Published:Updated:

ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆர்கானிக் ஃபுட்!

ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆர்கானிக் ஃபுட்!

ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆர்கானிக் ஃபுட்!

ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆர்கானிக் ஃபுட்!

Published:Updated:
ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆர்கானிக் ஃபுட்!

இன்றைய மனிதனுக்கு ஏற்படும் பெரும்பாலான நோய்களுக்கு, அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவே ஒரு முக்கியக் காரணம். நம் முன்னோர்கள், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி மேற்கொண்டுவந்த பாரம்பரிய வேளாண் முறைகள் காலப்போக்கில் காணாமல் போய்விட்டன. கேழ்வரகு, கம்பு, சாமை, குதிரைவாலி, சோளம், தினை உள்ளிட்ட சிறுதானியங்களும், கொள்ளு, மொச்சை, பாசிப்பயறு, துவரை போன்ற பயறு வகைகளும் கிடைப்பதும் இன்று அரிதாகிவிட்டது. உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்களையும், நோய் எதிர்ப்பு ஆற்றலையும் தொடர்ந்து கொடுத்துவந்த இந்தப் பாரம்பரிய உணவுகளை உண்டுவந்த நம் முன்னோர் நூறு வயதைக் கடந்து நல்ல கண்பார்வையுடனும், துல்லியமான கேட்புத்திறனுடனும் வாழ்ந்துவந்தனர். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ்.

மூன்று வயது குழந்தைகள்கூட மூக்குக்கண்ணாடி அணிந்தபடி புத்தக மூட்டையை சுமந்துகொண்டு பள்ளி செல்வதைப் பார்க்கிறோம். 25 வயதில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், 30 வயதில் முதுகு வலி, மூட்டு வலி, மாரடைப்பு என்று பிரச்னைகள் வரிசையாக வந்துவிடுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாம் சாப்பாட்டுடன் விஷத்தையும் சேர்த்தே உண்டு வருகிறோம். அதுவே நமக்குப் பல்வேறு

ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆர்கானிக் ஃபுட்!

நோய்களைக் கொண்டுவந்து சேர்க்கிறது. 'நவீன விவசாயம்’ என்ற பெயரில் மூட்டை மூட்டையாக ரசாயன உரங்களையும், லிட்டர் கணக்கில் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் விவசாயிகள் தங்கள் வயலில் கொட்டுகிறார்கள். இதன் பலன், மண்ணும் நாம் உண்ணும் உணவும் நஞ்சாகிவிட்டது. இதை மாற்றி மனிதகுலத்துக்கு நஞ்சில்லா உணவைக் கொடுக்க வேண்டும்; அது இயற்கை வேளாண்மையால்தான் முடியும் என்று பல சமூக ஆர்வலர்கள் களம் இறங்கி விழிப்பு உணர்வுப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் விளைவு, இன்று தமிழக நுகர்வோர் மத்தியில் நஞ்சில்லா உணவுப் பொருட்களுக்கான தேடல் அதிகரித்து வருகிறது.

ஆர்கானிக் அங்காடிகளின் வரவு, இயற்கை உணவு தேடும் நுகர்வோரை ஒரு பக்கம் மகிழ்வித்தாலும், மறுபுறம் அவர்களை ஆட்டிப்படைக்கிறது சில சந்தேகங்கள். ஆர்கானிக் உணவுப் பொருட்களின் விலை, ரசாயன விவசாய விளைபொருட்களின் விலையைவிடக் கூடுதலாக இருக்கிறது. கடையில் விற்பனைசெய்யப்படும் ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் விஷத்தன்மை இல்லாத சுத்தமான பொருட்கள்தான் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

இயற்கை முறையில் விளைந்த உணவுப் பொருட்களைப் பயன்படுத்துவதன் நன்மைகுறித்து, கோயம்புத்தூரைச் சேர்ந்த குடல் நோய் அறுவைசிகிச்சை நிபுணர் சி.மனோகரன் கூறுகையில், 'தாய்ப்பால் தொடங்கி தண்ணீர் வரை நாம் உட்கொள்ளும் அனைத்து உணவுகளிலும் விஷத்தன்மை

ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆர்கானிக் ஃபுட்!

உள்ளதாக நிரூபணமாகியுள்ளது. இந்த வகை உணவை சாப்பிடுபவர்களுக்கு வயிறு சம்பந்தமான நோய் பாதிப்பு அதிகம் ஏற்படும். காய்கறி, பழங்கள் போன்ற பயிர்களுக்கு நேரிடையாகவே பூச்சி மருந்தைத் தெளிப்பதால், அவற்றை என்னதான் கழுவி சுத்தப்படுத்தி சமைத்தாலும் அதிலுள்ள விஷத்தன்மை முழுமையாக வெளியேறிவிடாது. சாப்பிடும் உணவு மூலம் மெள்ள மெள்ள நம் வயிற்றினுள் சென்று காலப்போக்கில் சிறுநீரகப் பாதிப்பு, குடல்புண், கல்லீரல் புற்றுநோய் போன்ற பல நோய்கள் வர வாய்ப்பு அதிகரிக்கிறது. மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கல், ஆண்மைக்குறைவு போன்ற நோய் தாக்குதலும் வரும் வாய்ப்பு உண்டு.

இன்று குழந்தைப்பேறின்மை என்பது, மிகப் பெரிய உடல்நலப் பிரச்னை. இதற்கும்கூட இந்தப் பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்கள் ஒருவகையில் காரணம். செயற்கை ஹார்மோன் செலுத்தப்பட்ட கோழி இறைச்சியைச் சாப்பிடும் பெண் குழந்தைகள் மிக விரைவில் பூப்பெய்துவிடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

 நம்முடைய பாரம்பரியமான, இயற்கை முறையில் விளைந்த கேழ்வரகு, கம்பு, சோளம், தினை போன்ற சிறுதானிய உணவுகளை முடிந்த அளவு எடுத்துக்கொள்ளவேண்டும்.

  ஒவ்வொரு வீட்டிலும் சிறிய அளவிலான புறக்கடை மற்றும் மாடித் தோட்டத்தை அமைத்து ரசாயனம் கலக்காத கீரை, காய்கறிகளை நாமே உற்பத்திசெய்ய வேண்டும்.

  அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகள் இன்று பாரம்பரிய உணவை நோக்கி சென்றுகொண்டிருப்பதுடன், ஆர்கானிக் உணவுத் திருவிழாக்களையும் பல இடங்களில் நடத்தி விழிப்பு உணர்வை ஏற்படுத்திவருகின்றன. ஆனால், நம் இளைஞர்கள் நமது சீதோஷ்ண நிலைக்கு சற்றும் பொருந்தாத பீட்சா, பர்க்கர் பக்கம் போய்க்கொண்டிருக்கிறார்கள். பள்ளி கல்லூரிகளில் ஆர்கானிக் உணவு குறித்த விழிப்புஉணர்வு வகுப்புகளை நடத்தவேண்டும்.

##~##

உணவே விஷம், உணவே மருந்து என்பதை அனைவரும் புரிந்துகொண்டால்... ஆரோக்கியம் செழித்தோங்கும்' என்றார்.

ஆர்கானிக் ஃபுட் என்று விற்கப்படுவது உண்மையில் இயற்கை முறையில் விளைந்ததுதானா? இதை எப்படி உறுதிப்படுத்துவது என்பது குறித்து, நீலகிரி மாவட்ட இயற்கை விவசாயிகள் சங்கத்தின் அமைப்பாளர் மகேஷ் மெல்வினிடம் கேட்டோம்.

'கடையில் நாம் வாங்கும் காய்கறி, தானியங்கள், பழங்கள் என்று எல்லாமே இயற்கை விவசாயத்தில் விளைந்ததா என்பதை ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி கண்டுபிடிக்கலாம். கால் கிலோ கத்தரிக்காயை வாங்கி இது ஆர்கானிக்கா என்று கண்டுபிடிக்க கோயம்புத்தூரில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பிவிட்டு, ஆறு மாதங்கள் கழித்து அவர்கள் அனுப்பும் ரிசல்ட்டுக்காக கடையில காத்திருக்க முடியுமா? அவசர உலகத்தில் இது நடக்காத காரியம். வேறு வழி இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். கண்டிப்பாக உள்ளது.

ரசாயனம் பயன்படுத்தி விளையும் காய்கறிகள் ''பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும், அளவில் பெரியதாகவும், அந்தக் காய்கறிகளுக்கே உரித்தான 'வாசனை’ இல்லாமலும் இருக்கும். சமைத்து சாப்பிடும்போது அந்தக் காய்கறிகளின் உண்மையான ருசியும் இருக்காது. ஆனால், ஆர்கானிக் காய்கறிகள் அப்படி இல்லை. அதில் பளபளப்பும் மினுமினுப்பும் இருக்காது. ஆனால், அவற்றின் உண்மையான மணமும் ருசியும் கண்டிப்பாக இருக்கும். அதேபோல்தான் அரிசி உள்ளிட்ட தானியங்களுக்கும், பயறு வகைகள், கீரைகளின் சுவையும் மணமும் குறையாது. மேலும் ஆர்கானிக் பொருட்களை நீண்ட நாட்கள் வீட்டில் வைத்திருந்தாலும் அழுகி கெட்டுப்போகாது. தானியத்தில் பூஞ்சாணம் பிடிக்காது. ஆகையால், ஆர்கானிக் உணவுப்பொருட்களை வாங்கி சமைத்துச் சாப்பிட்ட பிறகுதான் கண்டுபிடிக்க முடியும்.

ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆர்கானிக் ஃபுட்!

ஆர்கானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில், அங்கீகரிக்கப்பட்ட, சான்றளிப்பு நிறுவனத்தால் (ஆர்கானிக் சர்ட்டிஃபிகேஷன்) 'சான்றிதழ்’ வழங்கப்பட்டதா என்று பார்த்து உறுதிசெய்துகொள்ளலாம். மேலும், ஆர்கானிக் உணவுப்பொருள் பாக்கெட்டின் மீது, உற்பத்திசெய்து விற்பனைசெய்த விவசாயி அல்லது குழு அல்லது நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் ஆர்கானிக் விளைபொருள் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளின் முகவரியையாவது தரவேண்டும். அப்படிக் கொடுத்தால் மட்டுமே அதை வாங்கலாம்'' என்றவரிடம்,  

''இயற்கை விவசாய விளைபொருட்களின் விலை மற்ற காய்கறிகளின் விலையைவிட கூடுதலாக இருக்கிறது; ஆனால், உற்பத்திச் செலவு குறையும்போது விலையும் குறைய வேண்டுமே என்ற கேள்வி நுகர்வோர் மத்தியில் இருக்கிறதே...'' என்றோம்.

'இயற்கை விவசாயம் செய்யும் நிலத்துக்கு களைக்கொல்லிகளையோ, பண்ணை இயந்திரக் கருவிகளையோ யாரும் பயன்படுத்துவது இல்லை. எல்லாமே மனித உழைப்புதான். அதற்கான கூலி செலவு மிக அதிகம். அதுபோக, இயற்கை விவசாயிகளின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது. வெகுதொலைவில் இருந்தே அவை கொண்டுவரப்படுவதால் போக்குவரத்துச் செலவும் கூடிவிடுகிறது. வரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகள் இயற்கை விவசாயத்திற்கு மானியங்களையும் சலுகைகளையும் வழங்க உள்ளதாக செய்திகள் வருகின்றன. அப்படி நடக்கும்போது கண்டிப்பாக ஆர்கானிக் விளைபொருட்களின் விலை வெகுவாகக் குறையும்' என்றார்.

இயற்கைவேளாண்மை வல்லுநர் கூறுகையில், 'விவசாயிகளின் மீதும் விற்பனையாளர்கள் மீதும் கொண்டுள்ள நம்பிக்கைதான் இயற்கை விவசாய உணவுப்பொருட்களை வாங்கி உண்ணும் நுகர்வோருக்கு முக்கியமான ஒன்று. விவசாயிகளுக்கும் நுகர்வோர்களுக்குமான உறவு பலப்படவேண்டும். தங்கள் ஊரின் அருகில் இருக்கும் இயற்கை விவசாயிகளின் பட்டியலை ஒவ்வொரு நுகர்வோரும் சேகரித்து வைக்கவேண்டும். அவர்களின் பண்ணைகளுக்கு அடிக்கடி போய் நட்பை வளர்த்துக்கொள்ளவேண்டும். அவரை வியாபாரியாகவும் விவசாயியாகவும் பார்க்காமல் தோழராகப் பழகும்போது அவர், உங்களுக்கு நல்ல பொருளையே கொடுப்பார். மேலும் எல்லா இயற்கை விவசாயிகளும் ஆர்கானிக் அங்காடிகளுக்கு விளைபொருட்களை கொண்டுவருவது இல்லை, உள்ளூர் சந்தை மற்றும் உழவர் சந்தைகளில் கொண்டுபோய்த்தான் விற்கிறார்கள். ஆக, நுகர்வோர்கள் ஆர்கானிக் விவசாயிகளை அடையாளம் காண வேண்டியது அவசியம்.

மேலும், மழையை நம்பி மட்டுமே விளைகின்ற சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, கொள்ளு, தட்டை, கொண்டைக்கடலை, பாசிப்பயறு, வரகு, அரசாணி, பூசணி, பீர்க்கன், வெள்ளரி உள்ளிட்ட அனைத்தும் இயற்கைப் பட்டியலில்தான் வரும். கிராமங்களில் நடக்கும் வாரச்சந்தைகளில் கிடைக்கும். பாரம்பரிய உணவு தேடுவோர் அவர்களிடம் சென்று நம்பிக்கையின் பேரில் இந்தச் சிறுதானியங்களை வாங்கி வரலாம். சத்துமிக்க, ருசியான, நோய் எதிர்ப்பு ஆற்றல்கொண்ட ஆர்கானிக் உணவுப் பொருளுக்கு 'பட்டுக் கம்பளம்’ விரிப்போம். நஞ்சில்லா உணவை வருங்கால சந்ததிக்குக் கொடுப்போம். அதுவே, நாட்டுக்கும் நம் உடல் நலத்துக்கும் நல்லது!

- ஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய்

அட்டை படம்: ஜெ.வேங்கடராஜ் மாடல்: நிஷா