Published:Updated:

நடுவயிற்றில் வலியா?

நடுவயிற்றில் வலியா?

##~##

ங்கியில் துணைப் பொது மேலாளராகப் பணியாற்றுகிறார் ஸ்ரீராம். ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை, தினசரி வாக்கிங், வாரத்தில் மூன்று நாட்களுக்கும் மேல் ஜிம் பயிற்சி என்று எப்போதும், உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறையுடன் இருப்பார். ஒரு நாள் அலுவலகத்தில் இருந்தபோது, திடீரென அடிவயிற்றில் சுரீரென்று வலி. வலியைப் பொறுத்துக்கொண்டு அன்றைக்கு நடந்த ஆடிட்டிங்கில் கலந்துகொண்டார். நேரம் செல்லச் செல்ல வலி அதிகமாக, அலுவலகத்தில் சொல்லிவிட்டு நேராக மருத்துவமனைக்குச் சென்றார். பரிசோதனை செய்த டாக்டர், அவருக்கு அப்பெண்டிசைடிஸ் பிரச்னை இருப்பதைக் கண்டறிந்து, சில மணி நேரம் தாமதமாக வந்திருந்தாலும் உயிரைக் காப்பாற்றி இருக்க முடியாது என்று கண்டித்தார். உடனடியாக ஸ்ரீராம், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்பெண்டிசைடிஸ் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.  

 கோவை கேட்வே மருத்துமனையைச் சேர்ந்த வயிறு - குடல் அறுவைசிகிச்சை மற்றும் லாப்ராஸ்கோப்பி நிபுணர் செந்தில்குமாரிடம் அப்பெண்டிசைடிஸ் பிரச்னை குறித்துப் பேசினோம்.

நடுவயிற்றில் வலியா?

'சிறுகுடலும், பெருங்குடலும் சேரும் இடத்தில் ஒரு வால் போன்று காணப்படுவதுதான் குடல்வால். இது இருப்பதால் எந்த நன்மையோ, கெடுதலோ இல்லை. ஆனால், சிறுகுடலில் செரிக்கப்பட்ட உணவுப்பொருள், பெருங்குடலுக்குச் செல்லும்போது இந்தக் குடல்வால் உள்ளே மாட்டிக்கொள்ளும். அங்குதான் பிரச்னை தொடங்குகிறது. உள்ளே சிக்கிய பொருளில் கிருமிகள் நன்கு வளர்ச்சியடைந்து, ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது இந்தக் குடல்வால் வெடித்துவிடும். தவிர, குடல்வாலில் புழு, கிருமித்தொற்று ஏற்படுவதாலும் பிரச்னை ஏற்படும்.

குடல்வால் பிரச்னை முதலில் நடுவயிற்றில் அல்லது வலது பக்கத்தில் வலியுடன் ஆரம்பிக்கும். சில மணி நேரங்களில் வலி உச்சத்தை அடைந்து, அடிவயிற்றைத் தொட்டாலே வலி அதிகமாகும். வாந்தி, குமட்டல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் ஏற்படலாம். நடக்கும்போது குனிந்தபடி நடப்பார்கள். இந்தப் பிரச்னை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக, குழந்தைகள் மற்றும் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிக அளவில் தோன்றுகிறது. எந்தவித முன் அறிகுறியோ, முன்னெச்சரிக்கையோ இன்றி திடீர் வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்கள்தான் அதிகம்'' என்கிற டாக்டர், குடல்வால் பிரச்னைக்கான சிகிச்¬சகளை விளக்கினார்.

''வலி ஏற்பட்டதும் உடனடியாக அல்ட்ரா சவுண்ட், மற்றும் அறுவைசிகிச்சை வசதிகொண்ட மருத்துவமனைக்குச் செல்வது அவசியம். ரத்தம், சிறுநீர் பரிசோதனையுடன் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்வதன் மூலம் குடல்வால் பிரச்னையைக் கண்டறியலாம்.

ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், அதற்கு ஆன்டிபயாடிக் மாத்திரை, மருந்துகள் எடுத்துக்கொண்டாலே போதும். ஆனால், பிரச்னை முற்றிய நிலையில் தாமதிக்காமல் அறுவைசிகிச்சை செய்வது நல்லது.

நடுவயிற்றில் வலியா?

தற்போது சிறுதுளை (லாப்ராஸ்கோப்பி) அறுவைசிகிச்சை முறைகள் உள்ளன. சில மி.மீ. அளவுக்கு துளைகள் இட்டு, மிக நூதனமாக குடல்வால் அகற்றப்படுகிறது. இதனால், ரத்த இழப்பு மிகவும் குறைவு. ஒரே நாளில் வீட்டுக்குத் திரும்பிவிடலாம். ஒருவேளை, குடல்வால் வெடித்துவிட்டால், கிருமித்தொற்றை முழுவதுமாக நீக்க 'வாஷ்’ செய்ய வேண்டும். பெரும்பாலும் இதையும் லாப்ராஸ்கோப்பி முறையில் செய்தாலும், சில மையங்களில் 'ஓப்பன்’ முறையில் செய்கின்றனர்.

பொதுவாக நார்ச் சத்து அதிகம் உள்ள உணவை உட்கொள்பவர்களுக்கு குடல்வால் பிரச்னை தோன்றுவது மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, உணவில் அதிக அளவில் நார்ச் சத்தை சேர்த்துக்கொள்ளுங்கள். இது குடல்வால் பிரச்னைக்கான வாய்ப்பைக் குறைக்கும்' என்றார்.

 தேவையற்றதா குடல்வால்?

மனித பரிணாம வளர்ச்சியின் எச்சமாக இருப்பது குடல்வால். மூன்றரை இன்ச் அளவே உள்ள இந்தக் குடல்வாலின் பயன் என்ன என்பது இன்று வரை புரியாத புதிர். ஆதிகாலத்தில் மனிதன் இலைதழைகளைச் சாப்பிட்டுச் செரிக்க, இந்தக் குடல்வால் உதவி இருக்கும் என்ற கருத்து உள்ளது. உணவை, சமைத்து உண்ண ஆரம்பித்த பிறகு, இதற்கு வேலையில்லாமல் போய், கடைசியில் சுருங்கி நினைவுச்சின்னமாக இருக்கிறது இந்தக் குடல்வால்.

உடலுக்குப் பிரச்னை ஏற்படாத நிலையில், இதை அகற்றுவதும் தவறானது. வயிறு தொடர்பான அறுவைசிகிச்சையின்போது செரிமான மண்டலத்தில் உள்ள உறுப்புகளை ஆய்வுசெய்து, அந்த நேரத்தில், குடல்வால் வீக்கம் தென்பட்டால் மட்டுமே, இதை அகற்றலாம்.

- பா.பிரவீன்குமார் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு