Published:Updated:

வலிப்பு நோயை தவிர்க்கலாம்!

நவம்பர் 17 தேசிய வலிப்பு நோய் விழிப்பு உணர்வு தினம்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

 முழுமையாக எதையும் புரிந்துகொள்ளாமல், காலம் காலமாக நம்பப்படும் மூடநம்பிக்கைகள் நம்மிடையே பரவலாக உள்ளன. உடல்நலம் தொடர்பான விஷயங்களில் இந்த மூடநம்பிக்கைகளின் தாக்கம் மிக அதிகம். அவற்றுள் ஒன்றுதான் வலிப்பு நோய் பற்றிய நம்பிக்கையும். ஒருகாலத்தில், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களை, சிறையில் அடைத்த கொடுமையும் நடந்திருக்கிறது.  இதுபோன்ற செய்திகளே, வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மீதான தவறான நம்பிக்கைகளை முழுமையாக உணர்த்தும். தேசிய வலிப்பு நோய் விழிப்பு உணர்வு தினம் அனுசரிக்கப்படும் இந்தத் தருணத்தில் வலிப்பு நோய் பற்றி இன்றளவும் இருக்கும் தவறான எண்ணங்களையும், உண்மைகளையும் பகிர்ந்துகொள்கிறார் சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையைச் சேர்ந்த பிரபல மூளை நரம்பியல், வலிப்பு நோய் சிறப்பு நிபுணரான தினேஷ் நாயக்.

வலிப்பு நோயை தவிர்க்கலாம்!

'பெரும்பாலானோர் வலிப்பு நோயை, ஒரு மனநோயாகச் சித்திரிக்கின்றனர். மேலும், வலிப்பு நோயை, 'காக்காய் வலிப்பு’ என்று மட்டும் கருதி, அவர்களுக்குத் தெரிந்த மருத்துவத்தைச் சிலர் பின்பற்றுகின்றனர். இது முற்றிலும் தவறு. வலிப்பு, நரம்பியல் சார்ந்த பிரச்னை. குழந்தை பிறக்கும்போது மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபட்டு, அதன் அளவு குறையும்போது, மூளையில் சில தழும்புகள் ஏற்படும். இதுவே வலிப்பு நோய்க்கான பாதிப்புகளை ஏற்படுத்தும். அதேபோன்று, பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்போதும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம். குறிப்பாக, 15 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இந்தப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

இந்த நோயைப் பொறுத்தவரை 1000-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. முறையான மருத்துவ ஆலோசனை பெற்று சிகிச்சைமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே இதன் தாக்கத்தைக் குறைக்க முடியும்'' என்கிற டாக்டர் தினேஷ், சிகிச்சைமுறைகளையும் சொன்னார்.

வலிப்பு நோயை தவிர்க்கலாம்!

''ஒரு சிலருக்கு கடுமையான காய்ச்சலின்போது எப்போதாவது இதுபோன்ற வலிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கும் வலிப்பு நோய்க்கும் சம்பந்தம் இல்லை. அவருக்குக் கொடுக்கப்பட்ட மாத்திரைகளைச் சரியாக எடுத்துக்கொள்கிறாரா என்பதை முதலில் கவனிக்க வேண்டும். 80 சதவிகிதம் வலிப்பு நோய்களை மருந்துகளால் குணப்படுத்திவிட முடியும். இருப்பினும் கட்டுப்படுத்த முடியாதபட்சத்தில், உண்மையிலேயே அவருக்கு வலிப்பு நோய் உள்ளதா, அவர் எந்த வகை வலிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளார், மூளையின் எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, என்பதைக் கண்டறிய, மூளையின் மின்னோட்டத்தை அளவிடும் ஈ.ஈ.ஜி. (Electroencephalogram) மற்றும் சி.டி. (CT), எம்.ஆர்.ஐ. (MRI), பெட் (PET) பரிசோதனைகள் செய்யப்படும். அந்தப் பகுதியில் அறுவைசிகிச்சை செய்து குணப்படுத்திவிட முடியும். அதன் பிறகு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் அவசியம் பெரும்பாலும் இருக்காது.

உரிய நேரத்தில், சரியான சிகிச்சை மேற்கொள்ளும், எந்த ஒரு வலிப்பு நோயாளியும், சராசரி மனிதர்களைப் போல, தன் வாழ்நாளை ஆரோக்கியமானதாக மாற்ற முடியும்' என்றார்.

தெளிவும், விழிப்பு உணர்வும், கொஞ்சம் கவனமும் இருந்தால் எந்த நோயையும் நெருங்கவிடாமல் செய்துவிடலாம்!  

 வலிப்பு வராமல் தடுக்கலாம்:

• குழந்தைகள், கர்ப்பிணிகள், மருத்துவர் பரிந்துரையின்றி எந்த ஒரு மாத்திரை மருந்தையும் எடுத்துக்கொள்ளக் கூடாது.

• குழந்தை பிறந்தவுடன் அழவில்லை என்றால், உடனடியாகப் பரிசோதனைசெய்ய வேண்டும்.  

• தலையில் லேசாக மோதிக்கொண்டு ஏற்படும் சிறிய காயங்கள்கூட மூளையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கவனம் அவசியம்.

• இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.

 வலிப்பு வந்தவுடன் செய்யவேண்டியவை::

• வலிப்பு ஒருவருக்கு வந்தால், அருகில் இருப்பவர்கள் பதற்றமடையவோ பயப்படவோ வேண்டாம்.

• வலிப்பு வந்தவரை, தரையில் விழுந்துவிடாமல் தாங்கிப்பிடித்து ஒருபக்கமாகப் படுக்கவையுங்கள். அவரைக் கட்டுப்படுத்த முயல வேண்டாம்.

• சாவியையோ வேறு இரும்புப் பொருட்களையோ கையில் திணிக்க வேண்டாம். இதனால் பாதிக்கப்பட்டவர் தன்னைக் காயப்படுத்திக்கொள்ள நேரும்.

• நோயாளிக்கு நினைவு திரும்பும் வரை தண்ணீரோ வேறு திரவமோ தரக் கூடாது. அப்படிக் கொடுத்தால், அது மூச்சுக்குழாய்க்குள் சென்று சுவாசத் திணறலை ஏற்படுத்திவிடக்கூடும்.

• சில நிமிடங்களில் வலிப்பு தானாக நின்றுவிடும், பிறகு நோயாளி ஆழ்ந்து உறங்கிவிடுவார். அவரை ஆசுவாசப்படுத்துங்கள்.

- க.பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு