Election bannerElection banner
Published:Updated:

மேக்அப் மிஸ்டேக்ஸ்...

மேக்அப் மிஸ்டேக்ஸ்...

##~##

''இப்போதெல்லாம் கிராமங்களில் எண்ணெய் வடியும் முகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஷாம்பூ போட்ட சுருள் முடி, முகத்துக்கு க்ரீம், கண்ணுக்கு காஜல் என எங்கு பார்த்தாலும், பெண்களைப் பளிச்செனப் பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு கிராமத்துப் பெண்களிடமும் மேக்கப் ஆசை அதிகரித்துவிட்டது. தெருவுக்கு நான்கு பியூட்டி பார்லர்கள், அழகுசாதனப் பொருட்கள் இல்லாத கடைகளே இல்லை. 

அழகு சாதனப் பொருட்களை எந்த அளவுக்கு, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் சிலர் செய்யும் சில தவறுகளால், அவர்களது சருமம் பாழாகிவிடும். இளம் வயதிலேயே முதுமைத் தோற்றத்தைக் காட்டிவிடும்.’ - அழகுக்கலை நிபுணர் ரூபி ரேகாவின் ஆதங்கம் இது.

'ஒவ்வொருவருக்கும் சருமத்தின் தன்மை வேறுபடும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான தீர்வுகளைத் தர முடியாது. ஒவ்வொருவரும் தங்களின் சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். அதற்கேற்ப, அழகுக்கலை நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றே, அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்'' என்றவர், மேக்அப் செய்யும்போது கவனிக்க வேண்டிய அழகுக் குறிப்புகளை அடுக்கினார்.

மேக்அப் மிஸ்டேக்ஸ்...

  சருமத்துக்கு ஏற்ற ஃபவுண்டேஷனைத் தேர்ந்தெடுக்காமல் போனால், முகம் ஒரு நிறத்திலும், கழுத்து ஒரு நிறத்திலும் இருக்கும். சிலர் தங்கள் சருமத்தைவிடப் பல மடங்கு வெளிர் நிறத்தில் உள்ள

மேக்அப் மிஸ்டேக்ஸ்...

ஃபவுண்டேஷனைப் பயன்படுத்துவார்கள். இதுவும் முகத்தை வித்தியாசமாகக் காட்டும். தொடர்ந்து முகத்தில் ஃபவுண்டேஷன் அதிகமாகப் பயன்படுத்தினாலோ அல்லது திடீரெனப் பயன்படுத்தாமல் விட்டாலோ, அது பார்ப்பதற்கு ஒருவித முதுமைத் தோற்றத்தைத் தந்துவிடும். மிக மெல்லிய லேயர் ஃபவுண்டேஷன் போட்டாலே போதுமானது.

  ஃபவுண்டேஷன் பயன்படுத்த விரும்பாதவர்கள், வறட்சியான சருமம் கொண்டவர்கள் தினமும் மாய்ஸ்ச்சுரைசர் தடவ வேண்டும். இல்லை எனில், அதுவே முகத்தை முதிர்ச்சியாகக் காட்டும். சருமம் எப்போதும் வறண்டுபோகாமல் ஈரப்பசையுடன் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

  ஃபவுண்டேஷன் பயன்படுத்திய பிறகு முகத்துக்குப் பவுடர் போட்டால், மேக்அப் நீண்ட நேரத்துக்குக் கலையாமல் இருக்கும். இதற்கென உள்ள காம்பாக்ட் பவுடர்களைப் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக பவுடர் பயன்படுத்தும்போது, கண்களுக்கு அருகில் பவுடர் போடும்போது அது சருமத்தில் சுருக்கத்தை ஏற்படுத்தலாம்.

  சிலர் தங்கள் கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையம் மற்றும் முகப்பருவை மறைக்கிறேன் என்று அந்த இடத்தில் அதிகமாக மேக்அப் செய்வார்கள். மேக்அப் போடுவதால் கருவளையம் மறையாது. எதனால் கருவளையம் ஏற்பட்டது என்று தோல் நோய் சிகிச்சை நிபுணர் அல்லது அழகுக்கலை நிபுணரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுவது நல்லது.

  காலையில் போட்ட மேக்அப் மாலை வரை அப்படியே இருக்க வேண்டும் என்பதற்காக, மேக்கப் சிறிது கலைந்தாலும்கூட உடனே, வேகவேகமாக அதன் மீதே மீண்டும் மேக்அப் போட்டுக்கொள்கின்றனர். ஏற்கெனவே போட்டிருக்கும் மேக்அப் சருமத்தின் துவாரங்களை அடைத்திருக்கும். அதன் மீது திரும்பவும் பவுடர் அல்லது மேக்அப் போடுவது முகத்தில் வியர்வை மற்றும் அழுக்கை அதிகரிக்கவே செய்யும். அதனால் முகத்தைக் கழுவிவிட்டோ, அல்லது ஈரமான டிஷ்ஷூவைக்கொண்டோ முகத்தை நன்றாகத் துடைத்துவிட்டு, பிறகு போடுவது சருமத்துக்குப் பாதுகாப்பு.  

மேக்அப் மிஸ்டேக்ஸ்...

  முகத்துக்கு சோப் பயன்படுத்துவதற்குப் பதில், பேஸ் வாஷ் பயன்படுத்துவது நல்லது.

  இன்றைக்கு ஹாஸ்டல், கல்லூரி, பணியிடங்களில் பெண்கள் ஒருவர் வைத்திருக்கும் மேக்அப் பொருட்களை மற்றவர்களும் பயன்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் கிருமிகள் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம். அலர்ஜி, முகப்பரு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, ஒருவர் பயன்படுத்தும் மேக்அப் சாதனங்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.

  மேக்அப் சாதனங்களை எளிதில் காற்று நுழையாத பாக்ஸ்களில் வைக்க வேண்டும். இதனால் நுண்ணுயிரிகள் புகுவது மற்றும் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

  அழகான சருமம் கிடைக்க காலை மற்றும் இரவு நேரத்தில் சருமத்தைச் சுத்தப்படுத்துவது மிகவும் அவசியம். உங்கள் தோலுக்கு ஏற்ற பிரத்யேக கிளீனிங் முறைகளைச் சருமப் பராமரிப்பு நிபுணர்களிடம் கேட்டு செய்யலாம்.  

  எந்த ஒரு புதிய அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதாக இருந்தாலும், கையில் சிறிய அளவில் தடவி சோதனைசெய்து பார்ப்பது நல்லது. அலர்ஜி பிரச்னை இல்லை என்பதை இரண்டொரு நாளில் உறுதி செய்த பிறகே, முகத்தில் அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.

- ரோஸ்லின்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு