Published:Updated:

டயாலிசிஸ் பற்றிய டீடெய்ல்ஸ்!

டயாலிசிஸ் பற்றிய டீடெய்ல்ஸ்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

னிதனின் சிறுநீரகங்கள், நாள் ஒன்றுக்கு தோராயமாக 1,500 லிட்டர் ரத்தத்தைச் சுத்திகரிக்கின்றன. உடலில் நீர், தாது உப்புக்களின் அளவு அதிகரிக்கும்போது, அதனை வெளியேற்றும் பணியைச் சிறப்பாகச் செய்கின்றன. சிறுநீரகத்தின் திறன் மிகவும் குறைந்து, ரத்தத்தில் உள்ள நச்சுக்களைப் பிரித்து வெளியேற்றும் திறனும் பாதிக்கப்படும்போது, டயாலிசிஸ் செய்யவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இந்தத் தருணத்தில் டயாலிசிஸ் செய்யவில்லை எனில், உடலில் உள்ள நச்சுப் பொருட்களின் அளவு அதிகரித்து, கோமா மற்றும் உயிரிழப்பு வரைகூட பிரச்னை ஏற்படலாம். டயாலிசிஸ் என்றால் என்ன? அதன் செயல்பாடு பற்றி சிறுநீரகவியல் மருத்துவர் எம்.ஜி.சேகரிடம் கேட்டோம். 

'நம் சிறுநீரகம், சில ஹார்மோன்களைச் சுரந்து எலும்பு மற்றும் ரத்தம் ஆரோக்கியமாக இருக்க உதவிபுரியும். சிறுநீரகத்தின் செயல்பாடு முற்றிலும் குறைந்துவிடும் நிலையை, 'சிறுநீரகம் செயல் இழப்பு’ என்கிறோம். இந்த நிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அப்படிச் செய்யமுடியவில்லை என்றால், தற்காலிகமாக அளிக்கப்படும் சிகிச்சைதான் டயாலிசிஸ். பெரிட்டோனியல் டயாலிசிஸ் மற்றும் ஹிமோடயாலிசிஸ் என இரண்டு வகையான டயாலிசிஸ் முறைகள் உள்ளன. இவை இரண்டுமே உடலில் உள்ள நீர், உப்பு மற்றும் நச்சுக்களைப் பிரித்து வெளியேற்றுகின்றன.

டயாலிசிஸ் பற்றிய டீடெய்ல்ஸ்!

  பெரிட்டோனியல் டயாலிசிஸ் என்பது, நம் வயிற்றுப் பகுதியில் உள்ள பெரிட்டோனியம் என்ற மெல்லிய சவ்வைப் பயன்படுத்தி கழிவுகள் அகற்றப்படும் முறை. இதை வீட்டிலேயே கூட செய்யலாம். இந்த முறையில், வயிற்றுப் பகுதியில் பிளாஸ்டிக் டியூப் பொருத்தப்படும். இதன்வழியே வயிற்றுக்குள் உள்ள 'அப்டாமினல் கேவிட்டி’ என்ற பகுதிக்குள் பிரத்யேகமான டயாலிசிஸ் திரவம் செலுத்தப்படும். இதன் சுவர் பகுதியான பெரிட்டோனியம் சவ்வு இப்போது வடிகட்டியாகச் செயல்படும். இதன் வழியாக ரத்தத்தில் உள்ள எலக்ட்ரோலெட், யூரியா, கிரியாட்டின், அல்புமின் போன்றவை ஈர்க்கப்பட்டு, டயாலிசிஸ் திரவத்துக்குள் வந்துசேரும். இதை இரவு நேரத்தில் நோயாளி தூங்கும்போதுகூட செய்யலாம்.

 ஹிமோடயாலிசிஸ் என்பதை செயற்கை சிறுநீரகம் என்றே கூறலாம். நம்முடைய ரத்தமானது வெளியில் உள்ள கருவிக்குள் செலுத்தப்படும். இந்தக் கருவியினுள் பிரத்யேகமான வடிகட்டி உள்ளது. கையில் உள்ள 'சிறை’ ரத்த நாளத்தில் சிறிய குழாய் ஒன்று செருகப்படும். மற்றொரு முனையானது இந்தக் கருவியினுள் இருக்கும். இந்தக் குழாய் வழியாக வரும் ரத்தமானது, கருவியினுள் உள்ள வடிகட்டியினுள் பாய்ந்து வடிகட்டப்படும். இந்த தூய ரத்தமானது மற்றொரு குழாய் வழியாக 'தமனி’ ரத்தக் குழாயின் மூலம் உடலுக்குள் செலுத்தப்படும். வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் போதும். இதற்கு 6 முதல் 8 மணி நேரம் பிடிக்கும்'' என்றார்.

டயாலிசிஸ் பற்றிய டீடெய்ல்ஸ்!

டயாலிசிஸ் நோயாளிகளுக்கான உணவு முறைகள் பற்றி டாக்டர் சேகர் கூறுகையில்,

சரியான உணவை உட்கொள்வது உடல் நச்சுக்கள் சேருவதைக் குறைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

அதிக அளவில் நீர் அருந்துவது ரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதய செயல்பாட்டைக் கடினமாக்கி, டயாலிசிஸ் சிகிச்சையின் வலியை அதிகரித்துவிடும். டயட்டீஷியனை அணுகி, உடலின் தன்மைக்கேற்ப தண்ணீர் மற்றும் பிரத்யேக உணவுத் திட்டத்தை மேற்கொள்வது நல்லது.

டயாலிசிஸ் செய்ய வேண்டியவர்கள் ஆரஞ்சு, வாழை, தக்காளி, உருளை போன்ற பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

பாஸ்பரஸ் தாது உப்பானது எலும்பை வலுவிழக்கச் செய்துவிடும். கால்சியம் எடுத்துக்கொள்வதைக் காட்டிலும் பாஸ்பரஸ் அதிகம் உள்ள பால் பொருட்கள், கோலா பானங்கள் போன்ற உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

இறைச்சியில் கிடைக்கும் புரதத்துக்குப் பதில், காய்கறி, பருப்பு வகைகளில் இருந்து கிடைக்கும் புரதம் எடுத்துக்கொள்ளலாம்.

டயட் காரணமாக, பல்வேறு உணவு வகைகளை எடுத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்போது, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்கள் கிடைக்காமல் போய்விடும். மேலும், டயாலிசிஸ் செய்யும்போது சில ஊட்டச் சத்துக்கள் வெளியேற்றப்படுகின்றன. எனவே, டாக்டர் பரிந்துரையின்படி ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின் மாத்திரைகளைச் சாப்பிடலாம்.'' என்றார்.

- பா.பிரவீன் குமார்

 சிறுநீரக பிரச்னைத் தவிர்க்க...

சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

முடிந்தவரை வலி நிவாரண மாத்திரைகளைத்  தவிர்க்க வேண்டும்.

டாக்டரின் ஆலோசனையின்றி மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் நீர் அருந்த வேண்டும்.

உணவில் காய்கறி, பழங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு