Published:Updated:

முதுமையை வரவேற்கிறதா... முகச்சுருக்கம்?

முதுமையை வரவேற்கிறதா... முகச்சுருக்கம்?

பிரீமியம் ஸ்டோரி

 நொடிக்கு ஒரு தரம், கண்ணாடி முன்பு நின்று தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஆசைப்படாதவர்களே இல்லை. அதிலும், நாற்பது வயதை நெருங்குபவர்கள், இளமைத் தோற்றத்துக்காக என்னவெல்லாம் உண்டோ அத்தனையையும் செய்து பார்த்துவிடுவது வழக்கம்.

'முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து இளமையோடு இருக்கலாம்’ என்று இதற்காக, விளம்பரப்படுத்தப்படும் ஆன்ட்டி ஏஜிங் கிரீம்களை, உடனே வாங்கிப் பூசிக்கொள்கின்றனர். உண்மையிலேயே, இந்த அழகுசாதனப் பொருட்களால், சுருக்கங்களை மறையவைக்க முடியுமா?  இளமைத் தோற்றத்தைத் தர முடியுமா?

முதுமையை வரவேற்கிறதா... முகச்சுருக்கம்?

தோல் மருத்துவ நிபுணர் ரவிச்சந்திரனிடம் கேட்டோம்.

''20 வயது முதல் 30 வயது வரை 'ப்ரீ ஏஜிங்’ காலம். இந்த வயதில் எந்த அளவுக்கு நாம் தோலுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ, அந்த அளவுக்குப் பிற்காலத்தில் தோல் சுருக்கம் வராமல் தவிர்க்கலாம்.

மார்க்கெட்டில் மலைபோல் குவிந்துகிடக்கும் அத்தனை அழகுசாதனப் பொருட்களிலும் நல்லவை, தீயவை என இரண்டும் கலந்துதான் விற்கப்படுகின்றன.

ஒரே மாதத்தில் தோலின் நிறம் மற்றும் தன்மையை, ஒரு கிரீமால் மாற்றிவிடும் என்பதெல்லாம் துளியும் உண்மைஅல்ல. இந்த வகை கிரீம்களில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கக்கூடும். இந்தப் பொருட்களால் தோல் சம்பந்தமான பல பிரச்னைகள் வரவும் வாய்ப்பு இருக்கிறது. உடனே பலன் தருவதுபோல் முகத்தைப் பொலிவாக்கி, அதோடு பிரச்னையையும் அந்த அழகுப்பொருள் உண்டாக்கிவிடலாம்.

வீரியம் அதிகமான ரசாயனத்தன்மை உள்ள பொருட்களைப் பயன்படுத்துவதால், தோலில் புண், எரிச்சல், தடித்து வீங்குதல், தோல் சுருங்கி தேமல், கரும்புள்ளி போன்ற பிரச்னைகள் உருவாகும். விலை குறைவாகத் தருகிறார்கள் என்று மட்டமான பொருளை வாங்கக்கூடாது.

முதுமையை வரவேற்கிறதா... முகச்சுருக்கம்?

வைட்டமின் ஏ அல்லது வைட்டமின் சி மற்றும் பழத்தன்மை அதிகம் கொண்ட கிரீம்கள், தோலின் தன்மையை மாற்றி, தோலுக்கு புதுப் பொலிவைத் தரக்கூடும்.

எந்த வகை ரசாயனம் சேர்க்கப்பட்டுள்ளது, அதன் நன்மை, தீமை என்ன என்பதை முதலில் தெரிந்து பிறகு வாங்கவேண்டும்.

புதிதாக வாங்கிய கிரீம் சிலருக்கு அலர்ஜியைத் தரலாம். உடனே, அந்த கிரீம் உபயோகிப்பதை நிறுத்திவிட்டு, தோல் மருத்துவரைச் சந்திக்கவேண்டியது அவசியம்.

முதுமையை வரவேற்கிறதா... முகச்சுருக்கம்?

பழங்களால் தயாரிக்கப்பட்ட இயற்கை கிரீமாக இருந்தால், அது தோலுக்கு நல்லது.  

ஒன்று, முகச்சுருக்கத்தைப் போக்க,  இயற்கைக்கு மாறுங்கள். அல்லது மருத்துவரின் ஆலோசனைபெற்று, உங்கள் சருமத்துக்கு உகந்த கிரீம்களைப் பயன்படுத்துங்கள். இதுதான் உங்கள் சருமத்துக்குப் பாதுகாப்பு'' என்றார் டாக்டர் ரவிச்சந்திரன்.

 முக'வரி’களைப் போக்க டிப்ஸ்!

 தினந்தோறும் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடியுங்கள்.

•  இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, புடலங்காய், பூசணி, சுரைக்காய், வெள்ளரி போன்ற  நீர்ச்சத்து நிறைந்த காய், கனிகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.  

•  தினமும் வைட்டமின் ஏ நிறைந்த கேரட், மூன்று நிற வகைப் பழங்கள் சாப்பிடுங்கள். சருமத்துக்குப் பொலிவைத்தந்து இளமைத் தோற்றத்தைத் தக்கவைக்கும்.  

•  மறக்காமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.

•  அடிக்கடி முகத்தை நன்றாகக் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

•  குளித்தவுடன் முகத்தை அழுத்தித் தேய்க்காமல், துணியால் மெதுவாக ஒத்தி எடுக்க வேண்டும்.

•  மனதில் கவலையைக் குறைத்துக்கொண்டாலே போதும். முகத்தில் எப்போதும் இளமையும், புத்துணர்வும் தாண்டவமாடும்.

 கிரீம்கள் வாங்குபவர்களின் கவனத்துக்கு:

•  என்னென்ன ரசாயனப் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன, அவற்றின் நன்மை, தீமை என்ன என்பதை அறிந்துதான் கிரீமை வாங்க வேண்டும்.

முதுமையை வரவேற்கிறதா... முகச்சுருக்கம்?

•  நல்ல தரமான கம்பெனி பொருளா? அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டதா? என்பதைக் கவனிக்கவேண்டும்.

•  ஆல்பா ஹைட்ராக்சி ஆசிட் (Alpha hydoxy acid) என்ற ஃப்ரூட் ஆசிட் தோலின் நிறம் மற்றும் தன்மையை மாற்றக்கூடியது. வெள்ளரிக்காய், பப்பாளி, எலுமிச்சை போன்ற பழங்களால் செய்யப்பட்ட அழகு கிரீம்கள் நல்ல பலனைத் தரும். அதனால், இவற்றை நம்பி வாங்கலாம்.

•  சூரியனிடமிருந்து வருகின்ற கதிர்கள் தோலின் தன்மையை வெகு சுலபத்தில் மாற்றிவிடும் என்பதால், ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் அதிகமுள்ள பெப்டிசைட்ஸ் உள்ள அழகு சாதனப் பொருட்களை உபயோகப்படுத்தலாம். இது நமது சருமத்துக்குக் கவசம் போன்று செயல்படும்.

•  சன் புரொடக்ஷன் ஃபேக்டர் (SPF)  30  இருப்பதைத் தேர்ந்தெடுங்கள்.

- க.பிரபாகரன், படங்கள்: ர.சதானந்த், மாடல்: காவ்யா

##~##
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு