Published:Updated:

கண்ணுக்கு இமை அழகு!

##~##

'கண்ணை இமை காப்பது போல்...’ என்பார்கள் ஆனால், இன்றோ, கண்களை சரியாகப் பாதுகாக்காமல் விடுவதன் விளைவு... இமையும் கண்களில் இருக்க மறுக்கிறது. 

இன்று நவநாகரீக பெண்கள் மத்தியில் செயற்கை இமை பிரபலம். சினிமா, கம்ப்யூட்டர், டி.வி... என கண்களுக்கு ஓய்வில்லாமல் வேலை தருவதால், கண்கள் பாதிக்கப்பட்டு, இமைகளும் உதிர்ந்து கண்கள் ஜீவனற்றுக் காணப்படுகின்றன. எல்லாமே செயற்கைக்கு மாறிவிட்ட நிலையில், கண்களில் செயற்கையாகப் பொருத்திக் கொள்ளும் இமைகளும் விற்பனைக்கு வந்துவிட்டன. செயற்கை இமையின் பயன்பாடு பற்றி கோவை தாத்ரி ஆயுர்வேதிக் பியூட்டி ஸ்லிம் கிளினிக்கின் அழகுக்கலை நிபுணர் பிரியாவிடம் கேட்டோம்.  

''நடிகைகள், மாடலிங் துறையில் இருப்பவர்கள் மட்டுமே செயற்கை இமை பொருத்தி வந்த காலம் மாறி, தற்போது கல்லூரி பெண்களிடமும் செயற்கை இமை பிரபலமாகி இருக்கிறது. இன்றைய பெண்கள் திருமண நிகழ்ச்சி, பார்ட்டி மட்டுமில்லாமல் எந்த இடத்திலும் தனித்துவமாகவும், அழகாகவும் தெரியவேண்டும் என்பதற்காகவே செயற்கை கண் இமைகளைப் பொருத்திக் கொள்ள விரும்புகின்றனர்.

கண்ணுக்கு இமை அழகு!
கண்ணுக்கு இமை அழகு!

அதற்கேற்ப, செயற்கை இமைகள் 80 முதல் 150 ரூபாய் வரையில் பியூட்டி பார்லர், காஸ்மெடிக் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. செயற்கை இமைகளின் நீளம் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப கிடைக்கின்றன. கண்களின் மேல் பகுதியில் ஒட்டிக் கொள்வதற்கு செயற்கை இமையிலேயே பசை இருக்கும். கண்களின் மேல் பகுதியில்  மெதுவாக கவனமாகப் பொறுத்த வேண்டும். அடிக்கடி இமையைப் பயன்படுத்தும்போது, ஒட்டும் பசை குறைந்துவிட்டாலும், பசை தனியாகவும் கிடைக்கிறது. அதை வாங்கியும் பயன்படுத்தலாம்'' என்கிறார்.  

''செயற்கை இமை பொருத்திக் கொள்வதால் கண்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து, கண் மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீனிவாசன் கே.ராவிடம் கேட்டோம்.

''கண்களை அழகாகக் காட்டும் இமைகள், சிலருக்கு குறைவாக இருக்கும். இதனால் அழகிருந்தும், கண்கள் ஜீவனற்றுத் தெரியும் என்பதற்காக செயற்கை இமை பொருத்திக் கொள்கின்றனர். கண் ரப்பை பகுதியில் செயற்கை இமையை ஒட்டுவதால், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இருந்தாலும், கண் அலர்ஜி, தோல் அலர்ஜி, பாதிப்பு இருப்பவர்கள் பயன்படுத்தும்போது கண்களில் அரிப்பு, சிவந்து போதல், தடிப்பு, வீக்கம் ஏற்படலாம்.  கண்களில் விடாமல் நீர் வடியலாம். கண்களைக் கசக்கும்போது இயற்கையாக இருக்கும் இமைகளின் முடியும் உதிரலாம். பயன்படுத்துவதற்கு முன்பும், பின்பும் கண்களைச் சுத்தமான சுடுநீரால் கழுவிக் கொள்ளவேண்டும். இதனால் விழிகளுக்குள் பசை பரவாமல் தடுக்கலாம். தூங்கும்போது கண்களில் விளக்கெண்ணெய்த் தடவிக்கொள்வது நல்லது. செயற்கை கண் இமை, அதற்கு பயன்படுத்தப்படும் பசை இவை தரமானதா என்று பார்த்து வாங்குங்கள்'' என்கிறார்.

- ரேவதி,

படங்கள்: ர.சதானந்த்,

மாடல்: சிந்தியா