Published:Updated:

குழந்தைகளைத் தாக்கும் 'ரோட்டா' வைரஸுக்கு டாட்டா!

குழந்தைகளைத் தாக்கும் 'ரோட்டா' வைரஸுக்கு டாட்டா!

குழந்தைகளைத் தாக்கும் 'ரோட்டா' வைரஸுக்கு டாட்டா!

குழந்தைகளைத் தாக்கும் 'ரோட்டா' வைரஸுக்கு டாட்டா!

Published:Updated:
##~##

குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கும் வைரஸ் கிருமிகளால் பல்வேறு நோய்களால், இந்தியாவில் மட்டுமே, ஆண்டுக்கு சுமார் மூன்று லட்சம் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றனர். அதில், மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் 'ரோட்டா வைரஸ்’ என்ற கிருமியால் தாக்கப்பட்டு, மரணத்தைத் தழுவுகின்றனர் என்பதுதான் வேதனை. 

சுகாதாரமின்மையின் மறு உருவமாகத்தான் ரோட்டா வைரஸை மருத்துவர்கள் பார்க்கின்றனர். அதே சமயம், எளிய வழிமுறைகளைக் கையாண்டால், ரோட்டா வைரஸை நாட்டைவிட்டே துரத்திவிடலாம் என்ற நம்பிக்கையும் தருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரோட்டா வைரஸ் குறித்து புதுச்சேரியைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் முரளியிடம் பேசினோம். ''குழந்தைகளின் ஆரோக்கியத்தை சீண்டிப் பார்ப்பது இரு விஷயங்கள். ஒன்று, சளி: மற்றொன்று வயிற்றுப்போக்கு. ரோட்டா வைரஸானது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். ஆண்டுக்கு ஐந்து வயதுக்குட்பட்ட ஒரு லட்சம் குழந்தைகள் இந்தக் கிருமி மூலம் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். நம் நாட்டில் பிறக்கும் 250 குழந்தைகளில் ஒரு குழந்தை ரோட்டா வைரஸ் கிருமியால் தாக்கப்பட்டு, போதிய பராமரிப்பு இன்மையால் இறக்கின்றது. ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளையே ரோட்டா வைரஸ் அதிகம் தாக்குவதாகவும் மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.''  

குழந்தைகளைத் தாக்கும் 'ரோட்டா' வைரஸுக்கு டாட்டா!

எவ்வாறு பரவுகிறது?

'1973-ல் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. எங்கெல்லாம் சுகாதாரம் இல்லையோ, அங்கெல்லாம் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ரோட்டா வைரஸ் அதிகளவில் தாக்கும். அதிலும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை மிக சுலபமாக தாக்கும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த நோயின் தாக்கம் என்பது, சற்று குறைவு. காரணம், தாயிடம் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது, தாய்ப்பால் மூலம் குழந்தைக்குக் கொடுக்கப்படுகிறது. புட்டிப்பால் மற்றும் பசும்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியானது குறைந்து காணப்படுவதால், ரோட்டா வைரஸால் மிகச் சுலபமாகத் தாக்கப்படுகின்றனர். ஃபீடிங் பாட்டிலை சுத்தமாகக் கழுவாமல் அப்படியே குழந்தைக்குக் கொடுப்பது, மலம் கழித்துவிட்டுக் கையை சுத்தமாகக் கழுவாமல் குழந்தைகளைக் கொஞ்சுவது போன்றவற்றால்தான் ரோட்டா வைரஸ் பரவுகிறது.'

தடுப்பு மருந்து ஏதும் உள்ளதா?

'ரோட்டா வைரஸை அழிப்பதற்கான மருந்துகள், இதுவரை எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அது தாக்காமல் இருப்பதற்காக இரு மருந்துகள் உள்ளன. அவை இரண்டுமே குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குள் கொடுக்க வேண்டும். ஒரு டோஸின் விலை 1,000 ரூபாய். கடந்த மே மாதம் ரோட்டா வைரஸுக்கான புதிய தடுப்பு மருந்தை, 54 ரூபாய்க்கு ஒரு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கூடிய விரைவில் அது சந்தைக்கு வருமானால், ரோட்டா வைரஸிலிருந்து குழந்தைகள் நிச்சயமாக நிரந்தர விடுதலை பெறுவர்.'    

என்ன செய்ய வேண்டும்?

''தொடர் வாந்தி மற்றும் பேதி இரண்டுமே ரோட்டா வைரஸின் உடனடி வெளிப்பாடுகள். சிலர், 'தண்ணீர் அதிகம் குடிப்பதால் குழந்தை வாந்தி எடுக்கிறது’ என்று தவறாக நினைப்பது உண்டு. இது மாதிரியான நேரத்தில்தான் அதிக அளவு தண்ணீர் கொடுக்கவேண்டும். குழந்தையின் உடலில் நீர்ச்சத்து வற்றிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கான மாற்று மருந்துகள் இல்லை என்பதால், முதலில் வாந்தியை நிறுத்த வேண்டும். அதன் பின் குழந்தையின் வயதைப் பொறுத்து 'ஓ.ஆர்.எஸ்’ எனப்படும் உப்பு - சர்க்கரை கரைச்சல் பவுடரை வாங்கி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பூன் மூலம் கொடுக்கலாம். ஒரு பாக்கெட் வாங்கினால், அதை 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். ஓ.ஆர்.எஸ் பவுடரை வாங்க முடியாதவர்கள் ஒரு லிட்டர் தண்ணீரில் எட்டு ஸ்பூன் சர்க்கரை, மூன்று ஸ்பூன் உப்பு, எலுமிச்சைப் பழச்சாறு இவற்றைக் கலந்து குழந்தைக்குக் கொஞ்சமாகக் கொடுக்கவேண்டும். இளநீர், பழச்சாறுகள், கஞ்சித் தண்ணீர் போன்றவை அந்த நேரத்தில் சிறப்பாக உதவும். இரண்டே நாட்களில் ரோட்டா வைரஸின் தன்மை குறைந்துவிடும். மீண்டும் இரண்டாவது முறையாக ரோட்டா வைரஸ் தாக்கும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.''

- நா.இள அறவாழி

படம்:ஜெ.முருகன்

 வராமல் தடுக்க சில  வழிகள்...

 குழந்தை பிறந்தது முதல் ஓர் ஆண்டுக்கு, புட்டிப்பாலை அறவே தவிர்த்திட வேண்டும். தாய்ப்பாலினால் மட்டுமே இந்தக் கிருமியைத் தூர வைக்க முடியும்.

 ஒரே பாட்டிலைத் திரும்பத் திரும்பக் கழுவிப் பயன்படுத்தும்போதும் வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனைத் தவிர்க்க, பாலாடையை அல்லது டம்ளர் பயன்படுத்தலாம்.

 சாப்பிடும் முன்பும் பின்பும் நன்றாகக் கைகளைக் கழுவவேண்டும்.  

 கூடுமானவரை பிஞ்சுக் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சும்போது சற்று கவனமாக இருத்தல் அவசியம்.

 பெற்றோர்கள், குழந்தைகளையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரத்துடன் வைத்திருக்கவேண்டியது மிக முக்கியம்.