Published:Updated:

தயங்காதே பெண்ணே!

தயங்காதே பெண்ணே!

தயங்காதே பெண்ணே!

தயங்காதே பெண்ணே!

Published:Updated:
##~##

'சுதாம்மா, கொஞ்ச காலமா உங்களை வெளியில பார்க்க முடியலை’ என்று ஆதங்கத்துடன் நித்யா கேட்கவே, சுதா மெள்ள தன் நிலையைச் சொன்னாள். 

சமீப காலமாக சுதாவுக்கு, அடிக்கடி சிறுநீர்க் கசிவு ஏற்பட்டு, வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே அவளை முடக்கிவிட்டது. தும்மினால், இருமினால்கூட அந்த அழுத்தத்தில் உடனடியாக சிறுநீர் கசிந்துவிடும்.  இதனால், வெளியே போகவும் முடியாமல், வெளியில் சொல்லவும் முடியாமல் சோர்ந்து காணப்பட்டாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'இந்தக் காலத்துல இதுக்குப்போய்த் தயங்கலாமா?’ என்று அக்கறையுடன் பேசிய நித்யா, உடனடியாக என்னிடம் அழைத்து வந்தாள். சுதாவின் பயத்தையும் தயக்கத்தையும் சந்தேகங்களையும் தீர்த்த பிறகு, அதற்கான சிகிச்சையை அளித்தேன். இப்போது சுதா, பிரச்னை தீர்ந்து நிம்மாதியாக உள்ளார்' என்கிற

தயங்காதே பெண்ணே!

யூரோகைனகாலஜி மருத்துவரான கார்த்திக் குணசேகரன், பெண்களுக்கு ஏற்படும் இந்தப் பிரச்னைக் குறித்து மேலும்விரிவாக விளக்கினார்.

''உலகில் நான்கில் ஒரு பெண்ணுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது. தயக்கத்தின் காரணமாக, பலரும் வெளியில் சொல்லாமல் இருந்துவிடுவார்கள். சுமார் 40 சதவிகித பெண்களுக்கு, சிறுநீர்க் கசிவு பிரச்னை உள்ளது. இவர்களில் 55 சதவிகிதம் பேர், 30-ல் இருந்து 50 வயதான பெண்கள். பெண்களின் முக்கிய உள்உறுப்புகளான கர்ப்பப்பை, பிறப்புறுப்பு, மலக்குடல், சிறுநீர்ப்பை, சிறுநீர்க் குழாய் போன்றவற்றை இடுப்பு எலும்புப் பகுதிகள் தாங்குகின்றன. இதில், ஏதேனும் சிறு பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது அந்தப் பகுதியின் தசைகள் வலுவிழந்து போனாலோ, பெண்களுக்கு சிறுநீரக மண்டலம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். இதன் காரணமாக சிறுநீர்க் கசிவு ஏற்படலாம்.

இரவு நேரத்தில் படுக்கையை நனைக்கும் அளவுக்கு, தன்னை மறந்த நிலையில் சிறுநீர் வெளியேறும். 'கர்ப்பப்பை அடி இறக்கம்’ (புரொலாப்ஸ்) பிரச்னைகள் வரலாம், மலக்குடல் முழுவதுமாக இறங்கலாம். இதனால், மலம் கழிப்பதும் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்'' என்ற டாக்டர் கார்த்திக், இடுப்பு எலும்புப் பகுதிகளில் (பெல்விக் ப்ளோர்), எதனால் ஏற்படுகிறது என்பதுகுறித்தும் பேசினார்.

வயது அதிகரிப்பது, உடல் பருமன், பிரசவம், சிசேரியன், கர்ப்பப்பை அகற்றம், முதுகுத் தண்டுவடத்தில் விபத்து, அதிக எடைத் தூக்குதல் போன்றவற்றால் பெண்களுக்கு இடுப்பு பகுதியில் உள்ள தசைகள்

தயங்காதே பெண்ணே!

மற்றும் நரம்பு அமைப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு சிறுநீர்க் கசிவு ஏற்படலாம். ஆஸ்துமா பிரச்னையால் ஏற்படும் கடுமையான இருமல் கூட இடுப்பு எலும்புப் பகுதியில் அதிக அழுத்தத்தைத் கொடுத்து, இந்த பிரச்னையை ஏற்படுத்தலாம். இதனால், இருமல், தும்மல் ஏற்படும் போதும், ஒருசிலருக்கு சிரிக்கும்போதும்கூட அவர்களையும் அறியாமல் சிறுநீர், மலம் வெளியேறிவிடலாம். சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வருவதற்குள் அடக்கிக்கொள்ள முடியாமல் சிறுநீர் வந்துவிடும்.

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இது பெரிய பிரச்னை இல்லை என்றாலும், சிறுநீர்க் கசிவால் நோயாளிக்கும் சுற்றி இருப்பவர்களுக்கும் சங்கடம்தான். வெளியிடங்களுக்கு நிம்மதியாகப் போக முடியாது. இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படலாம். வேலைக்குச் செல்பவர்கள் மனதளவில் சங்கடத்துக்கு உள்ளாகி, இந்தப் பிரச்னையை சமாளிக்க முடியாமல் வேலையை விட்டுவிடும் நிலைமையும் ஏற்படலாம். இதை அப்படியே அலட்சியமாக விடுவதும் ஆபத்துதான்.  

ஆரம்ப நிலையில் இருந்தால், மருந்து, மாத்திரைகள், சில உடற்பயிற்சிகள் மூலம் குணப்படுத்தமுடியும். ஆனால், இதன் பாதிப்பு அதிகரிக்கும்போது, ரத்த சேதம் ஏதுமில்லாமல் சிறு அறுவைசிகிச்சை செய்து இந்தப் பிரச்னையை முழுமையாக குணப்படுத்திவிடலாம்' என்றார்.

- உமா ஷக்தி

படம்: ஜெ.வேங்கடராஜ்

 வராமல் தடுக்க சில வழிகள்!  

 இருமல், தும்மல் வந்தால் உடனே அதற்கான மருத்துவம் செய்துகொள்ள வேண்டும்.

 உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

 நடுத்தர வயதிலோ அல்லது அறுவைசிகிச்சை செய்த சில மாதங்களிலோ அதிகமான எடையைத் தூக்க வேண்டாம்.

 தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

 கர்ப்ப காலத்தில் மற்றும் குழந்தை பிறந்த பிறகு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பயிற்சிகளை, கட்டாயம் செய்ய வேண்டும்.

 தினமும் மூச்சுப் பயிற்சி, யோகா செய்வதும் நல்லது.  நீச்சல் பயிற்சியும் நல்ல பலனைத் தரும்!