

கர்ப்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சி நல்லபடியாக இருக்க பரிசோதனைகள், சத்துணவு, ஊட்டச்சத்து மாத்திரைகள்... போன்றவற்றை எடுத்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் ஒரு பெண். அதன்பிறகு, குழந்தையின் தலை எப்போது நிற்கும்? எப்போது தவழும்? எப்போது பேச ஆரம்பிக்கும்? செவியின் கேட்கும் திறன் சரியாக உள்ளதா?.. என்பதுபோன்ற சந்தேகம் பெற்றோருக்கு இருந்துகொண்டே இருக்கின்றன. பிறந்தது முதல் குழந்தை சந்திக்கும் வளர்ச்சிப் பருவங்கள், பிரச்னைகள், தொற்றுநோய்கள் பற்றிய பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார் குழந்தைகள் நலன் மற்றும் பச்சிளம் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் கல்பனா பரணிகுமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'இன்றைக்கு பெரும்பாலான பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தை உயரமாக இல்லை என்பதுதான் பெருங்கவலை. இதற்காக, விளம்பரப்படுத்தப்படும் ஊட்டச்சத்து பானங்களை வாங்கிக்கொடுக்கின்றனர். குழந்தை உயரம் குறைவாக உள்ளது என்று நினைத்தால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுக வேண்டும். குழந்தை உயரம் குறைவதற்கு மரபியல், ஹார்மோன், ஊட்டச்சத்து குறைபாடு என்று பல்வேறு காரணங்கள் உள்ளன. என்ன காரணத்தால் உயரம் குறைவாக உள்ளது என்று கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் மட்டுமே குழந்தை போதுமான உயரத்தை எட்ட உதவ முடியும்.
குழந்தைகள் சரியாகச் சாப்பிடுவதில்லை. ஆனால், நொருக்குத் தீனிகள் என்றால் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்று பல பெற்றோர் கள் என்னிடம் குழந்தையை அழைத்துவருகிறார்கள். குழந்தைக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதன்பிறகு கொஞ்சம் திட உணவை அறிமுகப்படுத்தலாம். உணவைக் கட்டாயப்படுத்தி ஊட்டும்போது அவர்களுக்கு உணவின் மீது வெறுப்பு ஏற்படுகிறது. விதவிதமான உணவை அவர்களுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். 10 மாதங்களுக்குப் பிறகு தானாக எடுத்துச் சாப்பிட குழந்தையைப் பழக்கவேண்டும்.
கொழுகொழு குழந்தைதான் ஆரோக்கியம் என்று பெற்றோர் நினைக்கின்றனர். ஆனால், குழந்தைப் பருவத்தில் அதிகரித்த கொழுப்பை பிற்காலத்தில் என்ன உடற்பயிற்சி செய்து குறைத்தாலும்கூட சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தத்துக்கான வாய்ப்பைக் குறைக்க முடியாது. எனவே, குழந்தை அந்தந்த வயதுக்கு ஏற்ற உயரம் மற்றும் எடை உள்ளதா என்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும்' என்று தெளிவுபடுத்துகிறார் டாக்டர் கல்பனா.

- பா.பிரவீன்குமார், படம்: ஆ.முத்துகுமார்