Published:Updated:

ஆஸ்ட்டியோபோரோசிஸ்... அலட்சியம் வேண்டாம்!

ஆஸ்ட்டியோபோரோசிஸ்... அலட்சியம் வேண்டாம்!

##~##

50 வயதைக் கடக்கும்போது, உடல் உபாதைகள் ஒவ்வொன்றாக வந்து சேரும். முதுமைக்கே உரிய தள்ளாமை, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், கண் பிரச்னை, செவித்திறன் குறைபாடு என ஏகப்பட்ட பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கும். எலும்பு தேய்மானம் தொடர்பான பிரச்னைகளும் வந்து வாட்டும். எளிதில் உட்கார முடியாமல், நிற்க முடியாமல் போகலாம். 

''ஒவ்வொருவரும் தங்களின் உடல் எலும்புகளை வலுவாகவைத்துக்கொள்வதில், அக்கறை செலுத்தாமல் போனால், வருங்காலத்தில்  'ஆஸ்ட்டியோபோரோசிஸ்’ என்ற 'எலும்புத் திண்மைக் குறைவு’ நோயால் அவதிப்பட நேரிடும். இந்த நோய் உடலில் இருப்பது சம்பந்தப்பட்டவருக்கே தெரியாது. முற்றிய நிலையில்தான் எலும்பு முறிவு மற்றும் கூன் விழுதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்'' என்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் எலும்பு மூட்டு சிறப்பு மருத்துவர் சசீந்தர்.

ஆஸ்ட்டியோபோரோசிஸ்... அலட்சியம் வேண்டாம்!

'ஆஸ்ட்டியோபோரோசிஸ் என்றால் என்ன?'

'நமது உடலை தாங்கிப் பிடிப்பது எலும்புகள். 'ஆஸ்ட்டியோபோரோஸிஸ்’ என்பது எலும்பில் ஏற்படும் ஒருவிதக் குறைபாடு. ஒவ்வோர் எலும்பும், குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும். பழைய எலும்பு செல்கள் நீக்கப்பட்டு, புதிய செல்கள் உருவாகும். இளமையில் புதிய செல் மிக விரைவாக உற்பத்தியாகும். அதே நேரம், பழைய செல்கள் அழிவது என்பது மெதுவாக நடக்கும். ஆனால், முதுமைக் காலத்தில் புதிய எலும்பு செல் உருவாவது தாமதமாகும். பழைய செல்லுக்குப் பதில் புதிய செல், அந்த இடத்தில் உருவாகாமல் போகும்போது, அங்கு சிறுசிறு துவாரங்கள் ஏற்பட்டு எலும்பு வலு இழக்கும். இதன் முற்றிய நிலைதான் எலும்புகள் அடர்வு குறைந்து மிருதுவாகி, கடைசியில் உடைந்து வலியை ஏற்படுத்தும்.'

'யார் யாருக்கு எல்லாம் வரும்? காரணங்கள் என்ன?'

'ஆண், பெண் இருவருக்கும் வரும். ஆனால், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மத்தியிலேயே இது அதிக அளவில் காணப்படும். ஆஸ்ட்டியோபோரோசிஸில் மூன்று வகைகள் உள்ளன. முதல் இரண்டு வகை, இந்தியாவில் அதிகம். 50 வயதைக் கடந்த பெண்களுக்கு மாதவிடாய் முற்றிலும் நின்றவுடன், 'ஈஸ்ட்ரோஜென்’ என்ற ஹார்மோன் குறைபாடு ஏற்படும். இதனால் எலும்புகளில் அதிக அரிப்பு ஏற்பட்டு வலு இழந்துவிடும். இரண்டாவது வகை, வயது முதிர்ச்சியின் காரணமாக ஏற்படும். மூன்றாவது, போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது, புகைபிடிப்பது, மது அருந்துதல், தைராய்டு குறைபாடு, உடல் பருமன் போன்ற பிரச்னைகளால்  ஏற்படக்கூடியது. இது சற்று அரிதாகக் காணப்படுகிறது.'

ஆஸ்ட்டியோபோரோசிஸ்... அலட்சியம் வேண்டாம்!

'இந்த நோய் உள்ளதை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?'

'இந்த நோய் முற்றிய நிலையை அடைய, மூன்று முதல் ஐந்து வருடங்கள் ஆகும். 50 வயதைக் கடந்த ஆண்களும், மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்களும் சற்று விழிப்பு உணர்வுடன் இருந்தால், இந்தப் பிரச்னையில் இருந்து தப்பலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவர்களைச் சந்தித்து, 'டெக்ஸா ஸ்கேன்’ பரிசோதனை செய்து எலும்பின் அடர்த்தியைக் கண்காணிக்க வேண்டும். அதில், 'டீ ஸ்கோர்’ எனச் சொல்லப்படும் அளவு எண் - 2.5 SDக்குக் கீழ் இருந்தால், அது ஆஸ்ட்டியோபோரோசிஸ். அதுவே, 1 முதல் 2.5 SDக்கு இடையே அமைந்தால், அது ஆஸ்ட்டியோபீனியா. எக்ஸ்ரே வழியே இந்த நோயைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், டெக்ஸா பரிசோதனை முறை மிகச் சிறந்தது.'

'சிகிச்சைமுறைகள் என்ன?'

'ஆஸ்ட்டியோபோரோசிஸ் நிலை வருவதற்கு முன்பு, ஆஸ்ட்டியோபீனியா என்ற நிலை உள்ளது. இதை நாம் கண்டுபிடித்துவிட்டால் அறுவைசிகிச்சை இல்லாமலேயே குணப்படுத்திவிடலாம். ஆஸ்ட்டியோபோரோசிஸ் நிலையை எட்டிவிட்டால், எலும்பு முறிவு ஏற்படும். அறுவைசிகிச்சை செய்து முதலில் எலும்புகளை சீர்செய்ய வேண்டும்.  அதன் பிறகு அதற்கான மருந்துகளை உட்கொள்ளுதல் மூலம் ஆஸ்ட்டியோபோரோசிஸில் இருந்து தப்பிக்கலாம். எலும்பு ஆரோக்கியத்துக்கு, வைட்டமின் டி, கால்சியம் மற்றும் உடற்பயிற்சி மிகவும் முக்கியம். கால்சியத்தை நம் உடல் கிரகிக்க வைட்டமின் டி அவசியம். சூரிய ஒளியில் இருந்தே இதைப் பெற முடியும். உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால்,  டாக்டரின் ஆலோசனையின்பேரில் கால்சியம் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம்.''

- நா.இள அறவாழி, ஜெ.ராதாகிருஷ்ணன்

படங்கள்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு