Election bannerElection banner
Published:Updated:

தீராத காயத்துக்கு தீர்வு!

தீராத காயத்துக்கு தீர்வு!

##~##

காலில் காயம் ஏற்பட்டு, புண்ணாகி அதைக் கவனிக்காமல்விட்டு, அது சீழ் பிடித்து செப்டிக் ஆகி, குணப்படுத்த முடியாத அளவுக்குப் போய், காலையே இழந்தவர்கள் பலர். நம் வாழ்வில் ஒருமுறையாவது கீழே விழுந்து காயம்பட்டிருப்போம். ஆனால், அந்தக் காயம் உடனடியாக ஆறிவிடுவதால், அதைப்பற்றி நாம் பெரும்பாலும் அலட்டிக்கொள்வது இல்லை. ஆரோக்கியமான நம் உடல் உடனடியாக அந்த காயங்களை ஆற்றிவிடுகின்றன. சற்றுப் பெரிய காயங்கள் மருந்துகளின் உதவியுடன் ஆறிவிடுகின்றன. ஆனால், சர்க்கரை நோயாளிகள், படுத்த படுக்கையாக இருப்பவர்கள், காயங்கள் ஆறும் தன்மை குறைவாக உள்ளவர்களுக்கு புண் ஆற நாட்கள் ஆகும். சில சமயங்களில் புண் ஆறாமல் வேறு வகையான பிரச்னைக்கு வழிவகுத்துவிடும். அப்படிப்பட்ட பிரச்னை உள்ளவர்களுக்கு தீர்வாக வந்திருக்கிறது புதிய ஆக்சிஜன் இயந்திரம். 

இந்த இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசினார்கள் சென்னை ஆயிஷா மருத்துவமனையில் உள்ள, 'ஹைகேர் ஃபார் ஊண்ட்ஸ்’ பிரிவின் மூத்த பிளாஸ்டிக் சர்ஜன் டாக்டர் வி.பி.நாராயணமூர்த்தி, போடியாட்ரிக் சர்ஜன் ராஜேஷ் கேசவன், ஆர்த்தோ சர்ஜன் அரவிந்த் ராஜகோபால்.

தீராத காயத்துக்கு தீர்வு!

''இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட ஐந்து கோடி சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். இவர்களில் 30 சதவிகிதம் பேருக்கு கால்களில் உணர்ச்சி இல்லாமை பிரச்னை இருக்கிறது. இதனால், கால்களில் ஏற்படும் சிறிய காயத்தைக்கூட இவர்களால் உணர முடியாது. காயம் ஆறாததால் புண் பெரிதாகி, ஒரு கட்டத்தில் காலையே அகற்ற வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடுகிறது. தவிர மூச்சு தொடர்பான பிரச்னையால் பலர் உயிரிழக்கின்றனர். இவர்களுக்குத் தீர்வாக வந்திருப்பதுதான் ஹைபர்பேரிக் ஆக்சிஜன் தெரப்பி (Hyperbaric Oxygen Therapy)

தீராத காயத்துக்கு தீர்வு!

நம் வளிமண்டலத்தில் 20 சதவிகிதம் அளவுக்குத்தான் ஆக்சிஜன் இருக்கிறது. காற்றை சுவாசிக்கும்போது நம்முடைய நுரையீரல் ஆக்சிஜனைக் கிரகித்து ரத்த சிவப்பு அணுக்களில் சேர்த்து, அதை உடலில் உள்ள திசுக்களுக்கு அனுப்புகிறது. காயங்கள் ஆற ஆக்சிஜன் தேவை. ஆனால், காயங்கள் ஆறுவதில் பிரச்னை உள்ளவர்களுக்கு புண் இருக்கும் இடத்துக்கு ஆக்சிஜன் செல்லும் அளவு, மிகக் குறைவாகவே இருக்கும். ஏனெனில் அந்த ரத்தக் குழாய்களின் அளவு மிகச் சிறியதாக இருக்கும். அதனுள் ரத்த சிவப்பு அணுக்கள் செல்ல முடியாமல் திரும்பிவிடுவதால், காயங்கள் இருக்கும் பகுதிக்கு ஆக்சிஜன் ஓட்டம் தடைபடுகிறது.

இதைப் போக்கும் வகையில், ஆக்சிஜன் தெரப்பி இயந்திரத்தினுள் நோயாளியை அனுப்புவோம். இதனுள் 100 சதவிகிதம் அளவுக்கு ஆக்சிஜனின் அளவு அதிகரிக்கப்படும். அதுவும் இரண்டு மடங்கு அதிக அழுத்தத்தில் ஆக்சிஜன் இருக்கும். இதனால் சுவாசிக்கும்போது 100 சதவிகித ஆக்சிஜன் நோயாளியின் நுரையீரலுக்குள் செல்லும். குறிப்பிட்ட அழுத்தத்தில் ஆக்சிஜன் செல்லும்போது அது ரத்த சிவப்பு அணுக்களில் சேர்வதுடன், ரத்தத்தின் திரவப் பகுதியான பிளாஸ்மாவிலும் கலந்துவிடும். ரத்த சிவப்பு அணுக்கள் செல்ல முடியாத இடங்களிலும் பிளாஸ்மா செல்வதால், புண் உள்ள இடத்துக்கு அதிக அளவில் ஆக்சிஜன் சென்றடைகிறது. அதிக அளவில் ஆக்சிஜனைப் பெறும் திசுக்களானது தன்னை சரிப்படுத்திக்கொள்வதுடன், புதுப்பித்தும்கொள்கிறது.

தீராத காயத்துக்கு தீர்வு!

இந்தக் கருவியில் சிகிச்சை அளிக்கப்படுவதற்கு முன்பு டிசிபிஓ2 என்ற கருவியைக்கொண்டு, பாதிப்புள்ள இடத்துக்கு எவ்வளவு ஆக்சிஜன் கிடைக்கிறது என்பதைக் கண்டறிவோம். அதன் பிறகு, ஆக்சிஜன் தெரப்பி இயந்திரத்தினுள் நோயாளியைச் செலுத்தி, ஆக்சிஜன் செலுத்தப்படும். நோயின் தன்மை, நோயாளியின் உடல்நிலை இவற்றைப் பொருத்து எத்தனை நாள் சிகிச்சை தேவைப்படும் என்பதைத் திட்டமிடுவோம். அதன்படி 15  முதல் 40 நாட்கள் வரை ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்படும்'' என்றனர்.

- பா.பிரவீன் குமார்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு