Published:Updated:

புகையை சுவாசித்தால்...

நவம்பர் 20ம் தேதி நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோயின் விழிப்பு உணர்வு நாள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

'அடுத்த 20 ஆண்டுகளுக்குள் உலகிலேயே இரண்டாவது உயிர்க்கொல்லி நோயாக, 'நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய்’ (Chronic obstructive pulmonary disease (COPD)) உருவெடுக்கும்' என்று சொல்கிறது மருத்துவ உலகம். கடந்த 15 ஆண்டுகளாகத்தான் இந்த நோயின் தீவிரத்தை மருத்துவர்களே உணர்ந்துள்ளனர். 'புகை’ ஒன்று மட்டுமே நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய்க்கு முக்கியக் காரணம்.

'90 சதவிகிதம், புகைப்பதால் மட்டுமே இந்த நோய் வருகிறது. ஆனால், இதனால் வரும் ஆபத்தைக்கூட நம்மில் பலர் உணர்வது இல்லை' என்கிறார் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த நுரையீரல் மருத்துவர் மஞ்சு. அவரை நேரில் சந்தித்துப் பேசினோம்.

'புகை மட்டுமே இந்த நோய்க்கு முக்கியக் காரணமா?'

புகையை சுவாசித்தால்...

'நிச்சயமாக. நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் வருவதற்கு புகை மட்டுமே காரணம். வயது வித்தியாசமின்றி இருபாலரையும் தாக்கும். அதிலும் புகைப் பழக்கம் உள்ளவர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், எங்கெல்லாம் மக்கள் புகையை அதிகம் சுவாசிக்கிறார்களோ அங்கெல்லாம் இந்த நோய் வளர்ச்சி அடைகிறது.''  

'புகையினால் மூச்சுக்குழாய் எவ்வாறு பாதிக்கப்படுகிறது?'

'மூச்சுக்குழாய் மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். சிகரெட் புகை, புகை கலந்த காற்று, விறகு அடுப்பின் புகையை சுவாசிக்க நேரும்போது, மூச்சுக்குழாய் வழியாக நச்சு கலந்த காற்று நுரையீரலைச் சென்றடைகிறது. நாளடைவில் இது மூச்சுக்குழாயைப் பாதிக்கிறது. இதன் ஆரம்ப நிலையை நம்மால் கண்டிப்பாக உணர முடியாது. ஒரு கட்டத்துக்கு மேல் மூச்சுக்குழாய் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டு, அதன் சாதாரண நிலையைவிடக் கூடுதலாக வீங்க ஆரம்பிக்கும். அப்போது நுரையீரலுக்குச் செல்லும் காற்று அடைபடுவதால், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்.'

'ஆஸ்துமாவும், நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோயும் ஒன்றா?'

'இல்லை. ஆஸ்துமாவைக் குணப்படுத்திவிடலாம். மேலும், ஆஸ்துமா ஏற்பட்டால், உடலின் மற்ற பகுதிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால், நாள்பட்ட மூச்சுக்குழாய் நோயைக் குணப்படுத்தவே முடியாது. நோயை வளரவிடாமல் கட்டுப்படுத்த மட்டுமே முடியும். இந்த நோய் நுரையீரலில் மட்டுமில்லாமல், உடலில் பல்வேறு பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.'

புகையை சுவாசித்தால்...

'நோயின் விளைவுகள் என்ன?'

'சீரான உடல் இயக்கத்துக்கு ஆக்சிஜன் மிகவும் முக்கியம். இங்கு மூச்சுக்குழாய் பாதிக்கப்பட்டு வீங்கிவிடுவதால் காற்று செல்வதற்குத் தடை ஏற்பட்டு மிகக் குறைந்த அளவில் நுரையீரலைச் சென்றடைகிறது. விளைவு, உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த நோய் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டபோது, நுரையீரல் மட்டுமே பாதிக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் எண்ணினார்கள். ஆனால், உண்மையில் கண், இதயம், சிறுநீரகம், எலும்பு, நுரையீரல் என அனைத்து உறுப்புகளிலும் பிரச்னைகள் ஏற்படுகிறது. நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோயால் சர்க்கரைநோய், நுரையீரல் புற்றுநோய் வரலாம். போதுமான காற்று கிடைக்காமல் நுரையீரலும் பெரியதாகிவிடும்.'

'நோயைக் கண்டறிவது எப்படி?'

'சின்னச் சின்ன வேலைகள் செய்யும்போதே நோயின் அறிகுறி உள்ளவர்களுக்கு மூச்சுப் பிரச்னை ஏற்படும். சுவாசிப்பதில் சிக்கல் இருக்கும். அடிக்கடி எச்சிலுடன் சளி கலந்து வெளிவரும். நெஞ்சு இறுகியதுபோல உணரப்படும். சில நேரங்களில் நெஞ்சு வலி ஏற்படும். 'இளைப்பு’ (வீசிங்) பிரச்னை ஏற்படலாம். இந்த அறிகுறிகளை உணரும்போதே தகுந்த மருத்துவரை அணுகுவது நல்லது. 'ஸ்பைரோமெட்ரி’ (spirometry) பரிசோதனை மூலம் நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் உள்ளதா என்று சோதித்துக்கொள்ளலாம். தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், புதுச்சேரியில் அரசு மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் இந்தக் கருவி உள்ளது. அது நமது மூச்சுக்குழாயில் உள்ள நச்சுப் பொருளின் அளவை சரியாகக் காட்டிவிடும்.'

புகையை சுவாசித்தால்...

'நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது?'

'இந்த நோயைக் கட்டுப்படுத்த, 'இன்ஹேலர்’ கிடைக்கிறது. தொடர்ந்து அதைப் பயன்படுத்தி நோயை மேலும் வளரவிடாமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். நோய் எதிர்ப்புச் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.''

 தவிர்க்க, தடுக்க வழிகள்:

•  முற்றிலுமாகப் புகைப்பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

•  விறகு அடுப்பைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், புகையைவிட்டு ஒதுங்கி இருப்பது நல்லது.

•  காலையில் மூச்சுப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்

•  தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

- நா.இள அறவாழி படம்: ஜெ.முருகன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு