Published:Updated:

வெயிலை விரட்டும் வெள்ளரி!

வெயிலை விரட்டும் வெள்ளரி!

பிரீமியம் ஸ்டோரி
##~##

வெயில் வந்தாலே வெள்ளரியும் வந்துவிடும். சூரியக் கதிர்களின் தாக்குதலில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள இயற்கை அளித்த மற்றுமொரு வரப்பிரசாதம் வெள்ளரி. 

''வெள்ளரியின் முக்கியப் பலனே உடலுக்குக் குளிர்ச்சி ஊட்டுவதுதான். காய், இலை, விதை என இதன் அனைத்து பகுதிகளும் மருத்துவக் குணம் வாய்ந்த வெள்ளரியை 'ஏழைகளின் ஆப்பிள்’ என்றுகூடச் சொல்லலாம்'' என்று சிலாகிக்கும் உடுமலைப்பேட்டை அரசு சித்த மருத்துவர் வி.லட்சுமிபதி ராஜ், வெள்ளரிகுறித்து மேலும் விரிவாகப் பேசுகிறார்.

''நீர் தொடர்பான அனைத்து லேகியங்களிலும் வெள்ளரிக்காயின் பங்கு முக்கியமானது. நா வறட்சியைப் போக்கும். சிறுநீரகக் கோளாறைச் சரி செய்யும். புற்றுநோயைப் போக்கக்கூடிய லாரிசி ரேசினால் (Lariciresino), பைநோ ரேசினால்(Pinoresinol), சீகோஐ சொலாரிசிரெசினால் (Secoisolariciresinol)  இதில் காணப்படுவதனால் கேன்சரைக் குணப்படுத்தத் தயாரிக்கப்படும் மருந்துகளில் இதன் பங்கு மிகுதியாக உள்ளது. குறிப்பாக, மார்பகப் புற்றுநோய், கர்ப்பபைப் புற்றுநோய், புராஸ்டேட் புற்றுநோய் (விந்து நாளச்சுரப்பி) போன்றவற்றுக்குச் சிறந்த மருந்து. புகைப் பிடிப்போரின் குடலைச் சீரழிக்கும் நிக்கோடின் என்ற நஞ்சை அழிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. இயற்கையாகவே வெள்ளரியில் சிலிகான், கந்தகம் போன்றவை மிகுதியாக இருப்பதால் தோல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் தீர்க்க வல்லது.

வெயிலை விரட்டும் வெள்ளரி!

பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்று வலியையும், வெள்ளைப் படுதலையும்

வெயிலை விரட்டும் வெள்ளரி!

குணப்படுத்தக்கூடிய ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. இதில் கலோரி குறைவாக இருப்பதால் உடல் பருமனைக் குறைக்கவும் உதவுகிறது. வெள்ளரியின் இலையைச் சீரகத்துடன் கலந்து காயவைத்து வறுத்துப் பொடி செய்து தினம் மூன்று வேளையும் ஒரு சிட்டிகைச் சாப்பிட்டு வர, தொண்டையில் ஏற்படும் தொற்று, கரகரப்பு, கட்டிகள் போன்றவை குணமடையும். குரல் வளம் பெருகும். வெள்ளரிச் சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்து குடித்துவர, உடல் ஊட்டம் பெறும். தினமும் குடிக்கும் டீ, காபி மற்றும் ஜூஸுடன் சேர்த்து ஒரு துண்டு வெள்ளரியைப் போட்டு குடிக்கலாம்.

வெள்ளரி இலையைச் சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீர் அடைப்பு, சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் கடுப்பு ஆகியவை குணமாகும். சிறுநீரைப் பெருக்கும். இதன் இலை வாய் துர்நாற்றத்தைப் போக்கி புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். மாலை நேரங்களில் தொடர்ந்து வெள்ளரியைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் (Constipation) பிரச்னை முற்றிலும் நீங்கும். வெள்ளரி விதையை வறுத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டால் சிறுநீரகக் கல் கரையும். இளநீருடன் வெள்ளரித் துண்டுகளைக் கலந்து சாப்பிட வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

வெயிலை விரட்டும் வெள்ளரி!

வெள்ளரியை அரைத்து இதனுடன் முட்டையின் வெள்ளைக் கரு, கற்றாழை சேர்த்து தலையில் தேய்த்துக் குளித்தால் முடி பஞ்சு போன்று பளபளபாக இருக்கும். அதிக நேரம் கம்ப்யூட்டர், டி.வி-யைப் பார்ப்பதால் ஏற்படும் கண் எரிச்சல் போக்க, வெள்ளரித் துண்டுகளைக் கண் இமைகளின் மீது சிறிது நேரம் வைத்திருந்தால் கண்களின் அயர்ச்சி நீங்கி, புத்துணர்வு ஏற்படும். தினமும் தொடர்ந்து இப்படிச் செய்து வர,       கண்களின் கீழ் கருவளையம் உண்டாகாது. ஈறுகளில் வெள்ளரிக்காயைத் தேய்த்தால் ஈறு வலுப்பெறும். வாய்த் துர்நாற்றம் நீங்கும். தினமும் இரவு ஒரு வெள்ளரிக்காயை உண்டு வந்தால், காலைவேளைகளில் ஏற்படும் தலைவலி, தலைச்சுற்றல் குணமாகும். சீரான ஜீரணம், உடல் எடைக் குறைப்பு, நீரிழிவு நோய், மூட்டுவலி, ஆர்த்தரைட்டிஸ்  போன்றவற்றுக்கு காரட் ஜூஸுடன் வெள்ளரியை நறுக்கி கலந்து அருந்தலாம்.

வெள்ளரியைப் பச்சையாகவோ காய்கறிகளுடன் சேர்த்தோ உண்ணலாம். பச்சடி, சாலட் செய்து வைத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.'' என வெள்ளரியின் நற்குணங்களைப் பட்டியல் போட்ட சித்த மருத்துவர் வி.லட்சுமிபதி ராஜ், ''சளி, இருமல் இருந்தால் வெள்ளரிக்காய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்'' என்கிறார் அக்கறையுடன்.

- கி.விக்னேஷ்வரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு