Published:Updated:

ஸ்ட்ரெஸ்ஸை விரட்ட... 7 மந்திரங்கள்!

ஸ்ட்ரெஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ட்ரெஸ்

#Health

அனுசுயா எம்.எஸ்

`ஒரே ஸ்ட்ரெஸ்..!' - கொரோனாவுக்குப் பிறகு இந்தப் புலம்பலை இன்னும் அதிகமாகக் கேட்கிறோம்.

நம்மை நம் இயல்பில் இருந்து கொஞ்ச மாகவோ முற்றிலுமாகவோ பிறழச் செய்யும் அக மற்றும் புறக் காரணிகளால், நமது உடலிலும் மனதிலும் உண்டாகும் மாற்றங்கள் நமக்கு ஸ்ட்ரெஸை ஏற்படுத்துகின்றன. இன்றைய சூழலில் நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை முற்றிலுமாகக் களைவது எல்லோருக்கும் எத்தனை தூரம் சாத்தியம் என்பது தெரியவில்லை. ஆனால், `நமக்கு ஸ்ட்ரெஸ் அதிகமா இருக்கு' என்பதைக் கண்டறிந்து, அதைப் பக்குவமாகக் கையாள்வது அவசியம். ஏனெனில், கவனிக்கப்படாமல் அலட்சியப்படுத்தப்படும் மன அழுத்தத்தால் காலப்போக்கில் ஏற்படும் பாதிப்புகளின் பட்டியல் பெரிது.

ஸ்ட்ரெஸ்ஸை விரட்ட...
7 மந்திரங்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உறக்கமின்மை, பசியின்மை, எடை அதிகரிப்பு/ இழப்பு, மாதவிடாய் பிரச்னைகள், ஹார்மோன் சமச்சீரின்மை எனத் தொடங்கும் பட்டியல், மன உளைச்சல், அதீத சுயகழிவிரக்கம், கவனச்சிதறல், தன்னம்பிக்கை இன்மை, தனிமையாக உணர்தல் என்று நீண்டு, மனச்சோர்வு (Depression) வரையிலும் போகும். நேரங்களில் தற்கொலை முயற்சிக்குக்கூட வழி வகுப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இதனால்தான் மன அழுத்தத்தைக் கண்டறிவதும், அதன் காரணங்களை ஆராய்ந்து அதைக் கட்டுப் படுத்திக் கையாள்வதும் முக்கியம்.

`Each human is different entity' என்பதால் மன அழுத்தத்துக்கான காரணங்கள் நபருக்கு நபர் மாறுபட்டாலும், அதிலிருந்து விடுபடுவதற் கான சில பொதுவான மற்றும் எளிய வழிமுறைகள் இங்கே.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

1. ஊற்றுக்கண்ணைக் கண்டறிவது

RCA (Root Cause Analysis) என்ற பதத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது பிரச்னை யின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிவது. நம் இயல்பைப் பாதித்து நம்மைப் பதற்றத்துக்கு உள்ளாக்குவது எது/எவை/யார் என்றறிவது அவசியம். Stressors எனச் சொல்லப்படும்

இக்காரணிகளைக் கண்டுபிடிக்கும்பட்சத்தில், அவை நம்மை மேற்கொண்டு பதம்பார்க்காமல் இருப்பதற்கான வழிமுறைகளை அடைவதும் சுலபம்.

2. திட்டமிடல்

`எது பண்ணினாலும் பிளான் பண்ணி பண்ணணும்' என்ற வடிவேலுவின் நகைச்சுவை, உண்மையில் ஒரு வாழ்க்கைத் தத்துவம். திட்டமிட்டுத் தொடங்கப்படும் எந்த ஒரு நாளும், வேலையும் நல்ல பலனைத் தரும் என்கின்றனர் சாதனையாளர்கள். பெரும் நிறுவனங்களில் உயர் பொறுப்பில் இருக்கும் பெண்கள் பலரும் தங்கள் வெற்றிக்கான முதல் காரணமாகச் சொல்வது இந்தத் திட்டமிடலைத்தான். பல கோடி லாபம் அடைவ தற்கான வியூகங்களை வகுப்பது தொடங்கி, மறு நாள் செய்யப்போகும் பனியாரத்துக்கான அரிசியை இன்றிரவு உறங்கப்போகும் முன் ஊறப்போடுவது வரை அனைத்தும் திட்டமிடல்தான். இந்தப் பழக்கம் ஸ்ட்ரெஸை குறைக்க மிகவும் கைகொடுக்கும்.

ஸ்ட்ரெஸ்ஸை விரட்ட...
7 மந்திரங்கள்!

3. ஒரு நேரத்தில் ஒரு வேலை

நம்மில் பலரும் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் மல்டி டாஸ்க்குக்கு பிரியப்பட்டாலும், எல்லா நேரங்களிலும் அதற்கு நம் மனம் ஒத்துழைப்பதில்லை. அஷ்டாவதானியாக முயன்று எல்லாவற்றையும் தொடங்கி எதையும் ஒழுங்காகச் செய்யாமல் இருந்தால்... ஸ்ட்ரெஸ் கிர்ரென ஏறும். எனவே, One step at A time எனும்படி ஒவ்வொரு வேலையாக அணுகி முடிப்பது மேல். `இதுதான் முதலில் முடிக்க வேண்டிய வேலை, இது அதற்கடுத்தது' எனப் பட்டியலிட்டு ஒவ்வொன்றாகச் செய்யலாம்.

4. உடற்பயிற்சி

சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய... வீட்டில் இருந்தபடியே செய்யும் தேகப் பயிற்சிகள், யோகா, பிடித்த பாடல்களைக் கேட்டபடியே மேற்கொள்ளும் நடைப்பயிற்சிகள் போன்றவை நிச்சயமாகப் புத்துணர்வைத் தரும். மனதின் அழுத்தங்கள் நீங்கும். `ஆனால் இவற்றையெல்லாம் யாரிடம் போய்க் கற்றுக்கொள்வது?' என, போன தலைமுறையைப்போலத் தேடும் தேவை இல்லை. வீட்டில் இருந்தபடியே பார்த்துச் செய்ய பல யூடியூப் சேனல்கள் உள்ளன, ஆன்லைன் டியூட்டர்கள் உள்ளனர்.

5. நல்லுணவு

உணவே மருந்து என்றோதிய மரபில் வந்தவர்கள் நாம். பசியை அடக்கி, மறந்து, துறந்து, தோன்றியபோது உணவு உண்ணுவதைத் தவிர்த்து, சீரான இடைவெளியில் சமச்சீர் உணவு எனப்படும் Balanced Dietஐ எடுத்துக்கொள்ளவும்; துரித உணவுகள் தவிர்க்கவும். நினைவிருக்கட்டும்...

`பசி வந்தா நீ நீயா இருக்கமாட்ட!'

6. தட்டுங்கள் திறக்கப்படும்

மௌனத்தில் துன்பங்களை புதைக்காதீர்கள். ஒரு பிரச்னை என்றால் நெருக்கமானவர்களிடம் அதைப் பற்றிப் பேசுவது, அதிலிருந்து விடுபட அல்லது அதைக் கையாள ஆலோசனை கேட்பது அவசியம். மேலும், `Third eye view' எனப்படும், நாம் அதுவரை அணுகாத ஒரு புதிய கோணத்தில் நம் பிரச்னையை அவர்கள் அணுகி தீர்வுகாணவும் அது உதவலாம்.

7. உங்களுக்கான நேரம்

24 மணி நேரம் கொண்ட ஒரு நாளில், உங்களுக்கே உங்களுக்கு என, உங்கள் சந்தோஷத்துக்காகச் சிறிது நேரம் ஒதுக்குவதும், அதை நேர்மறை எண்ணங்களைத் தரவல்ல, அல்லது ஆக்கபூர்வமான விஷயங்களுக்குச் செலவிடுவதும் அவசியம். மனதுக்கு உற்சாகத்தை அளிக்கும் இசை கேட்பது, நடனம் ஆடுவது, ஓவியம் வரைவது, இயற்கையுடன் நேரம் செலவழிப்பது, மொட்டை மாடிக்குச் சென்று கூடடையும் பறவைகளைக் காண்பது என அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவ்வாறு ஒதுக்கிய நேரத்தில் உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள். அல்லது ஒன்றுமே செய்யாமல் `சும்மாவே'கூட இருங்கள். ஆனால், அந்த சும்மா இருக்கும் நிமிடங்கள் `உங்களுக்கு மட்டுமே' உரியது என்ற தெளிவுடன் இருங்கள்.

நிம்மதி உங்கள் சாய்ஸ்!