Published:Updated:

நிம்மதியான தூக்கத்துக்கு என்ன வழி?

நிம்மதியான தூக்கத்துக்கு என்ன வழி?

பிரீமியம் ஸ்டோரி
நிம்மதியான தூக்கத்துக்கு என்ன வழி?

கோ.முருகன், கடையநல்லூர்.

"வாகன ஓட்டுநரான எனக்கு நீண்டதூரப் பயணம் தவிர்க்க முடியாதது. ஆனால், பயணத்தின்போது ஏற்படுகிற தீராத முதுகுவலியால், என்னால் கவனத்துடன் எந்த வேலையிலும் ஈடுபட முடியவில்லை. இதற்குத் தீர்வு கூற முடியுமா?"

டாக்டர் எல்.டி.துளசிராம், எலும்பு நோய் மருத்துவர், மதுரை.

நிம்மதியான தூக்கத்துக்கு என்ன வழி?

"வாகன ஓட்டுநர்களுக்கு முதுகுவலி என்பது வழக்கமாக வரும் பிரச்னைதான். இதனால் பெரிய நோய்கள் வரும் அளவுக்குப் பயப்பட வேண்டாம் என்றாலும், முதுகுவலி பாதிப்பால் கால் குடைச்சல், கால் தளர்ச்சி வரலாம். உங்கள் முதுகுக்குப் போதுமான சாய்மானம் மிக அவசியம். இருக்கையில் 'அட்ஜஸ்டபிள் சீட்’ இருந்தால், அதை நேராக நிமிர்த்திக்கொண்டு வசதிக்கு ஏற்ப அமரலாம். வண்டி ஓட்டும்போது நிமிர்ந்து நேராக அமர்ந்து ஓட்ட வேண்டும். அதுவே முதுகுத்தண்டு தேய்மானத்தில் இருந்து தடுக்கும். பயணத்தின்போது, இருக்கையின் பின்புறம் தலையணையோ கடைகளில் ரெடிமேடாக விற்கும் 'பேக் சப்போர்ட்’டையோ வைத்துக்கொள்ளலாம். அசதியும் குறையும், முதுகுவலி ஏற்படும் வாய்ப்பும் குறையும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளும்போது, வண்டியைத் தொடர்ந்து ஓட்டாமல் ஒரு மணி நேரத்துக்குச் சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு, அவ்வப்போது உடலைப் பின்நோக்கி வில் போல வளைத்துப் பயிற்சிகள் செய்யலாம். முதுகுவலி இல்லாமல் இருக்கும். அதையும் மீறி வலி அதிகம் இருந்தால் கண்டிப்பாக 'எக்ஸ்ரே’ எடுத்துப் பார்த்துவிட வேண்டும். உங்களுக்கு அருகில் உள்ள மூட்டு, எலும்பு மருத்துவர், பிசியோதெரப்பிஸ்ட்டை அணுகினால், அவர்கள் உங்கள் முதுகுக்கு ஏற்ற பயிற்சிகளைச் சொல்லித்தருவார்கள். அதைத் தொடர்ந்து பின்பற்றினால் முதுகுவலியில் இருந்து முழுவதுமாகத் தப்பிக்கலாம்."

நிம்மதியான தூக்கத்துக்கு என்ன வழி?

என்.ஹரிபிரியா, திண்டுக்கல்.

''கல்லூரி மாணவி நான். பள்ளிப்பருவத்திலிருந்தே இரவில் தூக்கம் வராது. அதனால், இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பது என்பது இன்றுவரை தொடர்கதையாகிவிட்டது. இப்போதெல்லாம் பகலில் கொஞ்சம் கண் அயர்ந்தாலும் ஆழ்ந்த தூக்கம் வந்துவிடுகிறது. அந்த நேரத்தில் தூங்கவில்லையானால் தலைவலி வந்துவிடுகிறது. இதனை எப்படிச் சரிசெய்வது?"

டாக்டர் கவிதா ஃபென் அருண்குமார் மனநல மருத்துவர், மதுரை.

நிம்மதியான தூக்கத்துக்கு என்ன வழி?

"பொதுவாக ஒருவர் தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை நன்றாகத் தூங்க வேண்டும். நீங்கள் இரவு தாமதமாகத் தூங்கி, காலையில் சீக்கிரம் எழுந்துவிடுகிறீர்கள். அதனால் நாள்பட்ட தூக்கமின்மை பிரச்னைக்கு ((chronic sleep deprivation)) ஆளாகி உள்ளீர்கள். பகல் நேரத்தில் ஆழ்ந்த தூக்கம் வருகிறது, தூங்கவில்லை என்றால் தலைவலி வரும் என்கிறீர்கள். இதைக் 'கடன் தூக்கம்’ (Sleep debt) என்று சொல்வார்கள்.

உங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வதால் ஆரோக்கியமான தூக்கம் தானாக வரும். தூங்குவதற்கு முன் காபி, தேநீர், குளிர்பானங்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் புளிப்பு, காரமான உணவைத் தவிர்க்க வேண்டும். இதமான பாடல்களை ஒலிக்கச் செய்யலாம். காலையில் படுக்கை அறையில் இருந்து வெளியே வந்த பிறகு, மீண்டும் இரவுதான் படுக்கைக்குச் செல்ல வேண்டும். இப்படிச் செய்யும்போது எப்போது படுப்போம் என்ற உணர்வு ஏற்பட்டு, சுகமான தூக்கம் வரும். இப்படிச் செய்தும் தூக்கம் வரவில்லை என்றால், தூக்கம் தொடர்பான சிறப்பு மருத்துவரையோ பொது மருத்துவரையோ அணுகுவது நல்லது.''

பி.பிரியதர்ஷினி, சேலம்.

நிம்மதியான தூக்கத்துக்கு என்ன வழி?

"என் வயது 48. கடந்த 35 வருடங்களாக தைராய்டு மாத்திரை எடுத்துவருகிறேன். கடந்த ஒரு வருடமாகத் தொடர்ந்து சில மணி நேரம் வேலை செய்தாலே மூச்சிரைப்பு ஏற்படுகிறது. இது தைராய்டு நோயினால் ஏற்படுகிறதா அல்லது வேறு நோயின் அறிகுறியா?"

டாக்டர் பரத்ராம், நாளமில்லா சுரப்பி இயல் மருத்துவர், சென்னை.

''தைராய்டுக்கான மாத்திரைகளால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால் இதயம், நுரையீரல் பாதிப்புகளால் மூச்சிரைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் எடை, சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவு சரியான விகிதத்தில் உள்ளதா என்பதையும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். தைராய்டு முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும்போது, இதுபோன்று ஏற்பட வாய்ப்புகள் இல்லை. அருகில் உள்ள மருத்துவரை அணுகி வேறு எதுவும் உடல்நலக் குறைபாடு உள்ளதா எதனால் மூச்சிரைப்பு வருகிறது என்பதைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.''

##~##
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு