Published:Updated:

முதுமையில் மறதி

'மறக்கக்கூடாத' குறிப்புகள்

பிரீமியம் ஸ்டோரி
##~##

சென்னையைச் சேர்ந்த நடுத்தரக் குடும்பத்து முதியவர் ராஜாராமன். ஒருநாள், வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.  பதறிய குடும்பம் பல இடங்களில் தேடியும் முதியவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒன்றரை மாதங்களாகத் தொலைந்து போன தன் தந்தையை காவல்துறையின் உதவியோடு, முதியோர் இல்லத்தில் பார்த்த மகளையே பெற்ற தந்தையால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போனதுதான் வேதனையின் உச்சம்.   

துணையின்றி வெளியே சென்ற அந்த முதியவரால், வீடு திரும்பவோ, தன்னைப் பற்றிய விவரங்களைக் கூறவோ முடியாமல் போயிருக்கிறது. எந்த நினைவுகளும் அவரது நினைவில் இல்லாததுதான் இதற்குக் காரணம். 'சித்தம் போக்கு... சிவன் போக்கு...’ என்று, நாள் கணக்கில், வீதியில் அலைந்துகொண்டு இருந்தவரை மீட்டு, முதியோர் இல்லம் ஒன்றில் சேர்த்திருக்கின்றன, சில நல்ல உள்ளங்கள்.

ஞாபக மறதி என்பது எல்லோருக்கும் இயல்பாகவே இருக்கும். ஆனால், வீடு, ஊர், சொந்த பந்தங்கள் என, தன்னிலை மறந்து திரியும் முதியோர்களின் நிலைதான் பரிதாபத்துக்கு உரியது. இதுபோன்ற முதியோருக்கு வரும் முற்றிலுமான மறதியை, 'அல்ஸைமர்’ஸ் டிமென்ஷியா’ என்னும் 'ஞாபகமறதி நோய்’ என்கிறது மருத்துவம்.

முதுமையில் மறதி
முதுமையில் மறதி

'டிமென்ஷியா’ என்ற வார்த்தை, 'நினைவுத் திறன் மங்கல்’ என்று பொருள் தரும். வயது ஏற ஏற, மூளை சுருங்கி, அந்தப் பகுதியில் 'அமலாய்டு’ என்னும் ரசாயனம் படியும். இதனால், மூளையின் செல்கள் மடிந்து, நினைவுத் திறன் குறையும்.

''இந் நோய் பற்றிய சரியான புரிதலும் விழிப்பு உணர்வும் இன்னும் நம்மிடையே ஏற்படவில்லை. 'வயசாயிடுச்சுல்ல... இது சகஜம்தான்!’ என்று மிகச் சாதாரணமாக எடுத்துக்கொண்டு கடந்துபோய் விடுகிறோம். படித்தவர்களே இப்படி என்றால், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களின் நிலை இன்னும் பரிதாபம்'' என்கிறார் 'அல்ஸைமர்ஸ் அண்ட் ரிலேட்டட் டிஸார்டர்ஸ் சொஸைட்டி ஆஃப் இந்தியா’ (ARDSI) அமைப்பின் தலைவர் மீரா பட்டாபிராமன்.

''60 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தாக்கும் இந்த நோய், அவர்களின் நினைவுத் திறனைக் கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடிக்கும். இதனால், எதற்கெடுத்தாலும் சந்தேகம், கோபம், தன்னிரக்கம் போன்ற மோசமான பின்விளைவுகளையும் உண்டாக்கும். இறுதியில் அவர்களின் ஆளுமையே தொலைந்து போய், மிகுந்த மன பாதிப்புக்கும் உள்ளாகிவிடுவார்கள். இதனால் அவரைச் சார்ந்த குடும்பத்தினருக்கும் பல்வேறு பிரச்னைகள் தலைதூக்கும். இந்தப் பாதிப்புக்கு உள்ளானவர்களை அன்போடும் பரிவோடும் பொறுமையோடும் கவனித்துக்கொள்ள வேண்டியது, குடும்பத்தினரின் கடமை'' என்கிற மீரா பட்டாபிராமன்,

'அல்ஸைமர்ஸ் டிமென்ஷியா’ நோய் வருவதற்கான காரணங்களைச் சொன்னார்.

'' 60-வயதைத் தாண்டியவர்களில் நூற்றில் ஐந்து நபர்களையும், 85 வயதைத் தாண்டியவர்களில் ஐந்து நபர்களில் ஒருவரையும் பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், இந்தியாவில் மட்டும் 38 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2050-ல் இந்த எண்ணிக்கை ஒரு கோடியாக மாறும் நிலை உருவாகலாம். பெண்களை விட ஆண்களை, அதுவும் பக்கவாதம் தாக்கிய ஆண்களை, மிக விரைவில் இந்த நோய் தாக்குகிறது.  பரம்பரையில் யாருக்கேனும் இந்த நோய் இருந்தால், வாரிசுகளுக்கு வரும் ஆபத்து அதிகம். படித்தவர்களைக் காட்டிலும், படிக்காதவர்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம். காரணம், படித்தவர்களின் மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. இருப்பினும், தீவிர பக்கவாதம் தாக்கியவர்களுக்கு இந்த நோய் எளிதில் தாக்க வாய்ப்பு உண்டு. புகைபிடிப்பவர்களை 'டிமென்ஷியா’ சுலபமாகத் தாக்கலாம். தலையில் பலத்த காயம் ஏற்பட்டாலோ, விபத்திலோ, விளையாடும்போதோ தலையில் அடிபட்டால் உடனே ஸ்கேன் செய்து விடுவது நல்லது.''

முதுமையில் மறதி

இந்த அமைப்பின் துணைத்தலைவரும் சென்னை சேப்டரின் செயலருமான பிரபல மனநல மருத்துவர் சத்தியநாதன், இந்நோயின் அறிகுறிகளைப் பட்டியல் இடுகிறார்.

''சமீபத்திய நிகழ்ச்சிகள் மறந்து போவதன் மூலம் மிகவும் பழக்கப்பட்ட வேலைகளைச் செய்வதில்கூட சிரமப்படுதல், முறையாக உரையாட முடியாமல் போதல், நேரம் மற்றும் இடங்களைப் புரிந்துகொள்வதில் தடுமாற்றம், சிந்திப்பதில் பிரச்னை, முடிவு எடுப்பதில் குறைபாடு, நடவடிக்கைகளில் மாற்றம், ஆளுமையில் மாற்றம், ஒரு செயலைத் துணிச்சலுடன் தொடங்கத் தயக்கம்... இவற்றில் ஏதேனும் ஒன்றோ, அதற்கு மேற்பட்ட அறிகுறிகளோ தொடர்ச்சியாக ஒருவரிடம் காணப்பட்டால் அவருக்கு, 'டிமென்ஷியா’ இருக்கலாம். இந்த அறிகுறிகளால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் அளவுக்குப் போகும்போது, உடனடியாக ஒரு மனநல மருத்துவரையோ, நரம்பியல் நிபுணரையோ ஆலோசிப்பது நல்லது. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, மருந்துகள் கொடுத்தால் கட்டுப்படுத்தலாம்'' என்கிறார், டாக்டர் சத்தியநாதன்.

'டிமென்ஷியா’ பற்றிய விழிப்பு உணர்வு மற்றும் இதர பணிகளில் தம்மை முழுமையாக

முதுமையில் மறதி

அர்ப்பணித்துக்கொண்டவரும், கிஸிஞிஷிமி - சென்னைப் பிரிவின் திட்ட இயக்குநருமான பி.கே. அறிவழகன், ''அரசு இதற்காக எடுத்திருக்கும் நடவடிக்கைகள் மிகக் கொஞ்சமே...! ஊடகங்களிலும் இதற்கான பெரிய பிரசாரம் இல்லை. என்னதான் ரேடியோ, டி.வி., பத்திரிகை என ஊடகங்களின் மூலம் நாங்கள் உரக்கக் குரல் கொடுத்தாலும், இன்னும் சரியாக யார் காதிலும் விழவில்லை என்பதுதான் சோகம்!'' - என்கிறார்.

''உங்கள் குடும்பத்தில் யாரேனும் முதியவருக்கு இந்தக் கொடிய நோய் வந்துவிட்டால், நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதை அவர் உணரும் வகையில் நடந்துகொள்ளுங்கள். அவர்கள், திரும்பத் திரும்பச் சொல்லும் விஷயங்களை அலட்சியப்படுத்தாமல் பொறுமையுடன் கேளுங்கள். அவர்களுக்கென நேரம் ஒதுக்குங்கள். நம்பிக்கை ஊட்டும் விதமாகப் பேசுங்கள். குடும்பத்தினரின் உரையாடலில் அவரையும் சேர்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக, மற்றவர் முன் அவரை விமர்சிப்பதைத் தவிர்த்திடுங்கள்'' என்றார் சத்தியநாதன்.

முதியோர் இருக்கும் வீடுகளில் இணக்கமான சூழல் ஏற்பட, சில டிப்ஸ் வழங்கினார் டாக்டர்.

முதுமையில் மறதி

முதியவர்கள் நடந்து செல்லும் வழிகளில் இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

முதுமையில் மறதி

 சமையல் முடிந்ததும் கேஸ் சிலிண்டரை மூடிவிடுங்கள்.

முதுமையில் மறதி

தீப்பெட்டி, கொசுவிரட்டி மருந்துகள், பினாயில் போன்ற ஆபத்தான பொருட்களை மறைவாக வையுங்கள்.  

முதுமையில் மறதி

பர்னிச்சரின் முனைகள் கூர்மையானதாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.  

முதுமையில் மறதி

 தனியாக வெளியிடங்களுக்கு அனுப்பாதீர்கள்.

முதுமையில் மறதி

வெளியில் இருந்து திறப்பது போல, பாத்ரூமின் பூட்டுகளை அமையுங்கள்.

இப்படி, பல எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம், பாதிப்புக்கு உள்ளான முதியவர்களை எப்போதும் ஆரோக்கியமாக வாழ வழி செய்யலாம்.

- பிரேமா நாராயணன்

படங்கள்: எம்.உசேன், ப.சரவணகுமார்

முதுமையில் மறதி

நோய் அறிதல்:

ஒருவருடைய மனம் மற்றும் உடல் நிலைகளை மிகவும் நுணுக்கமாகக் கண்காணிப்பதன் மூலம் அறியலாம்.  'சிறு மனநிலை பரிசோதனை’ (MMSE)என்ற எளிய பரிசோதனையின் மூலமும் கண்டுபிடிக்கலாம்.

முதுமையில் மறதி

 அக்கறை காட்டுவோம்!

ஆதரவு இல்லாமல் அல்லல்படும், 'அல்ஸைமர்ஸ் டிமென்ஷியா’ நோயாளிகளுக்காகவே, இந்தியாவில் ஐந்து இடங்களில் 'உறைவிட இல்லங்கள்’ (ரெசிடென்ஷியல் கேர் சென்டர்) இயங்குகின்றன. அங்கே பராமரிப்பவர்கள் (கேர் கிவர்ஸ்) உதவியுடன், முதியோர்கள், தங்கள் வேலைகளைச் செய்துகொள்கின்றனர். மெல்ல மெல்லக் குறையும் நினைவுத் திறனைத் தக்கவைத்துக்கொள்ள சிறு சிறு பயிற்சிகள், விளையாட்டுகள் கற்றுத்தரப்படுகின்றன. 'சென்னையில் அண்ணா நகரில், 'டிமென்ஷியா’ நோயாளிகளுக்கென ஞாபகத்திறன் பரிசோதனைக் கூடமும் (மெமரி கிளினிக்), பகல் நேர பராமரிப்பு மையமும் (டே கேர் சென்டர்) உள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு