Published:Updated:

சர்க்கரை வகைக்கு ஏற்ற உணவு!

சர்க்கரை வகைக்கு ஏற்ற உணவு!

சர்க்கரை வகைக்கு ஏற்ற உணவு!

சர்க்கரை வகைக்கு ஏற்ற உணவு!

Published:Updated:
##~##

'சர்க்கரை நோய் பற்றிய கவலை இப்போது அனைவருக்குமே இருக்கிறது. அந்த நோய் வராமல் தடுக்க, உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு எனப் பல வழிகள் இருந்தாலும், வந்த பின் என்ன செய்வது என்று பலருக்கும் தெரிவது இல்லை. ரத்தப் பரிசோதனையில் சர்க்கரை, சற்று ஏறினாலும் 'இனி தித்திப்பான உணவுகளை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதோ’ என்ற நினைப்பே வருத்தி எடுக்கும். யாருக்கு வேண்டுமானாலும் சர்க்கரை நோய் வரலாம். டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்பக் காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோய்க்கு என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது பற்றி உணவு மற்றும் ஊட்டச் சத்து நிபுணர் ஷீலா பால் விரிவாகச் சொல்கிறார்.

டைப் 1 சர்க்கரை நோய்:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'பிறந்த குழந்தைகளுக்குக்கூட சர்க்கரை நோய் வரலாம்... குழந்தைகளின் எடை திடீரெனக் குறைந்தால், உடனே கவனிக்க வேண்டும். பொதுவாக, குழந்தைகள் எடை அதிகரிக்காமல் அதே எடையில் இருப்பார்களே தவிர, எடை குறைய மாட்டார்கள். இந்தக் குழந்தைகளுக்கு அதிகமாகப் பசிக்கும். அதிகமாகச் சாப்பிடுவார்கள். தாகமும் அதிகமாக இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். இப்படி அதிகப் பசி இருந்தும் உடல் எடை குறைவு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவர் அறிவுரை பெற்று, ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்' என்று ஆலோசனை கூறும் ஷீலா பால், இந்த வயதினருக்கான உணவுமுறையைப் பட்டியலிட்டார்.

சர்க்கரை வகைக்கு ஏற்ற உணவு!

'இவர்களுக்கெனத் தனிப்பட்ட ஆகாரம் என எதுவும் கிடையாது. எல்லோரும் சாப்பிடுவதையே சாப்பிடலாம். புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, நார்ச் சத்து மற்றும் இரும்பு, கால்சியம் போன்ற தாது உப்புகள் சேர்ந்த சரிவிகித உணவு அளிக்க வேண்டும். ஒரே வேளையாகச் சாப்பிடாமல், சிறுகச் சிறுகச் சாப்பிட வேண்டும். காலை ஆகாரம் மட்டுமல்ல, எந்த நேரத்து உணவையும் தவிர்க்கக் கூடாது. அப்படித் தவிர்க்கும்போது, அடுத்த வேளை அதிகமாகச் சாப்பிட நேரும்! குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு, நம்முடைய பாரம்பரிய உணவே சிறந்தது. வீட்டிலேயே பக்குவப்படுத்தி அரைக்கும் சத்துமாவு, வேர்க்கடலை, சுண்டல், உடைத்த கடலை, அரிசிப்பொரி, பழங்கள், கொட்டைப் பருப்புகள் (நட்ஸ்) போன்றவை மிகவும் சிறந்தவை. பழங்களை ஜூஸாகப் பிழிந்து குடிப்பதைவிட, பழங்களாகவே சாப்பிடுவது மிகவும் நல்லது. காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகள் எனில், காய்களை வேகவைத்து அரைத்து, தோசை மாவு அல்லது சப்பாத்தி மாவில் கலந்து வண்ணமயமாகக் கொடுக்கலாம். ஆனால், எல்லாமே அளவோடு இருக்க வேண்டும். குழந்தைகளின் எடை, உயரம், வயது மற்றும் அவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப உணவின் அளவையும் நிர்ணயித்துக்கொள்ளலாம்.

சர்க்கரை வகைக்கு ஏற்ற உணவு!

டைப் 2 சர்க்கரை நோய்:

'வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் மரபு வழியில் வரும் சர்க்கரை நோயை நம்மால் தவிர்க்க முடியும். பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்றாலே, பிள்ளைகள் கவனமாக, முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகள் மேற்கொண்டால் போதும். சர்க்கரையை உணவில் சேர்த்துக்கொள்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். (வெல்லம், கருப்பட்டி போன்றவையும்தான்). எண்ணெய்ப் பலகாரங்களைக் குறைக்க வேண்டும். சமையலுக்கு தொடர்ந்து ஒரே எண்ணெயைப் பயன்படுத்தாமல், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய் என மாற்றி மாற்றி வாங்க வேண்டும். ஒரு நபருக்கு மாதத்துக்கு அரை கிலோ எண்ணெய் போதும். காய்கறிகளின் அளவைக் கூட்டி, அரிசியின் அளவைக் குறைக்க வேண்டும். அதோடு கீரை, பழங்கள் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும்.'

சர்க்கரை வகைக்கு ஏற்ற உணவு!

கர்ப்பிணிகளுக்கு சர்க்கரை நோய்:

'கர்ப்பிணிகள், இரும்பு மற்றும் கால்சியம் சத்துள்ள உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை (முள்ளங்கி இலை, கொத்துமல்லி, புதினாவாகக் கூட இருக்கலாம்) இருப்பது அவசியம். நச்சுக்கொட்டை இலை மிகவும் நல்ல உணவு. பலருக்குத் தெரியாத இன்னும் ஒரு விஷயம், காலிஃப்ளவர் இலைகளைச் சமைத்துச் சாப்பிடலாம். அதில் அவ்வளவு சத்து இருக்கிறது. கர்ப்பிணிகள் தினசரி ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால், அவர்களுக்குத் தேவையான வைட்டமின் சி சத்து கிடைத்துவிடும். நோய்த்தடுப்பு சக்தியையும் அதிகரிக்கும். உடல், இரும்புச் சத்தைக் கிரகிக்க, வைட்டமின் சி துணைபுரியும்.

சர்க்கரை வகைக்கு ஏற்ற உணவு!

தினசரி, அரை லிட்டர் பால் அருந்த வேண்டும். நடைப்பயிற்சியின்போது நம் மேல்படும் சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி, கால்சியம் கிரகித்தலுக்குத் துணைபுரியும். பல வண்ணங்களில் காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பால், தயிர், மோர் தவிர, வெள்ளையாக இருக்கும் அனைத்து உணவுகளுமே (அரிசி, சர்க்கரை, மைதா போன்றவை) சத்து குறைந்தவைதான்.

ஊட்டச் சத்து மாத்திரைகள் அதிகம் வேண்டாம். கர்ப்பமானதுமே 'இரண்டு உயிர்களும் சாப்பிட வேண்டும்’ என்று நினைத்து அதிகமாகச் சாப்பிடுவது தவறு. இதனால், கர்ப்பக் கால சர்க்கரை நோய், உடல் பருமன், குழந்தைக்கு உடல் எடை கூடுதல், இதய நோய் ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் அதிகம். அதோடு, பிரசவமும் சிரமமாகும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, உணவின் அளவைக் கூட்டலாம்.

சர்க்கரை வகைக்கு ஏற்ற உணவு!

முதியவர்களுக்கான உணவு:

''வயதானவர்களால் பச்சைக் காய்கறிகளைச் சாப்பிட முடியாது. அவர்கள், காய்கறிகளை நன்கு வேகவைத்துச் சாப்பிடலாம். தானியங்கள், முழுப்பருப்பு வகைகள், நட்ஸ் வகைகள் சேர்த்து அரைத்த மாவில் கஞ்சி, தோசை சாப்பிடலாம். அதுவும் அளவாகத்தான் சாப்பிட வேண்டும். மிருதுவான உணவு எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பிரெட்டையும் பிஸ்கட்டையும் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அவை முதியவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படக் காரணமாகும். மலச்சிக்கலைத் தவிர்க்க, நார்ச் சத்துள்ள உணவுகளைக் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். மேலும் எலும்புகள் பலவீனமடையாமல் பாதுகாக்க, பால், தயிர் கட்டாயம் தேவை.''

- பிரேமா நாராயணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism