Published:Updated:

அதிகரிக்கும் தற்கொலைகள்! உளவியல் காரணங்கள், தீர்வுகள்!

அதிகரிக்கும் தற்கொலைகள்! உளவியல் காரணங்கள், தீர்வுகள்!

அதிகரிக்கும் தற்கொலைகள்! உளவியல் காரணங்கள், தீர்வுகள்!

அதிகரிக்கும் தற்கொலைகள்! உளவியல் காரணங்கள், தீர்வுகள்!

அதிகரிக்கும் தற்கொலைகள்! உளவியல் காரணங்கள், தீர்வுகள்!

Published:Updated:
அதிகரிக்கும் தற்கொலைகள்! உளவியல் காரணங்கள், தீர்வுகள்!

`நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருக்கிறார் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். இது சாதாரண விஷயமல்ல; பெரிய சவால். சரித்திரம் படைக்கும் மரணத்தைத் தழுவுவது சில சாதனையாளர்களுக்கு மட்டுமே சாத்தியம். இயற்கையாக மரணம் வருவதோ, எதிர்பாராமல் நிகழ்வதோகூட ஒப்புக்கொள்ளக்கூடியது. மனமொடிந்து, இந்த வாழ்க்கையோ, உறவுகளோ வேண்டாம் என்று தற்கொலை செய்துகொள்வது எந்த மனிதனுக்கும் நிகழக் கூடாதது. தற்கொலை, அதற்கான காரணங்கள், ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துவரும் இதன் எண்ணிக்கை, புள்ளிவிவரம் எல்லாம் நம்மைக் கலங்கடிக்கின்றன. 

நேஷனல் க்ரைம் ரெகார்ட்ஸ் பீரோ (NCRB)-வின் புள்ளிவிவரப்படி, 2015-ம் ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்த தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 1,33,623. இவர்களில் 93,586 பேர் (70 சதவிகிதம் பேர்) ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள். இதிலும் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் ஆகியவற்றோடு மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது தமிழ்நாடு. பொருளாதாரத்தைத் தேடி ஓடும் தறிகெட்ட இன்றைய வாழ்க்கை முறை இந்த எண்ணிக்கையை வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமாக்கும் என்றே தோன்றுகிறது. 

`நிலையானது மரணம்... நிலையில்லாதது வாழ்க்கை’  என்றெல்லாம் தத்துவம் பேசினாலும், இன்னொரு முறை இந்த மனிதப்பிறவி நமக்கு வாய்க்குமா என்பது நம்மில் யாருக்கும் தெரியாது. எனவே, தெளிவான சிந்தனை உள்ளவர்கள் யாரும் தற்கொலை என்கிற முடிவைக் கையில் எடுக்க மாட்டார்கள். அனுபவசாலிகளான பெரியவர்கள், `போன பொறப்புல என்ன பாவம் செஞ்சேனோ, இப்பிடி அவதிப்படுறேன். இந்தப் பிறவியிலேயே படவேண்டியதை எல்லாம் பட்டு அத்தனை கஷ்டத்தையும் அனுபவிச்சுட்டுப் போயிடுறேன்’ என எளிதாக எடுத்துக் கொண்டுவிடுவார்கள். எத்தனையோ இன்னல்களில் கரைந்துபோனாலும், இயல்பான மரணத்தை எதிர்கொள்ளத் தயாராவதுதான் மனித இயல்பு. `ஒரு மனிதன் தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளும் நிலைக்குப் போகிறான் என்றால் அவன் எவ்வளவு மனவேதனை அடைந்திருப்பான்?’ என்கிற கேள்வி நிச்சயம் எழும். தீர்க்கவே முடியாத பிரச்னை என்ற ஒன்றே இல்லை என்பதே உண்மை... விதர்பாவில் விவசாயிகள் பஞ்சத்தால் தற்கொலை செய்துகொள்வது போன்ற சமூக, பொருளாதாரக் காரணங்கள் தவிர. 

சரி... தற்கொலைக்கான காரணங்கள் என்னென்ன? குடும்பப் பிரச்னைகள், எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற நாள்பட்ட, தீராத நோய்கள், காதல் இவைதான் முக்கியக் காரணங்கள். இவற்றையும் தாண்டி சிலவற்றைப் பட்டியலிடுகிறார் மனநல மருத்துவர் சீனிவாச கோபாலன்...  ``வேலையின்மை, ஏழ்மை, பரீட்சையில் தோல்வியுறுவது, பொருளாதார நிலையில் ஏற்படும் திடீர் பின்னடைவு, சொத்துத் தகராறு, தொழில் நஷ்டம், போதைக்கு அடிமையாதல், வரதட்சணைப் பிரச்னை, பாலியல் பலாத்காரம், முறையற்ற கர்ப்பம், விவாகரத்து, குழந்தையின்மை, பிரியத்துக்குரியவர்களின் மரணம்... என எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. இனி, கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். 

தற்கொலைக்கான காரணங்கள்...

* சிறுவயதில் ஏற்பட்ட இன்னல்கள், வறுமை. 
* இளம் வயதில் பள்ளியைவிட்டு நீங்குதல், நீக்கப்படுதல்.
* பெற்றோருக்கு இடையே பிரச்னை, அதன் காரணமாக பெற்றோர் பிரிதல். 
* நண்பர்களோடு கருத்து மாறுபாடு, பிரச்னை, உறவு முறிதல். 
* காதல் தோல்வி. 
* போதைப்பழக்கத்துக்கு அடிமையாதல். 
* ஏதோ காரணத்தால் வேலையிலிருந்து நீக்கப்படுதல்; நிறுவனத்தில் இருந்து ஆள்குறைப்பு காரணமாக நீக்கப்படுதல். 
* குடும்ப உறவுகளால் மனரீதியான பிரச்னைகளை எதிர்கொள்ளுதல்... மனப் பதற்றம், மனஅழுத்தம் ஏற்படுவது போன்றவை. 
* குடும்பத்தில் யாராவது தற்கொலை செய்துகொண்டால் அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பு. 
* சமுதாயரீதியாக ஒதுக்கப்படுதல். 
* மாற்றுத்திறனாளியாக இருந்து, அதன் காரணமாக மற்றவர்களால் மனக்கசப்புக்கு ஆளாகுதல். 
* சட்டச் சிக்கலில் மாட்டிக்கொள்வது. 
* சுயகௌரவத்துக்கு பங்கம் ஏற்படும் நிலைமை வந்தால், அதனால் மனதளவில் பாதிக்கப்படுவது. 
* சமீபத்தில் ஏற்பட்ட இழப்பு. உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ எதிர்கொண்ட நோய் அல்லது பிரச்னை.
* உறவினர்களில் முக்கியமானவர் இறந்துபோவது அல்லது பிரிந்துபோவது. 
* உறவினர்களோடும் மற்றவர்களோடும் தான் சேர்ந்து இல்லை (Belongingness) என்கிற எண்ணம். தான் மற்றவர்களுக்கு பயனில்லாமல் இருக்கிறோம் என்கிற நினைப்பு.
* மற்றவர்களுக்கு நாம் சுமையாக, பாரமாக இருக்கிறோமோ என்று நினைத்துக்கொள்வது. 
* துயரம்... மிக முக்கியமான காரணம். உதாரணமாக, திருமணம் செய்யும் அளவுக்கு வளர்ந்த மகன் இறந்து போவது, பெற்றோரை பாதிக்கும்; தாங்க முடியாது. சிலருக்கு அந்தத் துயரம் வாழ்நாள் முழுக்க தோய்ந்து இருக்கும். எப்போது சமயம் கிடைக்கும், அவர்களோடு சேர்ந்து போய்விடலாம் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். 
* `Role Transition' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். உதாரணமாக, ஒரு தம்பதி. கணவன் வேலைக்குப் போகிறார்; மனைவிக்கு வீட்டு வேலை மட்டும்தான் தெரியும். கணவர் விபத்தில் இறந்துவிடுகிறார். வளர்ந்த, பள்ளிக்குப் போகும் பிள்ளைகள். அப்போது அவர்களுக்கு வீட்டுக்கான பொறுப்பே மாறிவிடும். வேலைக்குப் போகவேண்டியிருக்கும். குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இந்தப் பொறுப்புச் சுமையைத் தாங்க முடியாமல்கூட தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தோன்றும். குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஒருவர். அதனால், அவரின் மனைவி வேலைக்குப் போகவேண்டிய சூழல் ஏற்படும். சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைக்காமல், பொறுப்பின் சுமையைத் தாங்க முடியாமல்கூட தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஏற்படும். 
* ஐடி நிறுவன வேலையில், நிறுவனம் எதிர்பார்க்கும் அளவுக்குத் தன்னிடம் திறமை இல்லை (Skill Deficiency) என்கிற எண்ணம். அதை வளர்த்துக்கொள்ள முடியாமை. மற்றவர்கள் மாதிரி தன்னால் சிறப்பாக வேலை செய்ய முடியவில்லை, எந்த நேரத்திலும் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்கிற இந்த யோசனையேகூட இதற்குக் காரணமாகலாம்.   
* குழந்தையாக இருந்து பெரியவராக வளர்ச்சியடையும்போது, அதை எதிர்கொள்ளும் திறன் இல்லாமை. உதாரணமாக, குழந்தையைப் பொத்திப் பொத்தி வளர்ப்பார்கள் சிலர். வெளியே அனுப்புவதில்லை; யாரோடும் விளையாடவிட மாட்டார்கள். அப்படிப்பட்ட பிள்ளையை திடீரென்று, கல்லூரியில் ஹாஸ்டலில் கொண்டுபோய்ச் சேர்த்தால் கஷ்டப்படுவார்கள். அந்த நிலை வரும்போது இந்த எண்ணம் தோன்றலாம். 
* எல்லாவற்றையும் ஒரு தோல்வியாக நினைத்துக்கொள்வதால்கூட இந்த எண்ணம் ஏற்படலாம். 
* ஆளுமைக் குறைபாடு காரணமாகவும் இது தூண்டப்படலாம். 


 

மாணவர்களைப் பொறுத்த வரை... 
* பரீட்சையில் தேர்ச்சி அடையாமை.
* பள்ளியில் மற்ற மாணவர்களுடன் சுமுகமாக இருக்க முடியாமல் போதல். 
* மற்ற நண்பர்களால் ஒதுக்கிவைக்கப்படுதல். 
* உடல்ரீதியாக ஏதாவது குறைபாடு இருந்தால், அதனால் சுயபச்சாதாபம் ஏற்பட்டு, அதனால் பாதிக்கப்படுவது... 
போன்ற பிரச்னைகள் காரணங்களாக இருக்கின்றன. 

இவையெல்லாம் இருக்கட்டும். தற்கொலைக்கு 90 சதவிகிதம் உளவியல் காரணங்கள் இருந்தாலும், சமூகக் காரணிகளை நாம் ஒதுக்கிவிட முடியாது/.

சரி... தற்கொலை முயற்சியில் ஈடுபடப்போகிறவரை எப்படி அடையாளம் காணுவது? 
* தங்களுடைய தற்கொலை விருப்பத்தை யாரிடமாவது வேறு வழியில் தெரிவித்திருப்பார்கள். 
* தங்களுக்கு வாழ்க்கையிலேயே மிக முக்கியம் எனக் கருதுகிற ஒரு பொருளை, யாருக்கும் கொடுக்க மாட்டேன் என வைத்திருக்கும் பொருளை எளிதாக யாருக்காவது கொடுத்துவிடுவது. 
* விடைபெறுவது போன்ற தொனியில் தொலைபேசியில் பேசுவது. 
* தற்கொலை குறிப்பு எழுதிவைப்பது. 
* பதற்றமாக இருப்பது. 
* எதிலுமே ஈடுபாடு காண்பிக்காமல் இருப்பது. 

இதெல்லாம் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளப் போகிறார் என்பதற்கான ஆரம்ப அறிகுறிகள். இப்படிப்பட்டவர்களை கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.  

தீர்வுகள்... 
* குழந்தைகளுக்கு பள்ளியிலேயே தோல்வியால் ஏற்படும் ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் பக்குவத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். 
* அம்மா, அப்பா இருவரும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டோடு பிள்ளைகளை வளர்க்க வேண்டும். பிள்ளைகளுக்கு வெளியுலகத் தொடர்பை ஏற்படுத்துவது, விளையாடவிடுவது அவசியம். குழந்தைகளின் ஆளுமைத்திறன் வளர அது உதவும். 
* விரக்தி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏமாற்றங்களைத் தாங்கிக்கொள்ளும் குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். 
* இப்போது தற்கொலை எண்ணம் வருபவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க பல மையங்கள் இருக்கின்றன. தொலைபேசியில்கூட தொடர்புகொண்டு அவர்களுடன் பேசலாம். இது நல்ல தீர்வு தரும். 
* `Suicide counter'- என்று ஒன்று இருக்கிறது. நடுத்தர வயது உள்ளவர்கள் தற்கொலை செய்துகொள்வது குறைவு. இளைஞர்களும், வயதானவர்களும் தற்கொலை செய்துகொள்வதுதான் அதிகம். இளைஞர்களுக்கு வாழ்க்கையில் சில சவால்களை எதிர்கொள்ளும் திறன் குறைவாக இருப்பதால் இது நேர்கிறது. வயதானவர்களுக்கு `எல்லாம் போய்விட்டது, நமக்கு யாரும் இல்லை, வாழ்வதில் அர்த்தம் இல்லை’ என நினைத்து இந்த முடிவைத் தேடுகிறார்கள். 30 - 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு மனைவி, குழந்தைகள் இருப்பார்கள். பிள்ளைகளை வளர்க்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும், வீடு கட்ட வேண்டும்... என நிறைய பொறுப்புகள் இருக்கும். இந்தப் பொறுப்புகளை வளர்த்துக்கொள்வதைத்தான் `Suicide counter' என்று சொல்கிறோம். `என் பிள்ளைக்கு கல்யாணம் செஞ்சுட்டா போதும். அதுக்கப்புறம் எனக்கு ஒண்ணும் இல்லை. செத்துப் போய்விடுவேன்’ போன்ற எண்ணங்களை வளர்த்துக்கொண்டால் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணத்தைத் தவிர்க்கலாம். 
* உறவினர்களுடனான உறவைப் பேணுவது; நண்பர்களுடன் அதிகமான நேரத்தைச் செலவிடுவது; ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பது... எல்லாமே இதற்கு நல்ல தீர்வைத் தரும். 
* ஓய்வுகாலத்தைக்கூட பயனுள்ள வகையில் ஏதாவது அமைப்போடு சேர்ந்து பணியாற்றுதல், மற்றவர்களுக்கு உதவி செய்வது என அர்த்தமுள்ளதாக வாழ்க்கையை மாற்றிக்கொண்டால், இந்த எண்ணம் வராது. 
* தற்கொலை எண்ணத்தைத் தூண்டும் இடங்களைத் தவிர்ப்பது நல்லது. உயரமான இடங்கள் (செல்போன் டவர், லைட் ஹவுஸ்...) பாதுகாப்பற்ற இடங்களில் அதை நெருங்க முடியாதபடி தடைகளை (Barricade) ஏற்படுத்தலாம். அதற்கு அரசு ஆவன செய்யலாம்.
* நம் நாட்டில் துப்பாக்கிக்கு கட்டுப்பாடு இருக்கிறது. அதனால், துப்பாக்கியால் செய்துகொள்ளும் மரணங்கள் குறைவு. ஆனால், பூச்சிகொல்லிகளுக்கு தடை இல்லை. பெரும்பாலானவர்கள் பூச்சிகொல்லிகளைத்தான் தங்களைக் கொல்லும் ஆயுதமாகக் கையில் எடுக்கிறார்கள். இலங்கையில்கூட இதற்கு கட்டுப்பாடு வந்துவிட்டது. 
* அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே, பெற்றோரே குழந்தைகளை எதையும் எதிர்கொள்ளத் தயார்ப்படுத்த வேண்டும். பரீட்சை வாழ்க்கையில் ஒருமுறை மட்டும் நடப்பதல்ல. ஒரு மாதம் கழித்து இன்னொரு பரீட்சை எழுதிக்கூட தேர்ச்சி பெற்றுவிடலாம் என தைரியம் கொடுக்கலாம். இது ஒரு தற்காலிகத் தோல்வி; இதற்காக நிரந்தரமாக ஒரு முடிவைத் தேடிக்கொள்ளக் கூடாது என்ற விஷயத்தை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதை ஊடகங்களிலும் பரவலாகச் சொல்ல வேண்டும். 
* பள்ளிகளில் ஸ்டூடன்ட் கவுன்சலர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒரு மாணவனுக்கோ, மாணவிக்கோ பிரச்னை வரும்போது அவர்களுக்கு உரிய ஆலோசனை தர வேண்டும். 
* எப்போதாவது பொருளாதார மந்தநிலை வரும்போதும் தற்கொலைகள் அதிகரிக்கும். அந்த நேரத்தில் அரசும் மக்களுக்கு உதவ வேண்டும்.    

தற்கொலை எண்ணம் வந்தவர்கள் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். `My way or no way' என்று. இதை `Tunnel vision' என்று சொல்வார்கள். குதிரைக்கு நேர்த்திசையில் பார்ப்பதற்காக கண்ணாடி மாதிரி ஒன்றைப் போடுவார்கள். குதிரையால், தான் போகும் நேர்ப் பாதையைத் தவிர வேறு பாதையைப் பார்க்க முடியாது. `இது எனக்குப் பெரிய அவமானம்... வேற வழியில்லை. நான் செத்துட்டா எல்லாம் சரியாகப் போயிடும்’ என நினைத்துக்கொள்வது தவறு. எவ்வளவோ பேர் எத்தனையோ அவமானங்களைத் தாங்கிக்கொண்டு வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறார்கள். இந்த ஊரைவிட்டு, இன்னோர் ஊருக்குப் போய்க்கூட நாம் சம்பாதித்துக்கொள்ளலாம் என்கிற எண்ணம் வர வேண்டும். இப்படி பல வழிகள் இருப்பதை, அவர்கள் தங்களுக்குத் தாங்களே அடைத்துக்கொள்கிறார்கள். உளவியல் முறையில் இவர்களுக்கு இந்த எண்ணம் இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டால், அவர்களைச் சரிப்படுத்திவிடலாம். தீராத நோய்க்கு ஆட்பட்டவர்களைக்கூட கவுன்சலிங்குக்கு அனுப்புவார்கள். மன நோய், மனரீதியான பிரச்னைகள் வரும்போது மனநல நிபுணர்களிடமும், கவுன்சலர்களிடமும் ஆலோசனை பெறலாம். எப்படி இருந்தாலும், தற்கொலை எந்த விஷயத்துக்கும் தீர்வல்ல. இதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். அந்த எண்ணம் தோன்றுபவர்களைக் கண்டுபிடித்தால், அவர்களுக்கு மருத்துவரீதியாக, உளவியல் ரீதியாக அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்’’ என்கிறார் மனநல மருத்துவர் சீனிவாச கோபாலன்.