பிரீமியம் ஸ்டோரி

'புட்டு என்றதும், நமக்கு சட்டென நினைவுக்கு வருவது பச்சை அரிசியில் செய்யும் குழாப் புட்டுதான். ஆனால், இன்னும் நாம் சிவப்பு அரிசிக்குப் பழக்கப்படாததால் அதன் ருசியையும் மகத்துவத்தையும் அறியாமலேயே இருக்கிறோம். சிவப்பு அரிசியை சமைத்துச் சாப்பிடுவதைவிட அதில் இட்லி, தோசை, அடை, புட்டு, கொழுக்கட்டை, கூழ் போன்றவற்றை ருசியாகச் செய்யலாம்.  வெள்ளை அரிசியைக் காட்டிலும், சிவப்பு அரிசியில் குழந்தைகளின் ஊட்டச் சத்துக்குக் குறைவேதும் இருக்காது' என்று அக்கறையாகச் சொல்லும் கடலூர்-திருப்பாதிரிபுலியூரைச் சேர்ந்த காயத்ரி, சிவப்பு அரிசி, சிவப்பு அவலில் புட்டு தயாரிக்கும் முறையை விவரிக்கிறார்.

அம்மா ரெசிபி!
##~##

தேவையானவை: சிவப்பு அரிசி, சிவப்பு அவல் - தலா 100 கிராம், சர்க்கரை- 50 கிராம்,  துருவிய தேங்காய் - ஒரு கப், வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை, பாதாம் பருப்பு - தலா 25 கிராம், ஏலக்காய் தூள் - சிறிதளவு.

செய்முறை: கழுவி காயவைத்த சிவப்பு அரிசியுடன், அவல் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவுக் கலவையுடன் துருவிய தேங்காய், சர்க்கரை சேர்த்து உப்பு கலந்த தண்ணீரைத் தெளித்து நன்கு வேகவைக்கவும். இதில் ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் மற்றும் பொடித்த முந்திரிப் பருப்பைச் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

சித்த மருத்துவர் ராதிகா சங்கரபாகம்:  சிவப்பு அரிசியில் மக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம் போன்ற தாது உப்புகள் மற்றும் வைட்டமின் - ஈ மற்றும் நார்ச் சத்து அதிகம் உள்ளது. ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தினை குறைக்கக்கூடியது.  தினமும் ஏதாவது ஒரு வகையில் இந்த அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். இந்த புட்டை, சர்க்கரை சேர்க்காமல், சர்க்கரை நோயாளிகளுக்குக் கொடுக்கலாம். தசைகள், எலும்புகள், பற்கள் போன்றவற்றுக்கு வலு சேர்க்கக்கூடிய அத்தனைச் சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது.  

படங்கள்: தி.குமரகுருபரன்

 இதேபோல் உங்கள் வீட்டு உணவு அனுபவங்களை 'அம்மா ரெசிபி!’ பகுதிக்கு உங்கள் தொலைபேசி எண்ணுடன் உடனே எழுதி அனுப்புங்கள். கலக்கலான பரிசுகள் உண்டு

அனுப்பவேண்டிய முகவரி:

'அம்மா ரெசிபி’ டாக்டர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை 600 002.

மின்னஞ்சல்: doctor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு