Published:Updated:

தீக்காயத்துக்கு தீர்வு!

அசத்தப்போகும் அரசு மருத்துவமனை!

##~##

சிவகாசி பட்டாசு ஆலைகளில், கடந்த ஓராண்டில் நடந்த வெடி விபத்தில் மட்டும் 50-க்கும் அதிகமானவர்கள் தீக்காயம்பட்டு பலியாகி உள்ளனர். இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதா, தீ விபத்தில் பாதிக்கப்படுபவர்களின் உயிரைக் காப்பாற்ற சிவகாசி அரசு மருத்துவமனையில், தீக்காயச் சிகிச்சைக்கு என்று மல்ட்டி ஸ்பெஷாலிட்டி பிரிவைத் தொடங்க ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். 52 படுக்கைகள் கொண்ட, நவீன தொழில்நுட்பக் கருவிகளுடன் மருத்துவமனை உருவாகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. இதன்மூலம், தீக்காயத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியும். இந்த மருத்துவமனை பற்றித் தெரிந்துகொள்ள, விருதுநகர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் டாக்டர் கதிரேசனைச் சந்தித்துப் பேசினோம்.

''சிவகாசியில் கட்டப்படும் தீக்காயத்துக்கான மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், இரண்டே கால் கோடி ரூபாய் செலவில் மூன்று மாடி கட்டடப் பணிகள் நடந்து வருகின்றன. இங்கு பொது மருத்துவம், ஆர்த்தோ மருத்துவர், ஆர்த்தோ அறுவைசிகிச்சை நிபுணர், பிளாஸ்டிக் சர்ஜன்,  பிசியோதெரப்பிஸ்ட் ஆகிய ஐந்து சிறப்பு மருத்துவப் பணியிடங்களும், 15 நர்சுகள், நோயாளிகளுக்கு கவுன்சலிங் தருவதற்கு என கவுன்சலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.  ரூ.75 லட்சம் செலவில் நவீன மருத்துவ உபகரணங்கள், 50 லட்சம் செலவில் பர்னிச்சர்கள் மற்றும் பேன்டேஜ் துணிகள் வாங்குவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தீக்காயத்துக்கு தீர்வு!
தீக்காயத்துக்கு தீர்வு!

இந்த மருத்துவமனையில், எலும்பு அறுவை சிகிச்சைக்கு பிரத்யேக ஆபரேஷன் தியேட்டர், ஆண்கள்-பெண்களுக்கு என தனித்தனி வார்டுகள் அமைக்கப்பட உள்ளன. தீக்காயம் ஏற்பட்ட நோயாளியை ஒரு அறைக்குள் அனுப்பினால், அவர்மீது நீர் பாய்ச்சி அடித்துச் சுத்தம் செய்து, ஜெல் மருந்து பூசி, செயற்கைத் தோல் போர்த்தி, ஐ.சி.யு.வுக்கு கொண்டு செல்லும் தானியங்கி முறை இந்த மருத்துவமனையில் அமைக்கப்பட உள்ளது'' என்ற டாக்டர் கதிரேசன், சிகிச்சை செய்யும் விதத்தைச் சொன்னார்.

''பட்டாசு வெடி விபத்து மற்றும் தீக்காயத்தால் காயமடைந்து இங்கு கொண்டுவரப்படும் நோயாளிகளுக்கு, முதலில் குளிர் நீர் சிகிச்சைதான் அளிக்கப்படும். தீக்காயத்தால் உடலில் பயங்கரமான எரிச்சல் ஏற்படும். அப்போது குளிர்ந்த நீரால் நோயாளியின் உடலில் ஊற்றுவோம். பிறகு, நோயாளியின் உடலில் இருக்கும் கருகிய தோல்களை அகற்றிவிட்டு வலியைப் போக்குவதற்கு வலி நிவாரண மருந்துகள் தரப்படும். ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா என்ற திரவம், தீக்காயமடைந்தவர்களின் உடலில் சேதமடைந்த ரத்தக் குழாய்கள் மூலம் வெளியேறும். இதனால் சிறுநீரகம், இதயம் போன்றவை பாதிக்கப்படும். எனவே, பிளாஸ்மாவை அதிகரிக்க நரம்புகள் வழியாக ஊசி மூலம் உடலில் செலுத்தப்படும். கருகிய, சிதிலடைந்த தோல், சதைகளை அகற்றிவிடுவோம். தீக்காயம் பட்ட இடம் சிவப்பாக இருந்தால், சீக்கிரம் புண் ஆறிவிடும். வெள்¬ளயாகவோ, கறுப்பாகவோ இருந்தால், அந்தக் குறிப்பிட்ட பகுதியில் சதை அழுகி விட்டது என்று அர்த்தம். மயக்க மருந்து செலுத்தி அழுகிய சதைகளை அகற்றிவிடுவோம். பிறகு, குளோஜன் என்ற செயற்கைத் தோலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி விடுவோம். சில நேரங்களில், குளோஜனுக்குப் பதிலாக பிரசவத்தின்போது தாய்மார்களின் தொப்புள் கொடியில் இருந்து வரும் திரவத்தையும் இதற்குப் பயன்படுத்துவோம். செயற்கைத் தோல் பொருத்துவதன் மூலம் தீக்காயம் பட்ட அந்த இடத்தில் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும். உடலில் ஏற்பட்ட காயத்தின் தீவிரத்தைப் பொறுத்து 20 நாட்களுக்கு மேல் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்படுவர்.

தீக்காயத்துக்கு தீர்வு!
தீக்காயத்துக்கு தீர்வு!

தீக்காயம் அடைந்தவர்களுக்கு கை, கால்களின் எலும்புகள் பாதிக்கப்பட்டு அப்படியே நின்றுவிடும். தீவிர சிகிச்சைக்குப் பிறகு சதை நாண் விடுப்பு (டென்டோன்) எனப்படும் ஆபரேஷன் செய்யவும் கை, கால் எலும்பு மூட்டுக்கள் செயல்படத் தொடங்கும். பிசியோதெரபி சிகிச்சை மூலம் செயல் இழந்த கை-கால்களுக்குச் சிகிச்சை அளித்து இயல்பான நிலைக்குக் கொண்டுவருவோம். பிறகு கழுத்து, முகம் போன்றவற்றில் தீக்காயம் பட்டிருந்தால், தீவிர சிகிச்சைக்குப் பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்வோம். இதுதவிர, தீக்காயம் பட்டவர்கள் அந்த அதிர்ச்சியில் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பார்கள். அதற்காக தினமும் ஒரு மணி நேரம் சைக்கோ தெரப்பி கொடுக்கப்படும்.

நோய்த் தொற்றை முற்றிலும் நீக்க, ரூ.12 லட்சம் செலவில் 'ஹை எஃபிஷியன்ட் பர்ட்டிகுலேட் ஏர் ஃபில்ட்டர்’ அமைப்பு நிறுவப்படவுள்ளது. எலும்பு அறுவை சிகிச்சையின்போது, உடலின் குறிப்பிட்ட பகுதியில் எலும்பு எப்படி இருக்கிறது என்பதை எக்ஸ்ரே போல் துல்லியமாகக் காட்டக்கூடிய 'சி-ஆர்ம்’ என்ற கருவியும் அமைக்கப்பட உள்ளது. இது தவிர, சென்ட்ரல் ஆக்சிஜன் சப்ளை, மியூசிக் தெரப்பி வழங்கப்பட உள்ளது. உடல் உறுப்புகளை தானம் பெறுவது போல, தோல்களை தானமாகப் பெற்றுச் சேமித்து வைத்து, அதை தீக்காயம் அடைந்த நோயாளிகளுக்கு பொருத்தக்கூடிய திட்டமும் இருக்கிறது.

இந்த மருத்துவமனை கட்டுமானப் பணி முழுமையடைந்து, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த மருத்துவமனை செயல்படத் தொடங்கும்' என்று முடித்தார்.

- எம்.கார்த்தி

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

 தீக்காயத்தின் தன்மை

முதல் டிகிரி: தோலிலும் அதற்குக் கீழே உள்ள பகுதியிலும் தீக்காயம் ஏற்படுவது.

தீக்காயத்துக்கு தீர்வு!

இரண்டாவது டிகிரி: தோலுக்குக் கீழே சதைப் பகுதியும் அதற்கு கீழே ஆழமான தீக்காயம் ஏற்படுவது.

3வது டிகிரி: தோலில் ஏற்பட்ட தீக்காயம், மிகவும் ஆழமாக ஊடுருவி எலும்பு மற்றும் உள் உறுப்புக்களைப் பாதிப்பது. இவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளித்தால் மட்டுமே, ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.

பெர்சன்டேஜ்- ரூல் நம்பர் 9

தீ விபத்தில் சிக்கி உடல் கருகியவர்களின் உடலில் தீக்காயம் 60 சதவிகிதம், 80 சதவிகிதம் என்று சதவிகிதத்தின் அளவைக் கணக்கிடும் முறைக்குத்தான் 'ரூல் நம்பர் 9’ என்று பெயர். இந்த சதவிகித அடிப்படையில் நோயாளிகளுக்கு முகம், கழுத்துக்கு-9 மார்க், ஒரு கைக்கு 9 மார்க் வீதம் இரு கைகளுக்கு-18, மார்பு, வயிறு சேர்ந்து-18, முதுகு-18, மர்ம ஸ்தானம்- ஒரு மார்க் என, உடம்பில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் மார்க் கணக்கிட்டு, அதை தீக்காயம் பெர்சன்டேஜ் ஆக கணக்கிடுகிறோம். உடல் எடை மற்றும் தீக்காயத்தின் பெர்சன்டேஜையும் பெருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு நோயாளி 70 கிலோ எடையும், 40 பெர்சன்டேஜ் தீக்காயம் அடைந்திருந்தால், அதை 70x40 என்று பெருக்கினால், 2,800 என்று வரும். இவருக்கு 2800 மி.லி.லிட்டரில் (8 லிட்டர்) குளுக்கோஸை ஏற்ற வேண்டும். முதல் கட்டமாக, காயம்பட்ட நேரத்தில் இருந்து முதல் 8 மணி நேரத்துக்குள் 50 சதவிகிதம் குளுக்கோஸ் ஏற்றப்படும். அடுத்த 8 மணி நேரத்துக்குள் மீதமுள்ள 50 சதவிகிதத்தை ஏற்ற வேண்டும். நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கத்தான் இந்த பெர்சன்டேஜ் முறை பயன்படுத்தப்படுகிறது.

செய்ய வேண்டிவை:

உடலில் தீ பற்றியவுடன், சாக்கு, கம்பளி போன்றவற்றை தீக்காயம்பட்டவர்கள் மீது போர்த்தி கீழே தள்ளி உருட்டி விட வேண்டும். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.

செய்யக்கூடாதவை:

தண்ணீர் கேட்டாலும், கொடுக்கக் கூடாது. தண்ணீர் கொடுத்தால், நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு உடனடி மரணம் ஏற்பட வாய்ப்பு அதிகம். தீக்காயம்பட்ட இடங்களில் மருதாணி, சாணி போன்றவற்றைப் பூசக் கூடாது. இதனால், அந்த இடத்தில் நோய்த் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.