Published:Updated:

பக்கவாதம் பக்கம் வராமல் தடுக்கலாம்!

அக்டோபர் 29, உலக பக்கவாதம் விழிப்பு உணர்வு தினம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

'நிதி நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார், 40 வயது நபர் ஒருவர். மது, புகை என எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர். சில மாதங்களுக்கு முன்புதான் அவர் முழு உடற்பரிசோதனை செய்துகொண்டார். ரிசல்ட் எல்லாமே 'நார்மல்’ என்று வந்தது. திடீரென்று ஒருநாள் இரவில் அவர் பேச்சு குழறியது. பேசக்கூட முடியாமல், மயக்கம், படபடப்பு ஏற்பட்டது. ஒரு பக்கமாக கை - கால் இழுத்துக்கொள்ள, உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார் அவரின் மனைவி. சி.டி. ஸ்கேன் எடுத்ததில் அவருக்குப் பக்கவாதம் வந்திருப்பது உறுதியானது. 

உடனடியாக, அவருக்கு டி.பி.ஏ. என்ற 'டிஷ்ஷூ பிளாஸ்மெனோஜன் ஆக்டிவேட்டர்’ (Tissue Plasminogen Activator) என்ற ஊசி மருந்து செலுத்தப்பட்டு, அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக அவர் இயல்புநிலைக்குத் திரும்பினார். ஒரே மாதத்தில் அலுவலகத்துக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார். கொஞ்சம் தாமதமாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தாலும் உயிரை மட்டும்தான் காப்பாற்றி இருக்கமுடியும். ஆனால், பக்கவாதம் அவரைப் படுக்கையில் போட்டிருக்கும்'' என்று கூறும், சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையைச் சேர்ந்த மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவர் வி.சதீஷ் குமார், பக்கவாதம் வருவதற்கான காரணங்களைச் சொன்னார்.  

பக்கவாதம் பக்கம் வராமல் தடுக்கலாம்!

''மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில், அடைப்பு அல்லது ரத்தக் கசிவால் பக்கவாதம் ஏற்படுகிறது. 85 சதவிகிதம் ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்புதான் (Ischemic stroke) இதற்குக் காரணம். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய் குறுகலானாலோ, அடைப்பு ஏற்பட்டாலோ, ரத்த ஓட்டம் தடைபடும். மூளைக்கு ரத்த ஓட்டம் தடைபடும்போது, அந்தப் பகுதியில் உள்ள மூளை செல்கள், ஆக்சிஜன் மற்றும் உணவு இன்றி உயிர் இழக்க ஆரம்பிக்கின்றன. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நான்கரை மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றால், டி.பி.ஏ. பிரத்யேக மருந்தைச் செலுத்துவதன் மூலம் மூளைத் திசுக்களின் உயிரிழப்பைக் குறைக்கலாம். பக்கவாதத்தின் பின்விளைவுகளைப் பெருமளவு கட்டுப்படுத்தி, இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பலாம்.

பக்கவாதம் பக்கம் வராமல் தடுக்கலாம்!

பக்கவாதம் ஏற்படுவதற்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது, 'ஸ்லீப் ஆப்னியா ’எனப்படும் தூக்கம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் சிகரெட் பழக்கம், அடுத்தவர் ஊதிவிடும் சிகரெட் புகையை சுவாசிப்பது, உடற்பயிற்சிகள் போன்ற துடிப்பான வாழ்க்கை முறையின்மை போன்றவை முக்கியக் காரணங்கள்' என்றவர், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைப்பது பற்றிக் கூறினார்.

'நாற்பது வயதைக் கடந்த யாருக்கு வேண்டுமானாலும் பக்கவாதம் வரலாம். டாக்டரின் ஆலோசனை பெற்று ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றினால் போதும்.  இதய நோய்க்கு, பரிந்துரைக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே பக்கவாதத்துக்கும் பொருந்தும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது, கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பது, புகைப் பழக்கத்தைக் கைவிடுவது, சர்க்கரை அளவை சீராகப் பராமரிப்பது, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவை, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். பக்கவாதத்துக்கான வாய்ப்பு உறுதியானால் தாமதிக்காமல், சி.டி. அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதியுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வது மட்டுமே இந்த நோயில் இருந்து மீளுவதற்கான ஒரே வழி!'' என்கிறார்.

கவனமாக இருப்போம்!

- பா.பிரவீன்குமார்

படம்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு