பிரீமியம் ஸ்டோரி

பி.ராஜலட்சுமி, மதுரை

கன்சல்டிங் ரூம்

'பள்ளிக்குச் செல்லும் என் குழந்தைகள், ஓடி விளையாடிக் களைத்து, உடலில் வியர்வை, அழுக்குப்படிய வீடு திரும்புகின்றனர். என் கணவரோ, 'குழந்தைகள் நன்றாக விளையாடட்டும், அதுதான் அவர்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது’ என்கிறார். வெளியே ஆட்டம்போட்டுத் திரும்பும் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்னை வருமோ என்று பயமாக இருக்கிறது. குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் காக்க நான் என்ன செய்யட்டும்?'

கன்சல்டிங் ரூம்

டாக்டர் ஸ்டாலின், பொது மருத்துவர், புதுச்சேரி.

'உங்கள் கணவர் கூறியதுதான் சரி. நன்றாக ஓடி ஆடி விளையாடும் குழந்தைகள், ஆரோக்கியமாக இருப்பார்கள். விளையாடுவதால், குழந்தைகளின் எலும்பு மற்றும் தசைகள் வலுப்பெறும். மற்ற குழந்தைகளோடு விளையாடும்போது பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்வார்கள். கூச்ச சுபாவம் விலகும். உதவும் மனப்பான்மை அதிகரிக்கும்.

டி.வி. பார்ப்பது, கம்ப்யூட்டர் கேம்ஸ், செல்போனில் கேம்ஸ் எல்லாம் குழந்தைகளை வீட்டிலேயே முடக்கிப்போடுவதால், உடல்பருமனுக்கு வழிவகுத்துவிடும். வியர்வை என்பது மனித உடலில் உள்ள கழிவு. விளையாடும்போதுதான் அந்தக் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.  விளையாடிவிட்டு வீட்டுக்குக் குழந்தைகள் வந்ததும், 15 நிமிடங்கள் கழித்து, குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். அதேபோல், நகங்களை அவ்வப்போது வெட்டி அழுக்கு சேராத வகையில் பராமரிக்கக் கற்றுக்கொடுங்கள். சுத்தமாகக் கை கழுவுவது குறித்து, குழந்தைகளிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துங்கள். இதையெல்லாம் பின்பற்றினால் எந்தக் கிருமிகளும் உங்கள் குழந்தைகளை அண்டாது.'

சந்தோஷ், மதுரை

##~##

'எனக்கு வயது 30. புகையிலைப் பொருட்களை மெல்லும் பழக்கம் இருந்தது. 'வாய் புற்றுநோய்’ வருமோ என்ற பயத்தில், அந்தப் பழக்கத்தை நிறுத்தி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும், வாய் புற்றுநோய் வந்துவிடுமோ என்ற பயம் உள்ளது. ஆலோசனை கூறுங்கள்?'

கன்சல்டிங் ரூம்

டாக்டர் க.மணிவண்ணன், பொது மருத்துவர், வேலூர்.

''புகையிலைப் பொருட்களை மெல்லுபவர்களுக்கு, புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது. தற்போது இந்தப் பழக்கத்தை நிறுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன சரி. ஆனால்,, எத்தனை வருடங்களாகப் புகையிலையை உபயோகப்படுத்தினீர்கள் என்று தெரியவில்லை. புகையிலை, பான்பராக், குட்கா வகைகளை நீண்ட நேரம் வாயில் வைத்திருப்பதால் தோலில் உள்ள படர்வின் தன்மை மாறிவிடும். தோலில் உள்ள செல்கள், அரிப்பின் காரணமாக இயற்கையான நிலையை இழந்துவிடும். இரண்டு ஆண்டுகள் புகையிலைப் பழக்கத்தை நிறுத்தி இருந்தாலும் மருத்துவமனையை அணுகுவது நல்லது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்வது அவசியம். புற்றுநோய்க்கு, தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. எனவே, மனதைப்போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் தைரியமாக பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.'

மோகனா, கோயம்புத்தூர்.

'கல்லூரி மாணவி நான். எனக்கு மாதவிலக்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறைதான் வருகிறது. வந்தால், 7-8 நாட்கள் வரை அதிக அளவு ரத்தப்போக்கு இருக்கிறது. வயிறு, கால் வலி அதிகமாக உள்ளது. மாதவிலக்கு சீராக வருவதற்கு ஏதேனும் சிகிச்சை இருக்கிறதா டாக்டர்?'

கன்சல்டிங் ரூம்

டாக்டர் மதுபாலா, மகப்பேறு மருத்துவர், திருநெல்வேலி.

'இன்றைக்கு, பெரும்பாலான பெண்கள் அதிகமாக எடை போட்டுவிடுகிறார்கள். உயரத்துக்குத் தகுந்த எடையுடன் இருக்கிறோமா என்பதை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். அத்துடன், தைராய்டு மற்றும் ஹீமோகுளோபின் பரிசோதனையையும் செய்து, அதில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும். நிறைய பெண்களுக்கு 'பாலிசிஸ்டிக் ஓவரி’ (Polycystic ovary)  பிரச்னை இருக்கிறது. கருப்பையில் நீர்க்குமிழி போல இருக்கும். இதை ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். இதனைக் கண்டுபிடித்து உரிய சிகிச்சை எடுப்பதன் மூலம் மாதவிடாய் பிரச்னையை சரிசெய்யலாம். இந்தப் பிரச்னையில் இருந்து முழுமையாக விடுபட வேண்டுமானால், டயட், உடற்பயிற்சி, மருந்து என மூன்று வகையான சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். சத்தான ஆகாரங்களை உரிய நேரத்தில் சாப்பிடுவது முக்கியம். கூடவே, நடைப்பயிற்சி மற்றும் யோகா கண்டிப்பாகச் செய்ய வேண்டும். உடனடியாக, அருகில்  இருக்கும் மகளிர் சிறப்பு மருத்துவரைச் சந்தித்து, போதிய சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் மாதவிடாய் பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டுவரலாம்.'

படம்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு