,  அமிலத்தன்மை உள்ள உணவுகள், 'கஃபைன்’ கலந்த சாக்லேட், காபி போன்றவற்றால் சிறுநீர்ப் பையில் எரிச்சல் உண்டாகும். இதனால் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படும். இரண்டு வயதுக்குமேல் இரவில் பால் குடிப்பதைத் தவிர்த்துவிடலாம். படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக உணவு கொடுத்துவிட வேண்டும். உணவில் உப்பின் அளவு குறைத்தல், கால்சியத்தின் அளவு அதிகரித்தல், எடை அதிகமாக இருத்தல் போன்ற காரணங்களாலும் குழந்தைக்குப் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்னை ஏற்படலாம். 'ஒமேகா த்ரீ ஃபேட்டி ஆசிட்ஸ்’ உள்ள உணவுகளைச் சாப்பிடுவதால் இதைத் தடுக்கலாம்.

அக்கம் பக்கம்

தமிழ்நாடும் முயற்சிக்கலாம்!

கிராமப்புற மக்களுக்கு முறையான நவீன மருத்துவச் சேவைகள் கிடைப்பது இல்லை. இந்தப் பிரச்னையைப் போக்க பிரத்யேக மருத்துவப் படிப்பு, கட்டாய மருத்துவ சேவை என அரசு எடுக்கும் முயற்சிகள் எல்லாம் தடைபடுகின்றன. இந்த நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த இஹெல்த்ஆக்சஸ் என்ற நிறுவனம் டெலிமெடிசின் துறையில் புதுமையை மேற்கொண்டுள்ளது. ஒரு கம்ப்யூட்டர், தடையில்லா எட்டு மணி நேர மின்சாரம் மேற்பார்வைக்கு ஒருவர் இருந்தால்போதும், ஒவ்வொரு கிராமத்திலும் டாக்டர் இருப்பார் என்கிறார் இந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் ராம்பிரபு. வழக்கமாக மருத்துவமனைக்குச் செல்லும்போது நோயாளியிடம் விவரங்கள் கேட்டுவிட்டு அவரது, உடல் வெப்பநிலை, இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றை டாக்டர் பரிசோதிப்பார். இதிலும் அத்தனையும் நடக்கிறது. ஆனால், தொலைமருத்துவம் மூலம் நாட்டில் எங்கேயே இருக்கும் மருத்துவர் இதை செய்து மாத்திரை - மருந்தைப் பரிந்துரைக்கிறார். சமீபத்தில் குஜராத் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இவர்கள் மேற்கொண்ட பரிசோதனை முறையிலான திட்டத்துக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் கிடைத்துள்ளன. இந்த மாநில அரசுகள்  இந்தப் புதிய முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்த மாநில அரசுகள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஆர்வம் கொண்டுள்ளன. தமிழ்நாடும் முயற்சிக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு