Published:Updated:

மருந்து விலை குறையுமா?

நலம், நலமறிய ஆவல். டாக்டர் விகடன் வழங்கும் ஆரோக்கியப் பக்கம்!

மருந்து விலை குறையுமா?
மருந்து விலை குறையுமா?
##~##
மா
த்திரை மருந்துகளின் விலையைக் கேட்டாலே அட்டாக் வந்துவிடுகிறது. பல முன்னணி நிறுவனங்கள் அவற்றின் பிராண்டுகளை பிரபலப்படுத்தவும் சந்தைப்படுத்தவும் கோடிக்கணக்கில் செலவிடுகின்றன. அந்தச் செலவுகளை அப்பாவி நோயாளிகளின் தலையில் கட்டிவிடுகின்றன.  

குறிப்பிட்ட பிராண்ட் மருந்தை சிபாரிசு செய்யாமல், அந்த மருந்தின் பொதுப் (Generic) பெயரை டாக்டர்கள் பரிந்துரை செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் நிச்சயம் இந்த அதிரடி விலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதுகுறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

தற்போது டாக்டர்கள் மருந்தின் பிராண்ட் பெயரை மட்டுமே நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கிறார்கள். காய்ச்சலுக்கு கால்பால், குரோசின், டோலா, பி-500 போன்ற பல பிராண்டு பெயர்களில் மாத்திரைகள் இருக்கின்றன. புதிய சட்டம் அமலுக்கு வந்தால், டாக்டர்கள் இந்த மருந்துகளின் பொதுப் பெயரான 'பேரசிட்டமால்' (Paracetamol) என்பதை மட்டுமே எழுதிக் கொடுக்க வேண்டும்.

''சோப்பு, ஷாம்பு, டிவி, ஃபிரிட்ஜ் போன்றவற்றை வாங்கும்போது வாடிக்கையாளர்கள் அவர்களுக்குப் பிடித்த பிராண்டுகளைத் தேர்ந்தெடுத்து வாங்க முடிகிறது. அதேநேரத்தில், மருந்து, மாத்திரைகளில் டாக்டர்கள் பரிந்துரைக்கும் பிராண்டை மட்டுமே வாங்க முடிகிறது. மேலும், டாக்டர் எழுதிக் கொடுக்கும் மருந்து  குறிப்பிட்ட மருந்துக் கடைகளில் மட்டும்தான் கிடைக்கும். அந்த வகையில் மருந்து வாங்கவே அதிகமாக அலைய வேண்டி வரும். பல நேரங்களில் டாக்டருக்கு போன் செய்து வேறு மாத்திரை கேட்க வேண்டி வரும்.

பொதுப் பெயரை பரிந்துரை செய்வது வழக்கத்துக்கு வந்துவிடும்பட்சத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் செலவு கணிசமாக குறைந்துவிடும். விளம்பரம் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட செலவுகளையும் தவிர்த்து விடுவார்கள். இதனால், மருந்தின் விலை நிச்சயம் குறையும்!'' என்றார்கள் மருத்துவத் துறை வல்லுநர்கள்.

கடந்த 2010-ம் ஆண்டில், மத்திய சுகாதார அமைச்சகம் தன் கட்டுப்பாட்டிலுள்ள அரசு மருத்துவ மனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் மருந்தின் பிராண்டு பெயருடன் பொதுப் பெயரையும் பரிந்துரைக்க வேண்டும் என்று  கேட்டிருக்கிறது. இதனை நாடு முழுக்க தனியார் மருத்துவமனைகளிலும் அமல்படுத்த, மத்திய சுகாதார அமைச்சகத்தை அணுக மத்திய ரசாயன மற்றும் உரத்துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா திட்டமிட்டு வருகிறார்.

மருந்து விலை குறையுமா?

''பொதுப் பெயரை டாக்டர்கள் பரிந்துரை செய்யும்போது ஒட்டுமொத்த மருந்து தயாரிப்பு  விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. இதனால் மருந்துகளின் விலை சுமார் 50 சதவிகிதம் குறையக் கூடும். மருந்து விற்பனை என்பது மாநில அரசு தொடர்புடைய விஷயமாக இருப்பதால் இது தொடர்பாக எழக்கூடிய சட்டச் சிக்கல்களையும் ஆராய்ந்து வருகிறோம்'' என்கிறார் அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா.

மருந்து விலை குறையுமா?

பொதுப் பெயரை டாக்டர்கள் பரிந்துரை செய்வது உண்மையில் மக்களுக்கு நல்லதாக அமையுமா? இந்திய மெடிக்கல் அசோசியேஷனின் தமிழ்நாடு பிரிவு மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால், ''அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் டாக்டர்கள் மருந்து பொது பெயரை எழுதிக் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில், தனியார் மருத்துவர்கள் அதை செய்வார்களா என்பது சந்தேகமே. இப்படி பொதுப் பெயரில் மருந்துகள் விற்பனை செய்யப்படும்போது, பல பெயர் தெரியாத நிறுவனங்கள் மருந்தை மொத்தமாக கொள்முதல் செய்து அவற்றை பாக்கெட்டில் அடைத்து விற்க வழி இருக்கிறது. அப்போது மருந்துகளின் தரம் மற்றும் அதன் சுகாதாரம் கேள்விக்குறியாக இருக்கும். விலைக்கு ஏற்ற தரம்தான் கிடைக்கும்!'' என்கிறார்.

சென்னையின் முன்னணி மருத்துவர்கள் சிலர்,  ''டாக்டர்கள் மருந்தின் ஜெனரிக் பெயரை எழுதிக் கொடுத்து விடுகிறார்கள் என்றால், மருந்துக் கடைக்காரர் கொடுக்கும் மாத்திரை தரமானதாக இருக்குமா? இதனால், ஏற்படும் பக்க விளைவுகளுக்கு அதிகம் செலவிட வேண்டியிருக்கும். மேலும், டாக்டர்கள் மருந்து சீட்டில் பொதுப் பெயரை எழுதினாலும், பிராண்ட் பெயரை சொல்லி அந்த மாத்திரையை மெடிக்கலில் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் எனச் சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளை எல்லாம் சீர் தூக்கி சட்டம் கொண்டு வந்தால் நிச்சயம் மருந்துகளின் விலை குறைந்து மக்கள் மகிழ்வார்கள்!'' என்கிறார்கள்.

- சி.சரவணன்

மருந்து விலை குறையுமா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு