Election bannerElection banner
Published:Updated:

நலம் நலம் அறிய ஆவல்!

நலம் நலம் அறிய ஆவல்!

நலம் நலம் அறிய ஆவல்!

வலியிலிருந்து விடுதலை!

##~##

'தினமும் அரக்கப்பரக்க அலுவலகம் ஓடி, வேலைகளை விரைவாக முடித்து, 'அக்கடா’ என்று வீட்டுக்குள் நுழைவதற்குள், கூடவே தலைவலியும் வந்து தலையில் பாரமாக இறங்கிவிடும். வேலையில் ஏற்படும் டென்ஷன் காரணமாக வருகிறது இந்தத் தலைவலி. மேலும்... சைனஸ், பார்வைக் குறைபாடு, பல் வலி, மூளையில் கட்டி, தலையில் நீர்கோத்தல் என தலைவலி ஏற்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. மூளை மற்றும் மூளையைச் சுற்றியுள்ள சவ்வுப் பகுதி வெறும் 30 சதவிகிதம்தான் தலைவலி ஏற்படுவதற்குக் காரணம். சைனஸ் போன்ற காரணங்களால்தான் 70 சதவிகிதத் தலைவலி ஏற்படுகிறது' என்கிறார் மூளை நரம்பியல் மருத்துவர் வி.சவுண்டப்பன்.

'தலைவலி எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறியாமல், தாமாக மாத்திரை வாங்கிச் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. எப்போதாவது வலி வந்தால் பிரச்னை இல்லை. ஆனால், தொடர் தலைவலிக்கு வெறும் தைலம், மாத்திரை வாங்கிப்போடுவது ஆபத்தை ஏற்படுத்திவிடும். தீராத தலைவலியுடன் குமட்டல், வாந்தி, கண் பார்வை மங்குதல், காய்ச்சல், கழுத்துத் தசை இறுக்கம், சோர்வு, தடுமாற்றம், பேச்சில் நடுக்கம், நினைவாற்றல் மந்தம் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எதனால் வலி ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதை மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்தலாம்'  என்கிறார் டாக்டர்.

'நம் உடலில் அதிகம் அசையக்கூடிய எலும்பு, கழுத்து எலும்பு. தலையைத் தூக்க, இறக்க, பக்கவாட்டில் திருப்ப என எல்லாப் பக்கங்களிலும் அசையும். இங்குள்ள ஏழு எலும்புகளில் இந்த நகர்வுகள் நடக்கின்றன. இதனால் அதிகத் தேய்மானம் ஏற்படும் இடமாகவும் இந்தப் பகுதி இருக்கிறது. கழுத்து எலும்புகளுக்கு இடையே சவ்வு தேய்மானம் அடையும்போது நரம்பு அழுத்தும். அப்போது, கழுத்தில் இருந்து பின் மண்டை, கை வரை வலி இருக்கும். மோட்டார் சைக்கிளில் நீண்ட நேரம் பயணிப்பது, வண்டியின் ஷாக் அப்ஸார்பரை சரியாகப் பராமரிக்காதது, மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்திருப்பது, லேப்டாப்பை மடியிலேயே வைத்து அல்லது தரையில் படுத்தபடியே வேலைசெய்வது என்று கழுத்துக்கு அதிக வேலை கொடுப்பதால், கழுத்து எலும்புத் தேய்மானம் ஏற்படுகிறது' என்கிற டாக்டர், 'அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஐந்து நிமிடங்களுக்கு ஓய்வு எடுங்கள். கம்ப்யூட்டர் திரையை சரியான பொசிஷனில் வையுங்கள். வாகனத்தை முறையாகப் பராமரியுங்கள். இந்த எளிய நடைமுறைகள் மூலம், கழுத்து எலும்புத் தேய்மானம் தவிர்க்கப்படும்' என்று நம்பிக்கை வார்க்கிறார்.

- பா.பிரவீன் குமார்

படம்: ஆ.முத்துக்குமார்

நலம் நலம் அறிய ஆவல்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு