Published:Updated:

முதியோரின் உயிர்காக்கும் தடுப்பூசி!

முதியோரின் உயிர்காக்கும் தடுப்பூசி!

முதியோரின் உயிர்காக்கும் தடுப்பூசி!

முதியோரின் உயிர்காக்கும் தடுப்பூசி!

Published:Updated:
##~##

''குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதும், இளம் வயதினருக்கு மஞ்சள் காமாலை, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் போன்றவற்றுக்குத் தடுப்பூசிகள் போடுவதும் அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், முதியவர்களுக்குக்கூட தடுப்பூசி இருக்கிறது. இதைப் போட்டுக்கொள்வது அவர்களின் உயிரையே காப்பாற்றும். ஆனால், இதுதொடர்பான விழிப்பு உணர்வு மிகக் குறைவாகவே உள்ளது'' என்கிறார் முதுமைக்கான சிறப்பு மருத்துவர் லட்சுமிபதி ரமேஷ்.

'குழந்தை பிறந்ததும் நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டால், உடல் ஊனம் முதல் உயிரிழப்பு வரை ஏற்படலாம். வயது அதிகரிக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் முழு வளர்ச்சிபெற்று நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும். அது வயதாகும்போது மீண்டும் குறைய ஆரம்பிக்கிறது. முதுமைப்பருவத்தில் நோய் எதிர்ப்பு ஆற்றல் மிகமிகக் குறைவாகவே இருக்கும். அந்த நேரத்தில் வைரஸ், பாக்டீரியா நோய்த் தொற்று ஏற்படும்போது உயிரிழப்பும் நேரிடலாம். முதியவர்கள் சில தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதன் மூலம் வாழ்நாளை ஆரோக்கியமாக நீட்டிப்பதுடன் அசௌகரியங்களையும் தவிர்க்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதியோரின் உயிர்காக்கும் தடுப்பூசி!

முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படுவது நிமோனியா பிரச்னையால்தான். நிமோனியா என்பது ஒரு வகை பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது ஒரே ஒரு கிருமிதான். இந்தக் கிருமிக் குடும்பத்தில் 90 வகையான கிருமிகள் உள்ளன. இதில் பல, சாதாரணமாகவே மக்கள் மத்தியில் காணப்படும். இதில் 30 வகையான கிருமிகள் மட்டும் நிமோனியாவை ஏற்படுத்துகிறது. இந்த 30-ல் 10 மட்டுமே மிகப் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கி, உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன. இந்தக் கிருமி நுரையீரலைத் தாக்கும்போது, மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சு வலி, காய்ச்சல் போன்ற பிரச்னைகளால் உயிரிழப்பு ஏற்படும். இதைத் தவிர்க்க தடுப்பூசி உண்டு. இந்தத் தடுப்பூசியில், கிருமியின் செல்லில் இருந்து புரதத்தை எடுத்து, அது செயல்படாத நிலையில் நம் உடலினுள் செலுத்தப்படும். இதனால், நம் உடல் அந்தக் கிருமிக்கு எதிராகச் செயல்படத் தயாராகும். எதிர்காலத்தில் இந்தக் கிருமித் தொற்று வந்தாலும், அவர்களுக்கு ஒன்றும் நேராது. 50 வயதைக் கடந்தவர்கள் யார் வேண்டுமானாலும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். மது, சிகரெட் பழக்கம் உள்ளவர்கள்; ஆஸ்துமா, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில், இவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் நோய் எதிர்ப்பு சக்தி, மிகக் குறைவாகவே இருக்கும். ஒரே ஒரு டோஸ் போட்டால் போதும்.

முதியோரின் உயிர்காக்கும் தடுப்பூசி!

அடுத்தபடியாக ஃப்ளூ காய்ச்சலுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பொதுவாக இந்த வகைக் காய்ச்சலை வைரஸ் கிருமி ஏற்படுத்துகிறது. இந்தக் கிருமி, செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களில் அதிகமாகப் பரவும். இதைத் தடுக்க ஆகஸ்ட் மாதத்திலேயே தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில், இந்தத் தடுப்பூசி போட்டு ஒரு மாதத்துக்குப் பிறகுதான் இந்தக் கிருமிக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் இந்தக் கிருமியின் தன்மை மாறுபட்டுக்கொண்டே இருக்கும். தெற்கு ஆசிய அளவில் கிருமியின் தன்மையை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் தடுப்பு மருந்து தயாரிக்கப்படுகிறது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது.

சோரிசெல்லா சோஸ்டர் வைரஸ் என்ற கிருமியால் சின்னம்மை ஏற்படுகிறது. முதியவர்களுக்கு இந்த அம்மை தாக்கும்போது, காயம் ஏற்பட்ட இடத்தில் கடுமையான வலி ஏற்படும். இந்த வலி நீண்ட நாட்களுக்கு நீடிக்கும். 60 வயதைக் கடந்தவர்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது. சின்னக் குழந்தையாக இருக்கும்போது, சின்னம்மைத் தடுப்பூசி அனைவருக்கும் போட்டிருப்பார்கள். இருந்தாலும், 60 வயதைக் கடந்தவர்களும் மேலும் ஒரு முறை தடுப்பூசி எடுத்துக்கொள்வது தவறு இல்லை. இதுதவிர டெட்டனஸ், ஹெபடைட்டிஸ் பி போன்ற நோய்க்கு எதிரான தடுப்பூசிகளும் உள்ளன.

இந்தத் தடுப்பூசிகள் எல்லா மருத்துவமனைகளிலும் கிடைக்கின்றன. 50 வயதைக் கடந்தவர்கள், என்ன மாதிரியான தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது, தடுப்பூசியால் ஒவ்வாமை ஏதேனும் இருந்தாலும் அதுபற்றி குடும்ப டாக்டரிடம் கலந்து ஆலோசனை பெற்று முடிவுசெய்யலாம். இதனைச் செய்வதன் மூலம் கிருமித் தொற்றுக்கான வாய்ப்பு குறையும். உடல்நலக் குறைவு, மருத்துவமனையில் அட்மிட் ஆவது, பணச் செலவு அனைத்தும் தவிர்க்கப்படும். மேலும், குடும்பத்தினருக்கும் தேவையற்ற தொந்தரவு கொடுப்பதும் தவிர்க்கப்படும். அனைத்துக்கும் மேலாக, உயிர் காக்கப்படும்' என்கிறார் டாக்டர் லட்சுமிபதி ரமேஷ்.

ப்ளீஸ்... டேக் கேர்!

- பா.பிரவீன்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism