Published:Updated:

தாடை பகுதியில் அரிய சிகிச்சை!

தாடை பகுதியில் அரிய சிகிச்சை!

பிரீமியம் ஸ்டோரி
##~##

புற்றுநோய் காரணமாக தாடையில் குறிப்பிட்ட பகுதி அகற்றப்பட்டவருக்கு, தாடை எலும்பை நகர்த்துதல் மூலம் இயற்கையான தாடையை உருவாக்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த பல் மற்றும் முகச் சீரமைப்பு நிபுணர் எஸ்.எம்.பாலாஜி.

எலும்பை நகர்த்துதல் தொழில்நுட்பம் பற்றியும், பல் மற்றும் முகச் சீரமைப்புத் துறையில் இதுபோன்ற வேறு என்னென்ன நம்பிக்கை தரும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்றும் டாக்டர் எஸ்.எம்.பாலாஜியிடம் கேட்டோம்.

''மருத்துவத் துறையில் ஸ்டெம்செல், டிஷ்யூ இன்ஜினீயரிங் என்று நாளுக்குநாள் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இவற்றை, பல் மற்றும் முகச் சீரமைப்புத் துறையில் அறிமுகப்படுத்தி, பல்வேறு ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறோம். 'டிஸ்ட்ராக்ஷன் ஆஸ்டியோஜெனிசிஸ்’ (Distraction Osteogenesis (DO)) என்ற எலும்பை நகர்த்துதல் என்பது, இதில் ஒரு குறிப்பிடத்தக்க சிகிச்சை.

தாடை பகுதியில் அரிய சிகிச்சை!

55 வயதான ஆண் ஒருவருக்கு வலது பக்கத் தாடையில் ஒரு வீக்கம் இருந்தது. இதை பயாப்சி பரிசோதனை செய்தபோது அவருக்குப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. உடனடியாக புற்றுக்கட்டி அகற்றப்பட்டது. இதனால், அந்த இடம் பள்ளமாக இருந்தது.  

நாம் பேசுவதற்கும், உணவை மென்று விழுங்குவதற்கும் நம் கீழ்த் தாடைப் பகுதி பெரிதும் உதவியாக இருக்கும். இந்தப் பகுதி விபத்தில் காயம், புற்றுநோய்க் கட்டி போன்றவற்றால் பாதிக்கப்படும்போது பேச, சாப்பிட மிகவும் கஷ்டமாக இருக்கும்.

இப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்பெல்லாம் தோள்பட்டை, இடுப்பு எலும்பு, கால் எலும்பில் இருந்து எலும்பு எடுத்து தாடையில் பொருத்தப்பட்டு அறுவைசிகிச்சை செய்யப்படும். இந்த அறுவைசிகிச்சைக்கு நேரம் அதிகம் ஆகும். நோயாளிகளும் அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்கவேண்டி இருக்கும். எலும்புக்குப் பதில் செயற்கை பிளேட், ஸ்க்ரூ பொருத்தப்பட்டும் அறுவைசிகிச்சை செய்யப்படும்.

தாடை பகுதியில் அரிய சிகிச்சை!

ஆனால், இந்த நபருக்கு இப்படி எதையும் செய்ய முடியாத நிலை. அந்த அளவுக்கு தாடையில் இடைவெளி அதிகமாக இருந்தது. அவருக்கு 'டிஸ்ட்ராக்ஷன் ஆஸ்டியோஜெனிசிஸ்’ முறையில் சிகிச்சை அளிப்பது என்று முடிவெடுத்தோம். இதற்கென பிரத்யேகக் கருவி அவரது தாடையில் இடைவெளி இருந்த பகுதியில் பொருத்தப்பட்டது. தினமும் ஒரு 1 மி.மீ. அளவுக்கு அந்தக் கருவி முடுக்கிவிடப்பட்டது. இப்படிச் செய்யும்போது இடைவெளியை நோக்கி எலும்பு நகர்த்தப்படும்.

இப்படி ஒரு வாரம் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் அவருக்கு அந்தக் கருவி முடுக்கிவிடப்பட்டது. நான்கு ஐந்து வாரத்துக்குப் பிறகு அவருக்கு வலது பக்கத்தில் 4.6 செ.மீ, இடது பக்கத்தில் 4.3 செ.மீ. அளவுக்கும் நகர்த்தப்பட்டு இருந்தது. தொடர்ந்து சில வாரங்கள் அவருக்கு எலும்பு நகர்த்துதல் தூண்டப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதியில் இயற்கையான முறையில் கடினமான மற்றும் மென்மையான திசுக்கள் உற்பத்தியாகி பள்ளத்தை மூடி இருந்தன. இப்படி வளர்ச்சியடைந்த பகுதியைப் பலப்படுத்த நான்கு வாரங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது. நான்கு வாரங்களுக்குப் பிறகு, எலும்பை நகர்த்துவதற்காகப் பொருத்தப்பட்ட கருவி அகற்றப்பட்டது. எலும்பு சேரும் இடத்தில் ஆர்.எச்.பி.எம்.பி.2 (rhBMP2) என்ற புரதம் செலுத்தப்பட்டது. இது, அந்த இடத்தில் உள்ள ஸ்டெம் செல்களை ஊக்குவித்து எலும்பு உருவாக்கும் செல்களாக மாற்றி, எலும்பை தாமாகவே வளரச் செய்துவிடுகிறது. தற்போது முகத்தில் எந்தவிதக் குழியும் இன்றி அவர் நலமுடன் இருக்கிறார்' என்றார் டாக்டர் பாலாஜி.

- பா.பிரவீன் குமார்

 டிஸ்ட்ராக்ஷன் ஆஸ்டியோஜெனிசிஸ் கண்டறிந்த கதை

ஷியாவைச் சேர்ந்த டாக்டர் இல்லிசரோ, எலும்பு முறிவு நோயாளிகளுக்கு எலும்பை இணைக்க வெளிப்புறத்தில் பொருத்தக்கூடிய பிரத்யேகக் கருவியைப் பயன்படுத்தி வந்தார்.

நீண்ட காலம் காயம் ஆறாமல் இருந்த கால்பந்தாட்ட வீரருக்கு அந்தக் கருவியைப் பொருத்தினார் டாக்டர் இல்லிசரோ. தினமும் அந்தக் கருவியில் உள்ள ஸ்க்ரூவை சில மி.மீ. அளவுக்குத் திருப்ப வேண்டும் என்று ஆலோசனையையும் வழங்கினார் டாக்டர். அந்தக் கால்பந்தாட்ட வீரரோ, டாக்டர் சொன்ன திசைக்கு எதிராக ஸ்க்ரூவைத் திருப்பினார். ஒரு வாரம் கழித்து கால்பந்தாட்ட வீரரை டாக்டர் பரிசோதித்தார். அப்போது காயம் அடைந்த கால், ஒரு சில மி.மீ. அளவுக்கு அதிகரித்திருந்தது. அப்போதுதான், விளையாட்டு வீரர் செய்த தவறைக் கண்டறிந்தார். இப்படி எலும்பை நகர்த்துவதன் மூலம் அந்த இடத்தில் புதிய எலும்பு வளரும் என்று டாக்டர் இல்லிசரோ கண்டறிந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு