Published:Updated:

பாதுகாப்பானதுதான் பென்டாலேவன்ட்

பாதுகாப்பானதுதான் பென்டாலேவன்ட்

பிரீமியம் ஸ்டோரி
##~##

னித குலத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய மருத்துவ வரப்பிரசாதம், தடுப்பூசி. ஐந்து நோய்க் கிருமிகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை, ஒரே தடுப்பூசியின் மூலம் இனி தர முடியும் என்ற நம்பிக்கையுடன் 2011-ம் ஆண்டு முதல் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்ட பென்டாவேலன்ட் தடுப்பூசி, உண்மையில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதுதானா என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.

பென்டாவேலன்ட் தடுப்பூசி கொடுக்கப்பட்ட குழந்தைகளில் 29 பேர், 24 மணி நேரத்துக்குள் இறந்துவிட, 'பென்டாவேலன்ட் தடுப்பூசிக்குத் தடைவிதிக்க வேண்டும்’ என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெறுகிறது. இந்தச் சூழ்நிலையில், பென்டாவேலன்ட் தடுப்பூசி பற்றிய நமது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் அருண்பாபு.

'டிபிடி, பெர்டுசிஸ், டெட்டனஸ் ஆகிய மூன்று நோய்களுக்கும் எதிராக முத்தடுப்பு ஊசி போடப்பட்டு வந்தது. அதற்குப் பதில், இந்த மூன்று நோய்க் கிருமிகளுடன் ஹெபடைடிடிஸ் பி, ஹீமோபீலியஸ் இன்ஃபுளுவென்சா டைப் பி உள்பட ஐந்து நோய்களுக்கும் எதிராக, ஒரே தடுப்பூசியாக அறிமுகமானதுதான் பென்டாவேலன்ட் தடுப்பூசி. இந்தத் தடுப்பூசியின் முதல் (Primary) டோஸை, குழந்தை பிறந்த 6, 10 மற்றும் 14 வாரங்களிலும் பூஸ்டர் டோஸை ஒன்றரை மற்றும் ஐந்தாம் வயதிலும் கொடுக்க வேண்டும்.''

பாதுகாப்பானதுதான் பென்டாலேவன்ட்

''இந்தத் தடுப்பூசி கொடுப்பதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்படுமா?'

''பென்டாவேலன்ட் தடுப்பூசியில் உள்ள 'பெர்டுசிஸ்’ என்னும் மூலக்கூறினால் பக்க விளைவு ஏற்படுகிறது. இந்தத் தடுப்பூசி போட்ட 48 மணி நேரத்தில் குழந்தைக்குத் தொடர்ந்து காய்ச்சல் அடிக்கலாம். அழுதுகொண்டே இருக்கலாம். 24 மணி நேரத்துக்குள் வலிப்பு ஏற்படலாம். ஊசி போட்ட இடம் சிவந்து தடிக்கலாம். இதுபோன்ற லேசான பக்க விளைவுகள் ஏற்படும். உயிருக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய 'அனாபைலாக்சிஸ்’ (Anaphylaxis) எனும் கடும் ஒவ்வாமை, 10 லட்சத்தில் ஒரு குழந்தைக்குத்தான் ஏற்படும். தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைக்குக் காய்ச்சல் அடித்தால், தடுப்பூசிக்குப் பிறகு கொடுக்கப்பட்ட சிரப்பைத் தரலாம். தொடர்ந்து காய்ச்சல் அடித்தாலோ, பால் சரியாகக் குடிக்காமல் துவண்டுபோனாலோ தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தாலோ... தடிப்பு, மூச்சுவிடுவதில் சிரமம், உதடு வீக்கம், அலர்ஜி ஏற்பட்டாலோ... உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

தடுப்பூசி போடும் காலத்தில் குழந்தை, கடுமையான காய்ச்சல், மார்புச் சளியால் பாதிக்கப்பட்டு இருந்தால், தடுப்பூசியைத் தவிர்த்து, சரியான பிறகு போடலாம். சென்ற முறை தடுப்பூசி போட்டதால் அலர்ஜி, அனாபைலாக்சிஸ், வலிப்பு மற்றும் தொடர் அழுகை இருந்தால், மருத்துவரை ஆலோசித்துவிட்டு தடுப்பூசி போடலாம்.''

''பென்டாவேலன்ட் தடுப்பூசியைத் தடைசெய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் வழக்கைப் பற்றிச் சொல்லுங்கள்?''

பாதுகாப்பானதுதான் பென்டாலேவன்ட்

'பென்டாவேலன்ட் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளில் கேரளாவில் 15, ஹரியானாவில் 5, தமிழ்நாட்டில் 4, கர்நாடகாவில் 3 என மொத்தம் 29 குழந்தைகள் இறந்துள்ளனர். இந்தத் தடுப்பூசியைத் தடைசெய்ய வேண்டும் என்று எய்ம்ஸ்-ல் பணிபுரிந்த டாக்டர் யோகேஷ் ஜெயின் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடுத்துள்ளார்.

தடுப்பூசி போடப்பட்டதைத் தொடர்ந்து இறந்த குழந்தைகளை ஆய்வுசெய்த கமிட்டி, (National Adverse Events Following Immunization Committee),  'குழந்தைகள், தடுப்பூசியால் இறக்கவில்லை’ என்று தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இறந்த குழந்தைகளில் சிலருக்கு இதயப் பிரச்னையும், மேலும் சில குழந்தைகளுக்கு வேறு சில பிரச்னைகள் இருந்ததும் தெரியவந்தன.

குழந்தைப் பருவத்தில் காணப்படும் உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து பாதுகாப்பதற்காகத்தான் அந்தக் காலகட்டத்தில் தடுப்பூசி அதிக அளவில் கொடுக்கப்படுகிறது. ஆனால் குழந்தை வேறு காரணங்களால் இறந்தாலும், தடுப்பூசியுடன் அதைத் தொடர்புபடுத்திக்கொள்கிறார்கள். இலங்கையிலும் இந்தோனேஷியாவிலும்கூட பென்டாவேலன்ட் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் இறந்துபோனதாக, அங்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. பின்னர், குழந்தைகளின் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று தெரியவந்ததும் தடையைத் தளர்த்திவிட்டனர்.  

பென்டாவேலன்டின் பின்விளைவுகளைக் காட்டிலும் அதன் பயன் பல மடங்கு அதிகம். எனவே, இந்தத் தடுப்பூசி பற்றி மக்கள் பீதியடையத் தேவை இல்லை' என்றார் மருத்துவர்.

நலம் காக்கும் தடுப்பூசி

2007-ல் இந்தியக் குழந்தைகள் நல மருத்துவர் கூட்டமைப்பால் (IAP) பென்டாவேலன்ட் தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டது. 2011-ல் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. பென்டாவேலன்ட் தடுப்பூசியை 170 நாடுகள் வெற்றிகரமாகக் கொடுக்கின்றன. இந்தியாவில் இதுவரை 85 லட்சம் டோஸ் பென்டாவேலன்ட் தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 2015-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் இதை அமல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

- மு.ஜெயராஜ்  படம்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு