Published:Updated:

கிட்னியைக் காக்க சூப்பர் ரெசிபி!

கிட்னியைக் காக்க சூப்பர் ரெசிபி!

கிட்னியைக் காக்க சூப்பர் ரெசிபி!

கிட்னியைக் காக்க சூப்பர் ரெசிபி!

Published:Updated:
##~##

'நீரின்றி அமையாது உலகு’ இது உலகுக்கும் பொருந்தும்... உடலுக்கும் பொருந்தும். நம் உடலின் செயல்பாட்டுக்கு, தண்ணீர் மிக முக்கியம். தினமும் உடலுக்கு, போதிய தண்ணீர் இல்லாமல் போகும்போது, சிறுநீரகச் செயல்பாட்டில் பிரச்னை ஏற்படும். அதுவே, சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு மிக முக்கியக் காரணம். அதிக அளவு தண்ணீர் குடிப்பதும், கல் அடைப்பு உருவாகாமல் தடுக்கும் சத்தான உணவுகளைச் சாப்பிடுவதன் மூலமே கல் அடைப்பு வராமல் காக்கலாம்.  

''வாழைத்தண்டில் செய்யும் சாறு, கூட்டு இவை எல்லாமே சிறுநீரகக் கல்லைக் கரைக்க உதவும் மிகச் சிறந்த உணவு. தவிர, காய்கறி, பழங்கள், தானியங்கள் என கல்லைக் கரைக்கக்கூடிய உணவுகள் நிறையவே இருக்கின்றன'' என்கிறார் சென்னை சுந்தரம் மெடிக்கல் ஃபவுண்டேஷனின் தலைமை ஊட்டச் சத்து நிபுணர் எம்.பாமினி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சிறுநீரகக் கற்களில் 'கால்சியம் கற்கள்’ மற்றும் 'ஆக்சலேட் கற்கள்’ என இரு வகை உண்டு. அவற்றுள் எந்த வகைக் கல் வந்திருக்கிறது என்று தெரிந்து, அதற்கேற்ப உணவைக் கடைப்பிடிக்க வேண்டும். திரவ உணவுதான் மிகவும் முக்கியம். நாள் ஒன்றுக்கு, குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். பால், மோர், ஜூஸ், சூப் எல்லாமே திரவங்கள்தான் என்றாலும், சாதாரணக் குடிநீர் குடிப்பது அவசியம். உடல் எடை அதிகமாக இருந்தால், கண்டிப்பாக எடையைக் குறைக்க வேண்டும். எடை அதிகரிக்காமல் பராமரிக்க வேண்டும்' என்றார்.

டயட்டீஷியன் பாமினி சொன்ன உணவுப்பட்டியலின்படி, சில ரெசிபிகளைச் செய்து வழங்குகிறார் 'சமையல்கலை நிபுணர்’ ரேவதி சண்முகம்.

கிட்னியைக் காக்க சூப்பர் ரெசிபி!

இஞ்சி  நெல்லிக்காய் ஜூஸ்

இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக்கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.

கிட்னியைக் காக்க சூப்பர் ரெசிபி!

சுரைக்காய் வரகரிசி அடை

அரை கப் வரகரிசியைச் சுத்தம் செய்து ஊறவைக்கவும். கால் கப் உளுத்தம்பருப்புடன் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு மூன்றையும் தலா ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து ஊறவைக்கவும். பருப்புகளும் வரகரிசியும் ஊறியதும், அவற்றுடன் ஒரு கப் சுரைக்காய்த் துருவல், ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு, ஒன்றரை டீஸ்பூன் சீரகம், இரண்டு காய்ந்த மிளகாய், கொஞ்சம் உப்பு சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும். இந்த மாவில், அரை கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, கறிவேப்பிலை, கொத்துமல்லியை நறுக்கிக் கலந்து, தோசைக்கல்லில் சிறிய அடைகளாக ஊற்றி, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

கிட்னியைக் காக்க சூப்பர் ரெசிபி!

தினை தோசை

நன்றாகச் சுத்தம் செய்த ஒரு கப் தினையுடன் கால் கப் உளுத்தம்பருப்பு, அரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து, அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக அரைக்கவும். இதில் உப்பு கலந்து ஐந்து மணி நேரம் புளிக்கவைத்து, தோசையாக ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். இதனுடன் காரச்சட்னி தொட்டுச் சாப்பிடலாம்.

குறிப்பு: இந்த மாவை ஃப்ரிட்ஜில் வைத்தால், இரண்டு நாட்களுக்குள் உபயோகிக்க வேண்டும்.

கிட்னியைக் காக்க சூப்பர் ரெசிபி!

பீர்க்கங்காய்க் கடைசல்

கால் கிலோ பீர்க்கங்காயைக் கழுவி, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இதனுடன் இரண்டு தக்காளி, நான்கைந்து சின்ன வெங்காயம், இரண்டு பச்சைமிளகாய் ஆகியவற்றையும் நறுக்கவும். குக்கரில், நறுக்கிய பீர்க்கங்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் எல்லாவற்றையும் போட்டு, சிறிய நெல்லிக்காய் அளவு புளியை, அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்து மூடிவைக்கவும். மூன்று விசில் வந்ததும் இறக்கி, நீரை மட்டும் வடித்துத் தனியாகவைக்கவும். வெந்த பீர்க்கங்காய்க் கலவையை நன்றாகக் கடையவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்து, நான்கு பூண்டுப் பற்களை நசுக்கிப்போட்டு சிவந்ததும், பீர்க்கங்காய்க் கடைசலையும் கொட்டி, மீண்டும் ஒரு முறை நன்றாகக் கடைந்துவிடவும். முதலில் தனியே எடுத்துவைத்த தண்ணீரைச் சேர்த்துக் கலந்தால், சுவையான கடைசல் தயார்.

இட்லி, தோசை, சாதம் எல்லாவற்றுக்குமே சூப்பர் காம்பினேஷன் இந்தக் கடைசல்.  

கிட்னியைக் காக்க சூப்பர் ரெசிபி!

சௌசௌ துவையல்

சௌசௌ காயை நன்றாகக் கழுவிக்கொண்டு, பாதி மட்டும் எடுத்து நறுக்கிக்கொள்ளவும். தோல் நீக்கத் தேவை இல்லை. ஆறு கோவைக்காய்களை எடுத்து, அவற்றையும் கழுவி, தோல் நீக்காமல் நறுக்கவும். கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய சௌசௌ, கோவைக்காய், இரண்டு பச்சைமிளகாய், மூன்று சின்ன வெங்காயம், சிறிய நெல்லிக்காய் அளவு புளி, கால் கப் தேங்காய்த்துருவல், ஒரு கைப்பிடி கொத்துமல்லித்தழை, ஐந்தாறு பூண்டுப்பல், சுவைக்கேற்றவாறு உப்பு எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகப் போட்டு ஐந்து நிமிடங்கள் வதக்கி இறக்கவும். ஆறியதும் கரகரப்பாக அரைத்து எடுக்கவும். மிகவும் ருசியாக இருக்கும் இந்த சௌசௌ துவையல்.

- பிரேமா நாராயணன்

படங்கள்: ப.சரவணகுமார்

 'ஆக்ஸலேட் கல்’ உள்ளவர்களுக்கான உணவுப் பட்டியல்:

• 'ஆக்ஸலேட்’ வகைக் கற்கள் இருப்பவர்கள், இறைச்சி, கோழி இறைச்சி, மீன் சாப்பிடலாம்.

• எல்லா வகைக் காய்கறிகளும் சேர்த்துக்கொள்ளலாம். நீர்க்காய்கள் மிகவும் நல்லது.

• சோயா தயாரிப்புகள் மற்றும் கோகோ, சாக்லேட், பிளாக் டீ இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

• ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற 'பெர்ரி’ வகைப் பழங்கள் சாப்பிட வேண்டாம்.

• 'ஸ்பினாச்’ எனப்படும் பசலைக் கீரையைத் தவிர்ப்பது நல்லது.

 'கால்சியம் கல்’ இருப்பவர்களுக்கான உணவுப் பட்டியல்:

• பூசணிக்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், சௌசௌ, பீர்க்கங்காய் போன்ற நீர்ச் சத்துடைய காய்கறிகள். சூப், சாலட், பொரியல் செய்து உண்ணலாம்.

• தக்காளி, வெண்டைக்காய் சாப்பிடக் கூடாது என்ற தவறான நம்பிக்கை உள்ளது. இரண்டு காய்களையுமே சாப்பிடலாம்.

• அத்திப்பழம் மற்றும் விளாம்பழம் தவிர, அனைத்துப் பழங்களையும் சாப்பிடலாம்.

• அசைவ உணவில் நண்டு தவிர மற்ற அனைத்து இறைச்சி மற்றும் மீன் வகைகளை சேர்த்துக்கொள்ளலாம்.

• அனைத்து தானிய வகைகள் எடுத்துக்கொள்ளலாம்.

• பாலில் அதிக கால்சியம் இருப்பதால், குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. எல்லோரும் ஒரு நாளைக்கு 500 மி.லி. பால் அருந்தலாம் என்றால், கால்சியம் கல் உள்ளவர்கள் 250 மி.லி.தான் (தயிரையும் சேர்த்து) அருந்த வேண்டும்.

• வாரம் ஒரு முறை கால்சியம் செரிந்த கேழ்வரகு, கீரை (கூட்டு, கடைசல், பொரியல் தவிர்த்து, குழம்பு அல்லது அடையில் சேர்க்கலாம்), வாரம் ஒருநாள் மட்டும் அனைத்து வகைக் கிழங்குகள்.  

• கால்சியம் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism