Published:Updated:

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

Published:Updated:

புகைக்கு வருமா தடை?

அக்கம் பக்கம்

'பொது இடங்களில் புகைபிடிக்கக் கூடாது என்று தடை இருந்தும், பெரும்பாலோனோர் அதைக் கண்டுகொள்வதே இல்லை. குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்களுக்குத் தடைவிதிக்கப்பட்டாலும்கூட, சிகரெட்டுக்குத் தடை விதிக்க முடியவில்லை. இந்த நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தில் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் அனைத்துக்கும் தடை விதிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும்படி, அந்த மாநில அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 'புகையிலைப் பொருட்கள் விற்பனையை ஒழுங்குபடுத்த, கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அஸ்ஸாம் மாநில 'இந்திய பல் மருத்துவ சங்கம்’, ஹைகோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தது. இதைத் தொடர்ந்து, நீதிமன்றம் தாமாகவே முன்வந்து ஒரு வழக்கைப் பதிவுசெய்து மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு அஸ்ஸாம் ஒரு முன்மாதிரியாக இருக்குமா என்பது, நவம்பர் 8-ம் தேதி அந்த மாநில அரசு தாக்கல் செய்ய உள்ள பதில் மனுவில் தெரியவரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அக்கம் பக்கம்

கணுக்கால் வலிக்கு ஒற்றைக்கால் பயிற்சி!

இந்திய கால் பந்தாட்ட அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, தன் இரண்டு கணுக்கால்களிலும் தசைநார் கிழிந்து அவதிப்பட்டுவந்தார். மருத்துவச் சிகிச்சையுடன், 'சுவிஸ் பந்து’ உடற்பயிற்சி மற்றும் 'ஒற்றைக்காலில் நின்று உடலை சமன்படுத்துவது உள்ளிட்ட பயிற்சிகளின் மூலம் தற்போது மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளார். ''ஒரு கால்பந்தாட்ட வீரனாக நான் என் உடலை சமநிலையில் வைத்திருப்பது மிகவும் அவசியம். மருத்துவர்களின் ஆலோசனையுடன்கூடிய உடற்பயிற்சியால் மட்டுமே இது சாத்தியமாயிற்று'' என்கிறார் புதுத் தெம்புடன்.

குழந்தை பெற்ற பிறகு குண்டாவதும் அழகுதான்!

##~##

ஹாலிவுட் நடிகை கிறிஸ்டன் பெல், கடந்த மார்ச் மாதம் ஒரு பெண் குழந்தைக்குத் தாயானார். ''குழந்தை பெற்ற பின், என் தோற்றத்தைப் பற்றியோ, உடல் எடை அதிகமாகியுள்ளதை நினைத்தோ நான் கவலைப்படவில்லை.  ஏனென்றால், குழந்தையைப் பெற்றெடுக்கும் பயணத்தில் அதுவும் ஒரு பகுதி. அழகான குண்டுகூட தாய்மைக்கே உரிய ஆரோக்கியம்தான்.' என்கிறார்.

 மக்களின் ஏக்கம்

இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த 14 ஆயிரம் பேரிடம் மருத்துவ சேவை தொடர்பாக ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 'தனியார் மருத்துவமனைக்கு செல்கிறீர்களா? அரசு மருத்துவமனைக்கு செல்கிறீர்களா?’ என்ற கேள்விக்கு, நகரப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 61 சதவிகிதத்தினரும், கிராமப்பகுதியைச் சேர்ந்தவர்களில் 69 சதவிகிதத்தினரும் 'தனியார் மருத்துவமனைதான் சிறந்தது’ என்று குறிப்பிட்டுள்ளனர். 44 சதவிகிதத்தினர் 'அரசு மருத்துவமனைகளில் காத்திருக்கும் நேரம் அதிகமாக உள்ளது’ என்றும், 52 சதவிகிதத்தினர் 'அரசு மருத்துவமனைகளில் நோய் கண்டறியும் பரிசோதனைகள் சரியாக எடுப்பதில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளனர். போதிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி, டாக்டர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கனிவுடன் நடந்துகொண்டால் அரசு மருத்துவமனைக்கு செல்லத் தயாராக உள்ளதாக 85 முதல் 90 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளனர். மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை அளிக்க, மத்திய மாநில அரசுகள் இனியாவது, முன்வருமா?

அக்கம் பக்கம்

புற்றுநோய் செல்லுக்கு பட்டினி

ஆரோக்கியமான செல்லைப் பாதிக்காமல், புற்றுநோய் செல்லுக்கு செல்லும் ஆற்றலை மட்டும் தடுத்து நிறுத்தி, புற்றுநோய் கட்டியை அழிக்கும் புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நம்முடைய உடலில் உள்ள இயல்பான திசுவே புற்றுநோய் செல்லாக மாறி, மிக வேகமாக பெருக்கம் அடையும். புற்றுநோய் செல் உயிர் வாழ அதற்கு அதிக அளவில் ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜன் தேவை. இந்தப் புற்றுநோய் செல்லுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்தைக் கொண்டுசெல்லும் இஇஃஎப்2கே (EEF2K)அமைப்பை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆரோக்கியமான செல்லில் இது இல்லை. எனவே, இந்த இஇஃஎப்2கே-வை குறிவைத்துத் தாக்குவதன் மூலம் புற்றுநோய் கட்டியை அழிக்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

 செயற்கைப் பல் வந்தாச்சு!

சீனாவின் குவாங்சுவோ பயோமெடிசன் மற்றும் ஹெல்த் டூத் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், செயற்கைப் பல்லை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக மனித சிறுநீரிலிருந்து வெளியேறும் செல்கள் சேகரிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டது. அந்த செல்கள் ரீஜெனரேஷன் முறையில் ஸ்டெம் செல்களாக மாற்றம் செய்யப்பட்டன. இந்த ஸ்டெம் செல்லை, எலியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட செல்லுடன் சேர்த்து செயற்கைப் பல்லை உருவாக்கும் சோதனை நடத்தப்பட்டது. இதில் தற்போது வெற்றிபெற்றுள்ளனர் விஞ்ஞானிகள். பற்களுக்குத் தேவையான டென்டல் பல்ப், டென்டின், எனாமல் ஸ்பேஸ், எனாமல் ஆர்கன் உள்ளிட்டவை தேவையான அளவுகொண்ட பல்லை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். எனினும், இயற்கையான பற்களைப் போன்று இதில் கடினத்தன்மை இல்லை. இருப்பினும், எதிர்பார்த்த அளவுக்கு இந்தச் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தற்போது அந்தச் செயற்கைப் பல்லைக் கடினப்படுத்தும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.