Published:Updated:

ஆண்களுக்கு உரமூட்டும் 6 உணவுகள்! #HealthTips

ஆண்களுக்கு உரமூட்டும் 6 உணவுகள்! #HealthTips
News
ஆண்களுக்கு உரமூட்டும் 6 உணவுகள்! #HealthTips

ஆண்களுக்கு உரமூட்டும் 6 உணவுகள்! #HealthTips

குழந்தைப்பேறு இன்மை... இன்றைக்கு ஆண், பெண் இருபாலரையும் வாழ்வில் பல சிக்கல்களை எதிர்கொள்ளவைக்கும் தீவிரமான பிரச்னை. `குழந்தை இறைவன் கொடுக்கும் வரம்’. இந்த எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. குழந்தைவேண்டி சாமிக்கு நேர்ந்துகொள்வதும், கோயில் கோயிலாகச் சென்று பிரார்த்திப்பதும் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் பலர் தவறாமல் செய்யும் வேலை. இன்னொரு பக்கம் இன்ஃபெர்ட்டிலிட்டி மையங்களில் குவியும் தம்பதியரின் எண்ணிக்கையும் அதிகமாகிவருகிறது. `குழந்தை இல்லையா... பெண்ணிடம்தான் பிரச்னை இருக்கும்’ என்கிற தவறான நம்பிக்கை இன்னும் குறைந்தபாடாக இல்லை. ஆணிடமும் இருக்கலாம். ஆணின் விந்து பலம் இல்லாமல் இருப்பதும் இந்தப் பிரச்னைக்குக் காரணமாக இருக்கலாம். இதற்கான சிகிச்சையோடு, ஆண்களுக்கு உரமூட்டும் உணவுகள் சில இருக்கின்றன. அதைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ஆண்களின் விந்தணு முழுமையான சக்தி பெறும். 

குழந்தை வேண்டும் என முடிவெடுத்தாகிவிட்டது. எந்தக் கருத்தடை சாதனமும் பயன்படுத்தாமல் தொடர்ந்த கூடல். ஆனால், கருவுறுவதில் பிரச்னை. இது நாளாக நாளாக தம்பதியரிடம் ஏமாற்றத்தையும் நம்பிக்கையின்மையையும் அதிகரித்துக்கொண்டே செல்லும். விளைவாக, குழப்பமான வாழ்க்கைமுறை, மனஉளைச்சல் எல்லாம் உண்டாகும். இந்த சந்தர்ப்பத்தில் கணவன், மனைவி இருவருமே தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வதுதான் நல்ல தீர்வைத் தரும். ஆணுக்கு பிரச்னை எனும்பட்சத்தில், சிகிச்சையோடு நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் சிலவற்றை சேர்த்துக்கொள்வதும் விந்து பலப்பட உதவும். உணவு மட்டுமே ஆண் தன்மைக்கு பலம் சேர்த்து, குழந்தைப்பேறு உண்டாகக் காரணமாகிவிடாதுதான். ஆனால், பொருத்தமான உணவை சேர்த்துக்கொள்வது விந்தணுவை முழுமையடையச் செய்யும். 

விந்தின் உருவமும் (Morphology) அசைவும் (Motility) மிக முக்கியம். ஏன்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விந்தின் தராதரத்தை நிர்ணயிப்பதில் இரண்டு முக்கியக் காரணிகள் உள்ளன. ஒன்று, அதன் உருவம்; மற்றொன்று, அதன் அசைவு. 

உருவம்
ஆண் மலட்டுத்தன்மைக்குக் காரணமாவதில், விந்தின் வடிவத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு. அது சரியான வடிவத்தில் இல்லையென்றால், கருவுறுதலுக்குப் பயன்படாது. துல்லியமான விந்தின் தலை வட்டமாகவும் (Oval), அதன் வால் நீளமாகவும் இருக்கும். 

அசைவு
பெண்ணின் கருமுட்டையைச் சென்று சேரப் போதுமான வேகம் விந்துக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் கருவுறுதல் முறையாக நடக்கும். இந்த அசைவும் இயக்கமும் சீராக இல்லையென்றால், விந்து கர்ப்பப்பையை நோக்கிச் செல்லத் தடுமாறும். சரியாக கருமுட்டையைச் சென்று சேராது. அதனாலும் கருவுறுதல் நிகழாமல் போகலாம். 

ஆக, விந்தின் உருவம் நேரடியாக அதன் அசைவை பாதிக்கக்கூடியது. முழுமையில்லாத விந்தால் கருவுறுதல் நடக்காது. விந்தின் உருவத்தை முழுமையாக்கும், இயக்கத்தைச் சீராக்கும் உணவுகள் சில... 

தக்காளி தவிர்க்காதீர்!

பொதுவாகவே, விந்தில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் விந்தணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும் மோசமான ஃப்ரீ ராடிக்கல்ஸிடம் (Free Radicals) இருந்து பாதுகாப்பவை. இந்த இயற்கையான பாதுகாப்பு சீர்குலையும்போது, விந்தணுவில் பாதிப்பு ஏற்படும். அதனால், ஆண்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பிய உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக, லைக்கோபின் (Lycopene) விந்தணுவின் இயக்கத்துக்கும் வடிவத்துக்கும் உதவுவது. தக்காளி... அது பச்சையாக இருந்தாலும் சரி, சமைத்ததாக இருந்தாலும் சரி... லைக்கோபின் நிறைந்தது. தினசரி உணவில் தக்காளி சேர்த்துக்கொள்வது, ஆண் தன்மைக்கு உரமூட்டும். தக்காளியைப்போலவே திராட்சை, தர்பூசணி, சிவப்பு கொய்யா, தண்ணீர்விட்டான் கிழங்கு, பப்ளிமாஸ், சிவப்பு முட்டைக்கோஸ், துளசி ஆகியவையும் லைக்கோபின் சத்து நிறைந்தவை. இவற்றையும் சாப்பிடலாம். 

பாதாம் பருப்பு பலம்!

பாதாம் பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது, விந்தின் வடிவத்துக்கும் இயக்கத்துக்கும் உதவக்கூடியது. தினமும் 75 கிராம் அல்லது ஒரு கைப்பிடி பாதாம் பருப்பு சாப்பிடுவது விந்தணுவை பலம்பெறச் செய்யும். ஊட்டச்சத்து நிறைந்தது பாதாம் பருப்பு. மாலை வேளை ஸ்நாக்ஸுக்கு உகந்தது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கச் செய்யும். பாதாம் பருப்பைப் போலவே, மீன், ஆளி விதை எண்ணெய், பசலைக்கீரை ஆகியவையும் இந்தச் சத்துகளைக் கொண்டிருப்பவை. இவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 

பூசணி விதை... பூஸ்ட்! 

துத்தநாகம் (Zinc) என்ற தாதுப்பொருள் ஆண்களின் விந்தணுக்களின் சீரான வளர்ச்சிக்கும் தரத்துக்கும், டெஸ்டோஸ்டீரானின் உற்பத்திக்கும் உதவுபவை. பூசணி விதையில் இந்தச் சத்து அதிகம் உண்டு. பூசணி விதைகளைத் தூக்கி எறிந்துவிடாமல், சாலட், ஸ்மூத்தீஸில் சேர்த்துச் சாப்பிட்டால் ஆண்களின் பலம் கூடும். ஆனால், பூசணி விதைகளை அதிகமாகச் சாப்பிடுவது விந்தில் பாதிப்பையும் உண்டாக்கலாம். இதை அளவோடு உணவில்  சேர்த்துக்கொள்ளலாம். இறால், கிட்னி பீன்ஸ், பச்சைப்பட்டாணி ஆகியவற்றையும் சாப்பிடலாம். 

பூண்டு... பூரிப்பு தரும்!

பூண்டு சாதாரணமானதில்லை. இதில் முக்கியமாக இரண்டு கூறுகள் உள்ளன. இதில் இருக்கும் அலிசின் (Allicin) ரத்த ஓட்டத்தை அதிகரித்து பாலியல் ஹார்மோன்களைத் தூண்டக்கூடியது; இது விந்தணுவுக்கு எந்த பாதிப்பும் வராமல் காக்கும். இதில் இருக்கும் செலினியம் (Selenium) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட், விந்தணுவின் சீரான இயக்கத்துக்கு உதவுவது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பூண்டு பற்களைச் சாப்பிடுவது விந்தணுவின் ஆரோக்கியத்துக்கு உதவும். பூண்டைப் போலவே காளான், சிவப்பரிசி, கோழி இறைச்சி, நெத்திலி மீன் இவற்றிலும் இந்தச் சத்து உண்டு. 

அவகேடோ... அசத்தல்!

அவகேடோவில் இருக்கும் வைட்டமின் இ, விந்தணுவின் இயக்கம் சிறப்பாக நடைபெற உதவக்கூடியது. வாரத்துக்கு ஒருமுறையாவது அவகேடோ சாப்பிடுவது ஆண்களுக்கு அழகோடு, ஆரோக்கியத்துக்கும் உதவும். 

கேரட் நல்லது!

விந்தணுவின் இயக்கத்தில் முக்கியப் பங்காற்றுவதில் கேரட்டுக்கு தனி இடம் உண்டு. காலையில் டிபனுக்கு முன்னதாக ஒரு கேரட்டை எடுத்துக் கடித்துச் சுவைப்பது ஆண்களுக்கு அவ்வளவு நல்லது. இதில் இருக்கும் எல்-கார்னிடைன் (L-Carnitine) எனும் அமினோ அமிலம், நம் வளர்சிதை மாற்றத்துக்கும், விந்தணுவின் இயக்கத்துக்கும் நன்மை செய்யக்கூடியது. இதை வாரத்துக்கு மூன்று முறையாவது உணவில் சேர்த்துக்கொள்வது குழந்தைப்பேறுக்கும், ஆண் மலட்டுத்தன்மை போக்கவும் உதவும். இதைப் போலவே முட்டைக்கோஸ், சிவப்பு முள்ளங்கி, கடுகு ஆகியவையும் ஆண்களின் மலட்டுத்தன்மை நீங்க உதவும். 

இதையெல்லாம் கடைப்பிடித்தாலும் ஒரே நாளில் எல்லாம் சரியாகிவிடாது. தொடர்ந்த சீரான உடற்பயிற்சி, புகைப்பிடித்தல்-மது அருந்துதலைத் தவிர்த்தல், முறையான வாழ்க்கை முறை ஆகியவையே குழந்தைப்பேறுக்கு உதவும். எல்லாவற்றையும் விட வாழ்க்கைத்துணையிடம் நேசமும் அன்பும் நம்பிக்கையும் இருப்பதுதான் குழந்தைப்பேறுக்கு உங்களை வழிநடத்திச் செல்லும்.