Published:Updated:

சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கும் குழந்தைகளின் உளவியல் என்ன? #MustRead

சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கும் குழந்தைகளின் உளவியல் என்ன? #MustRead
சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கும் குழந்தைகளின் உளவியல் என்ன? #MustRead

சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கும் குழந்தைகளின் உளவியல் என்ன? #MustRead

2000-ம் ஆண்டுக்கு முன்னர் பிறந்த குழந்தைகளின் பொழுதுகள் பெரும்பாலும் மணல்வீடு கட்டுவதிலும், பம்பரம் விடுவதிலும், பச்சைக்குதிரை தாண்டுவதிலும், கிரிக்கெட் விளையாடுவதிலும் கழிந்தன. `காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுவதும் விளையாட்டு...’ என்ற பாரதியின் வாக்கைப் பின்பற்றிய ஒரு தலைமுறை அன்றைக்கு இருந்தது. பள்ளி முடிந்ததும் புத்தகப்பையைத் தூக்கி வீசிவிட்டு, நண்பர்களோடு சேர்ந்து விளையாடுகிற குழந்தைகள் இருந்தார்கள். தொழில்நுட்பம் அதன் உச்சத்தை எட்டிய 2000-ம் ஆண்டுக்குப் பிறகு குழந்தைகளின் விளையாட்டு நண்பர்கள், விர்ச்சுவல் திரைகளுக்குப் பின்னால் இடம்பெயர்ந்துவிட்டார்கள். இன்று பெரும்பாலான குழந்தைகளின் கையில் கைப்பேசி இருக்கிறது. தங்களது குழந்தை மொபைல்போனைத் தானாக இயக்குவதும் விளையாடுவதும் பெற்றொருக்குப் பெருமையாக இருக்கிறது. சிறு வயதில் நாம் விளையாடிய எல்லா விளையாட்டுகளும் செல்போனில் கிடைத்துவிடுகின்றன. இதனால் வெளியே சென்று விளையாடுவதற்கான ஆர்வம் குறைந்துபோகிறது. 

வெளியே சென்று விளையாடாததால், வீட்டுக்கு அருகில் இருக்கும் பிற குழந்தைகளின் நட்பு குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. பெற்றோர்கள் பள்ளி விடுமுறை நாட்களில்கூட அலுவலக வேலையே கதியாக இருப்பதால், அவர்களும் குழந்தையின் அருகாமையில் இருப்பதில்லை. இப்படிப்பட்ட குழந்தைகளை தனிமை வாட்ட ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் கணினியும் அலைபேசியும் அவர்களின் உற்றத் தோழர்களாக மாறிவிடுகின்றன. விளையாட்டுகளை விளையாடி, விளையாடி அலுத்துவிடும்போது அவர்களின் கவனம் சமூக வலைதளங்கள் பக்கம் திரும்புகிறது. பூக்களால் நிறைந்து ததும்பும் ஒரு வண்ணமயமான தோட்டம்போல அவர்களுக்கு அது தெரிகிறது. தங்களை உண்மையாக நேசிக்கிற அத்தனைபேரும் அங்கே இருப்பதாக நம்புகிறார்கள். வெளியில் தேடவேண்டிய நண்பர்களை மெய்நிகர் உலகில் தேடித் தேடி இணைக்கிறார்கள். பள்ளியில் எந்தக் குழந்தைக்கு ஃபேஸ்புக்கில் அதிக நண்பர்கள் இருக்கிறார்களோ, அதுதான் மற்ற குழந்தைகளுக்கு ஹீரோ. விடுமுறை தினங்களில் வாட்ஸ்அப்பில் நாள் முழுக்க சாட் செய்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். 

தாங்கள் வாழும் சிறு கிணறுதான் உலகம் என்று நம்புகிற கிணற்றுத் தவளைகளின் கதையைப் போன்றதுதான் இந்தக் குழந்தைகளின் வாழ்வும். பள்ளியிலும் வீட்டிலும் இருக்கிற சுவற்றின் நான்கு மூலைக்குள் இவர்களின் பால்யம் முடிந்துபோகிறது. கொஞ்சம் வளர்ந்த பிறகு,  பரந்து விரிந்த உலகத்தை எதிர்கொள்வதற்கான திராணி இல்லாதவர்களாக இந்தக் குழந்தைகள் மாறிப்போகிறார்கள். தெரிந்த மனிதர்களை நேரடியாக அணுகுவதற்குக் கடினமாக உணரும் இந்தக் குழந்தைகள், சாட்டில் யாரென்றே தெரியாதவர்களிடம் மணிக்கணக்கில் பேசுகிறார்கள். உண்மையான உலகத்துக்கு மாற்றாக, தங்களுக்குப் பிடித்த உலகத்தை செயற்கையாக வடிவமைக்கிறார்கள். அங்கே இஷ்டத்துக்கு அன்ஃப்ரெண்டும், பிளாக்கும் செய்கிறார்கள். ஒரே கிளிக்கில் மனிதர்களை அன்ஃப்ரெண்ட் செய்ய முடியாத உண்மையான வாழ்க்கை இவர்களுக்குப் பிடிப்பதில்லை. இதனால் பிற மனிதர்களைப் புரிந்துகொள்ளுதல், அனுசரித்துச் செல்லுதல் போன்ற அடிப்படை விஷயங்கள் இவர்களிடம் இல்லாமல் போகின்றன. 

தன்னுடைய புகைப்படத்துக்கு ஐந்து லைக்குக்கு மேல் வராதது குறித்து இந்தக் குழந்தைகளுக்கு மனவருத்தம் ஏற்படுகிறது. தாங்கள் அழகானவர்கள் இல்லையென்ற தாழ்வுணர்ச்சிக்கு மிக இளம் வயதில் ஆட்படுகிறார்கள். இது குழந்தைகளின் தனிமையை இன்னும் கொஞ்சம் அதிகமாக்குகிறது. குழந்தைகள் எல்லோருமே அழகானவர்கள்தான்; ஃபேஸ்புக் லைக்குகள் இதைத் தீர்மானிப்பதில்லை என்பதை அவர்களுக்கு யாரும் சொல்வதில்லை. 

எல்லாத் தகவல்களையும் கொட்டித்தரும் இணையத்தில் தேவையற்ற செய்திகளுக்குப் பின்னால் போகிறார்கள். ஆண், பெண் உடல் பற்றிய புரிதல்கள் இன்றி தவறான இணையதளங்களில் சிக்கிக்கொள்கிறார்கள். காதல், காமம் போன்ற விஷயங்கள் மிக இளம் வயதிலேயே இவர்கள் மூளைக்குள் சென்றுவிடுகிறது. யார் சொல்வது உண்மை, யார் சொல்வது பொய் என்பதைப் புரிந்துகொள்ளும் வயதை எட்டாத இந்தக் குழந்தைகள் சமூக விரோதிகளால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். என்ன ஏதென்றே அறியாத வயதில் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

வளர் இளம் பருவத்தினரிடம் உறவுமுறைச் சிக்கல்கள் பெரிய அளவில் ஏற்படுகின்றன. நமது திரைப்படங்கள் காட்டும் காதலை சமூக வலைதளங்களில்தான் இவர்கள் செய்துபார்க்கிறார்கள். ஆணும் பெண்ணும் தங்களை நன்றாகப் புரிந்துகொண்டு இயல்பாக மலரவேண்டிய காதலை யாரென்றே தெரியாதவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் காதலித்து, ஃபேஸ்புக்கிலேயே பிரேக்அப்பும் செய்துகொள்கிறார்கள். இதைக் காதல் தோல்வியாகக் கருதிக்கொண்டு உளச்சிக்கலுக்கு ஆளாகிறார்கள். இந்த நடவடிக்கைகள் ஒருவரின் மனதில் ஆண் என்றாலே இப்படித்தான், பெண் என்றாலே இப்படித்தான் என்று எதிர்ப்பாலினம் பற்றிய தவறான கண்ணோட்டத்தை  ஏற்படுத்திவிடுகிறது. இது ஒரு கட்டத்தில் எதிர்பாலின வெறுப்பாக மாறுகிறது. இதனால் படிப்பிலும் கவனத்தைத் தவறவிடுகிறார்கள். 

ஃபேஸ்புக் தளம் பதிமூன்று வயதானால்தான் கணக்கை ஆரம்பிக்க முடியும் என்று கட்டுப்பாடு விதித்திருக்கிறது. ஆனால், பிறந்த வருடத்தை தவறாகக் கொடுப்பதன் மூலம் எந்த வயதில் வேண்டுமானாலும், யாரும் ஃபேஸ்புக் கணக்கை ஆரம்பிக்க முடியும். சமூக வலைதளங்களில் இணைவதற்கான வயதைக் குறைந்தபட்சம் பதினெட்டாக மாற்றவேண்டிய தேவை இன்றைக்கு இருக்கிறது. வயதை மாற்றிப்போட்டு ஏமாற்றிவிடாதபடி அடையாளச் சான்றிதழைப் பதிவேற்றி, அதனைச் சரிபார்க்கும் முறையைக் கொண்டுவரலாம். 

பெற்றோர்கள் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி அவர்களிடம் பேச வேண்டும். பள்ளியில் நடந்த விஷயங்கள், பிடித்த நண்பர்கள் பற்றிப் பேசலாம். இது சமூக வலைதளங்களில் இருந்து சிறிது நேரமாவது விலகியிருக்கச் செய்து, அவர்களைக் காப்பாற்றும். பதினெட்டு வயதுக்குள்ளான குழந்தைகளுக்கு அலைபேசி வாங்கிக்கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். வீட்டை விட்டு வெளியில் சென்று விளையாட குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் ஃபேஸ்புக் மனிதர்களை மறந்து உண்மையான மனிதர்களைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆணுக்கும் பெண்ணுக்குமான உடல் வேறுபாடுகள், உறவுநிலை மேம்பாடு குறித்து ஆசிரியர்கள் பள்ளிகளில் பேசலாம். இது, குழந்தைகளுக்கு ஓரளவுக்குத் தெளிவைக் கொடுக்கும். ஆணும் பெண்ணும் சகஜமாக பேசிக்கொள்ள பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் அனுமதிக்க வேண்டும். இதனால் ஆண், பெண் உறவுகள் ஆரோக்கியமானவையாக மாறும்.

ஒருவனுக்கான சமூகப் பொறுப்பு என்பது உண்மையில் கல்லூரியை முடிக்கும்போதுதான் தொடங்குகிறது. அப்போதுதான் அவன் வேலைக்குப் போகிறான், வாழ்க்கை என்ன என்பதை உணர்கிறான். அதற்கு முன்னர் வரை அவன் மாணவன்தான். அதிலும் குறிப்பாக, குழந்தைப் பருவம் என்பது சமூகத்தைக் கற்றுக்கொள்வதற்கான பருவம். கற்றுத் தேர்ந்த பருவம் அல்ல. சமூகத்தையும், அதன் செயல்பாடுகளையும், அதில் நடந்துகொள்ளவேண்டிய விதத்தையும் பெரியவர்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டுமே ஒழிய, சமூக வலைதளங்களில் இருந்து அவர்கள் தப்பும் தவறுமாகக் கற்றுக்கொள்ளக் கூடாது. அப்படிச் செய்ய அனுமதித்தோமானால், நம் பிள்ளைகள் உறவுகளிடம் இருந்தும் சமூகத்திடம் இருந்தும் விலகி இருப்பதற்கு நாமே வழி அமைத்தது போலாகிவிடும். அது, அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல!

- அகில் குமார்

அடுத்த கட்டுரைக்கு