Published:Updated:

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

Published:Updated:

தரமற்ற மருந்துக்கு தடா!

அக்கம் பக்கம்

இந்தியாவின் மிகப் பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று, ரான்பாக்சி மருந்து நிறுவனம். இந்த நிறுவனத்தின் அமெரிக்கக் கிளை, தரமற்ற கெட்டுப்போன மருந்துகளை வினியோகித்த குற்றத்திற்காக, அமெரிக்க நீதிமன்றம் 5,500 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஒரு வருடமாக நடந்த வழக்கில், முறையற்ற தயாரிப்பு மற்றும் மருந்து சோதனையில், ஒரு நோய் எதிர்ப்பு மருந்தும், வலிப்பு நோய்க்கான மருந்து ஒன்றும் தரமற்றது என நிரூபணமானது. இதுகுறித்து, ரான்பாக்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், 'இந்த அபராதத்தால், நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் செயல்திறன், எந்த விதத்திலும் பாதிக்காது’ என்கிறார். சாமி கண்ணைக் குத்தும்!

திவ்யா ஒரு தெய்வக் குழந்தை!

அக்கம் பக்கம்

2011ம் ஆண்டு ஏப்ரலில் குஜராத் மாநிலம், அஹமதாபாத்தில் வெறும் 457 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை, நாட்டிலேயே மிகவும் குறைவான எடையில் பிறந்த குழந்தை என லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இது தாயின் வயிற்றில் நான்கரை மாதக் கர்ப்பத்தில் இருக்கும் ஒரு குழந்தையின் எடைக்கு சமம். 'மிகக் குறைவான எடையால், அதன் அனைத்து உறுப்புகளையும் சரியான அளவுக்கு வளர்ச்சியடையச் செய்ய முடியாது. பல விதமான உயிர்ப் போராட்டங்களையும் சந்திக்க வேண்டி இருக்கும், உயிர் பிழைப்பதே கடினம்’ என டாக்டர்கள் கூறியிருந்தனர். டாக்டர்களின் கட்டியத்தையும் மீறி, பல்வேறு போராட்டங்களுக்கிடையே, 'திவ்யா’ என பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை, தற்போது இரண்டு வயதை எட்டிப் பிடித்துள்ளது. தற்போது திவ்யா, லிம்கா சாதனை புத்தகத்தில் உலகிலேயே குறைந்த எடையில் பிறந்த குழந்தை என்ற சாதனையின் கீழ் இடம்பெற்றுள்ளார். வெயிட்லெஸ்ஸா பிறந்தாலும் வெயிட்டா சாதனை பண்ணியிருக்கு பாப்பா!

மனிதனை இனம் காணும் மலேரியா தொற்று!

அக்கம் பக்கம்

2010ம் ஆண்டில் மட்டும் உலக அளவில் 21.9 கோடி பேருக்கு மலேரியா காய்ச்சல் ஏற்பட்டதாக, உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இதில், 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

மலேரியா தொற்று இல்லாத கொசுவைவிடவும், மலேரியா தொற்று உள்ள கொசுவானது, மனித வாசத்தை மூன்று மடங்கு அதிகமாகக் கண்டறிகிறது. கொசுவுக்குள் உள்ள கிருமித் தொற்றுதான், மனிதனை எளிதில் கண்டறியும் வகையில் கொசுக்களைத் தூண்டுகின்றது என்கின்றனர் விஞ்ஞானிகள். மலேரியா தொற்றுள்ள கொசுக்கள் மனிதனைக் கடிக்கும்போது, கிருமித் தொற்று ரத்தத்தில் கலந்துவிடுகிறது. இப்படி மனிதனை அடைவதன் மூலம் தன் இருப்பை உறுதிப்படுத்தி, மனிதனுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் நோயை உண்டாக்குகிறது இந்தக் கிருமி. இந்தக் கொசுக்களின் செயல்பாட்டை அறிவதன் மூலம் மனிதனைக் கடிப்பதில் இருந்து பாதுகாக்கும் வழிகளை உருவாக்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். நான் கொசு!

ரோட்டாவைரஸுக்கு டாட்டா!

உலக அளவில், வருடத்துக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பலிவாங்கும் ரோட்டா வைரஸுக்கு எதிரான குறைந்த விலை மருந்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ரோட்டாவைரஸ், ஆசியா, ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை தந்து, உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. இந்திய விஞ்ஞானிகளின் பரிசோதனை முடிவுகள் வெற்றிகரமாக இருந்ததைத் தொடர்ந்து, விரைவில் இந்த மருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட உள்ளது. இந்த தடுப்பு மருந்தை மிகக் குறைந்தபட்சமாக ரூ.54-க்குக் கொடுக்க முடியுமாம். இதேபோன்ற தடுப்பு மருந்து இப்போது குறைந்தபட்சம் 1,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. விலையில்லா மருந்து எப்போ கிடைக்கும்?

அவசர எண்ணுக்கு வரும் அலறல் செய்திகள்!

அக்கம் பக்கம்

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்பிற்காகவும் பெண்களுக்கு உதவுதற்காகவும், டெல்லி அரசால் 181 என்ற அவசர அழைப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நான்கு மாதங்களில் இந்த எண்ணிற்கு மட்டும் இரண்டு லட்சம் அழைப்புக்கள் வந்துள்ளன. பெரும்பாலானவை பின்தொடர்தல், ஈவ்டீஸிங், ஆபாச அழைப்புகள் மற்றும் பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் தொடர்பானதுதான். இதுகுறித்து நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் குழுவில் பேசிய முதல்வர் ஷீலா தீட்சித் இந்தத் தகவலைத் தெரிவித்தார். வந்தது இரண்டு லட்சம், வராதது எத்தனை லட்சமோ?

விரல் சோதனை வேண்டாமே!

அக்கம் பக்கம்

'பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணின் கன்னித்தன்மையை ஆராய, கை விரல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சோதனை தவிர்க்கப்பட வேண்டும்; வேறு விதமான மருத்துவ ஆய்வு முறைகள் பின்பற்றப்பட வேண்டும்’ என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 'இன்னும் பழமையான முறையிலேயே இந்தப் பரிசோதனைகள் இருந்துவருகின்றன. இந்த முறைப்படி, பாதிக்கப்பட்ட ஒரு பெண், உண்மையிலேயே பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளாரா? என சோதனை செய்ய, இரு விரல்களை டாக்டர்கள் பயன்படுத்துகின்றனர். இத்தகைய சோதனையால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, மேலும் தர்மசங்கடமான நிலை ஏற்படுகிறது. இந்த முறையை தடைசெய்ய வேண்டும்’ என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர்.

தீர்வைத் தருமா தீர்ப்பு?

குறைந்த விலையில் உயிர்காக்கும் மருந்துகள்!

அக்கம் பக்கம்

மத்திய அரசின் புதிய மருந்துக் கொள்கையின்படி, உயிர் காக்கும் மருந்துகள் உட்பட 348 மருந்துகளின் விலை 80 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் விலை அளவுக்கு அதிகமாக இருப்பதாக தொடர்ந்து புகார் எழுந்ததை அடுத்து, புதிய மருந்துக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்து, கடந்த 15-ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. இதனால், புற்றுநோய் மருந்து மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் உட்பட, 348 மருந்துகளின் விலைகள் 50 முதல் 80% வரை குறையும். வணங்குகிறோம்!

எல்லை கடந்த 'இதய’ மாற்றம்!  

பாகிஸ்தானியருக்கு இந்தியர் இதயத்தைப் பொருத்தி அறுவை சிகிச்சை செய்துள்ளது சென்னை மலர் மருத்துவமனை. 40 வயதான முகமது சுபீர் ஆஸ்மி,  இதயப் பிரச்னைக்கு சிகிச்சை பெறுவதற்காக  பாகிஸ்தானிலிருந்து சென்னைவந்தார். அவரை பரிசோதித்தபோது, அவரது இதயம் மிகவும் பலவீனம் அடைந்தது, பெரிதாகி, உடல் முழுவதுக்கும் ரத்தம் செல்வது பாதிக்கப்பட்டிருந்தது. இதற்கு தீர்வு, இதய மாற்று அறுவைசிகிச்சை மட்டுமே என டாக்டர்கள் பரிந்துரைத்தனர். இந்தநிலையில் சாலைவிபத்தில் பாதிக்கப்பட்டு மூளைச்சாவடைந்தவர் இதயம் கிடைத்ததைத் தொடர்ந்து இவருக்கு ஏப்ரல் 23ம் தேதி இதய மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்பு உணர்வு தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பதன் காரணமாக நாட்டிலேயே சென்னையில்தான் அதிக அளவில் இதய மாற்று அறுவைசிகிச்சை நடக்கிறது என்கின்றனர் சென்னை மருத்துவர்கள். இத(ய)மான செய்தி!

போதைக்கு மாற்றானதா ஐஸ்க்ரீம்?

அக்கம் பக்கம்

கோடைக்காலத்தில் அதிகமாக விற்பனையாகும் ஐட்டங்களில் ஒன்று ஐஸ்க்ரீம். அனைவரும் விரும்பி சாப்பிடும் ஐஸ்க்ரீமை, தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னையைப் பற்றி வெளியிட்டுள்ளது 'தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் க்ளினிகல் நியூட்ரிஷியன்’. வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் எவ்வித பிரச்னையும் இல்லை.   ஆனால், ஐஸ்கிரீமை தொடர்ந்து சாப்பிடுவதால் அதிகமான கொழுப்புச் சத்தும், சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும். மில்க் ஷேக்குகளை குடிப்பவர்களை விட ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்களின் செயல் வேகம் குறைந்து, அடிக்கடி மந்தமான நிலைக்கு உள்ளாவார்கள். போதைப் பழக்கத்தைப் போல ஐஸ்கிரீம் விரும்பிகளுக்கும் இந்தத் தீவிர பழக்கம் மூளையில் சில மாற்றங்களை ஏற்படுத்தும்’ என்கிறது இந்த ஆராய்ச்சி. 'உருக’ வைக்குதே!

 எய்ட்ஸைக் கட்டுப்படுத்த இந்தியா திட்டம்!  

அக்கம் பக்கம்

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2550 கோடி ரூபாய் மதிப்பில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு ஆதரவுத் திட்டம் என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2017-ம் ஆண்டுக்குள் எச்.ஐ.வி. தொற்றைக் கட்டுப்படுத்துவது இதன் நோக்கம். இந்தியாவில் இப்போது 24 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா, நைஜீரியாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. முறையா நடவடிக்கை எடுக்கலைன்னா, முதல் இடம் உறுதி.

 அதிக வயது ஹரிசிங்கும்... ஆஞ்சியோபிளாஸ்ட்டியும்!

டெல்லியில் 104 வயதுள்ள ஒருவருக்கு ஆஞ்ஜியோபிளாஸ்ட்டி ஸ்டென்டிங் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. 1909-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி பிறந்தவர் ஹரி சிங். இப்போது 104 வயது. ரத்த அழுத்தம் குறைவு, நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். இவருக்கு ஏற்கனவே இதய செயல்பாடு குறைவு, சிறுநீரகம் செயலிழப்பு போன்ற பிரச்னைகளும் இருந்தது. ஹரிசிங்கைப் பரிசோதித்த டாக்டர்கள், இதயத் தசைக்கு ரத்தம் கொண்டுசெல்லும் மூன்று முக்கியக் குழாய்களில் இரண்டில் அடைப்பு இருந்ததைக் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து மே 16-ம் தேதி அவருக்கு ஆஞ்ஜியோபிளாஸ்ட்டி செய்யப்பட்டது. 10 நிமிடங்களில் முடிந்த இந்த சிகிச்சைக்குப் பிறகு, ஹரிசிங் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார். மிக அதிக வயதில் ஆஞ்ஜியோபிளாஸ்ட்டி செய்யபட்டது ஹரி சிங்குக்குத்தான் என்கின்றனர் டாக்டர்கள். சிங் இஸ் கிங்!