நலம், நலம் அறிய ஆவல்!

'மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
##~## |
ஊறுபாடு இல்லை உயிர்க்கு’
'உடலோடு மாறுபடாத உணவினை அளவோடு உண்பவரது உயிருக்கு நோயால் துன்பம் உண்டாகாது’ என்பது வள்ளுவரின் வாக்கு. ஆனால், இன்றைய வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கமும் பலவிதமான பிரச்னைகளையும் வியாதிகளையும் அழையா விருந்தாளியாக இழுத்துக்கொண்டு மருத்துவமனைகளில் தங்கவைத்துவிடுகிறது.
நாம் உண்ணும் உணவை எவ்வளவு கவனமாகவும் அக்கறையாகவும் சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றிய புரிதல் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். 'வெந்ததைத் தின்று வேளை வந்தால் போகவேண்டியதுதான்’ என்று நினைக்காமல் உடலை நோயின்றிப் பத்திரமாகப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. சரியான உணவினைத் தேர்ந்தெடுத்து ஆரோக்கியத்தைப் பேணுவது எப்படி என்பதையும், தவிர்க்க முடியாமல் வந்துவிட்ட சில நோய்களைச் சமாளித்து சோர்வின்றி இருப்பது எப்படி என்பதையும் பற்றி விளக்குகிறார் மூத்த ஊட்டச்சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தி.

சர்க்கரை நோயாளிகளுக்கு டயட்தான் மிகவும் முக்கியம். வாக்கிங், உணவுக்கட்டுப்பாடு மூலம் சர்க்கரையின் அளவைக் குறைக்க முடியும். சரியான நேரத்தில் சாப்பிடுவது மிகவும் அவசியம். உடலின் எடைக்கு ஏற்ப உணவில் எவ்வளவு கலோரிகள் இருக்கலாம் என்று தெரிந்து வைத்துக்கொள்வது சர்க்கரைக் குறைபாடு உள்ளவர்களுக்கு வசதியாக இருக்கும்.
உணவின் மூலமே உடல் பருமனைக் குறைக்கலாம். உடல் பருமனைக் குறைப்பதற்கான உணவுப் பழக்கங்களைக் கடைபிடிக்காமல்போனால், உடலில் வியாதிகள் பெருகிவிடும். நம்முடைய உயரத்துக்கு ஏற்றபடி உடல் எடை இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ற டயட்டை கடைபிடித்து கலோரிகளைக் குறைக்க வேண்டும். அதேசமயம் மிகவும் ஒல்லியாக இருப்பவர்கள் உடல் எடை அதிகரிக்க தினமும் கொழுப்பு, மாவுச் சத்து மற்றும் புரதச் சத்தை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வெயிலையும், அதனால்வரும் வியாதிகளையும் உணவு முறையில் எதிர்கொள்ளலாம். கடுமையான கோடையில் உணவு சாப்பிடவே பிடிக்காது. நீராகாரமாகச் சாப்பிடத் தோன்றும். ஆனால், நம் உடலுக்குச் சமச்சீரான சத்து தேவை. சரியான உணவைச் சாப்பிட்டால்தான் சத்துக்கள் இழப்பு ஏற்படாமல், சோர்வில்லாமல் கோடையை வெல்ல முடியும். ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட்ஸ் வகைகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் என்ன ஆகும்... அதை எப்படித் தவிர்ப்பது... என்றும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
முதுமையைக்கூட சந்தோஷமாகப் பாவித்து ஆரோக்கியமாக நோயின்றி வாழ்வாங்கு வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள். ஆனால், இன்று 40 வயதாகும்போதே படித்தப் பட்டம்போல் ஒவ்வொருவருக்கும் வியாதிகளின் பட்டியல் அதிகம் இருக்கின்றன. இதற்கு என்ன தீர்வு? வரும்முன் காப்போம் என்ற புரிதலே அருமருந்து. சரியான உணவுப் பழக்கத்தால் எல்லாவிதமான பிரச்னைகளையும் சமாளிக்க முடியும்.
தினமும் நம் உடலுக்குச் சேர வேண்டிய ஊட்டச்சத்துகள், உணவுப் பழக்கம் எந்த வகையில் இருக்கவேண்டும் போன்ற செறிவான கருத்துக்களை டாக்டர் விகடன் வாசகர்களுக்கு விளக்கும் வகையில், மூத்த ஊட்டச்சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தி மே 1 முதல் 15 - ம் தேதி வரை தொடர்ந்து 15 நாட்கள் விரிவாகப் பேச இருக்கிறார்.
- உமா ஷக்தி
படம்: ரா.மூகாம்பிகை

என்ற எண்ணுக்கு போன் செய்தால், சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு முறையில் ஆரம்பித்து வெயில் காலத்துக்கு ஏற்ற உணவுகள் என்னென்ன என்பதுவரை விவரமாகப் பேசுகிறார்
ஊட்டச்சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தி.
சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு முறைகள் என்னென்ன?
உடல் பருமனைக் குறைக்கும் உணவுகள் என்னென்ன?
ஒல்லியானவர்கள் உடல் எடையை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?

சமையலுக்கு ஏற்ற எண்ணெய் எது?
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்த வகையான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும்?
முதியோர்களுக்கான டயட் எது?
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற உணவுமுறை எது?
பாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட்ஸ் அதிகமாகச் சாப்பிடும் போது என்ன பிரச்னைகள் வரும்?
காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு என்ன பலன் கிடைக்கும்?