Published:Updated:

ஆரோக்கிய உடலுக்கு அடிப்படைச் சத்துகள்!

ஆரோக்கிய உடலுக்கு அடிப்படைச் சத்துகள்!

ஆரோக்கிய உடலுக்கு அடிப்படைச் சத்துகள்!
##~##

டலின் வளர்ச்சியிலும், வளர்சிதை மாற்றங்களிலும் முக்கியப் பங்கு வகிக்கும் புரதம், கொழுப்பு, வைட்டமின் போன்ற ஊட்டச் சத்துக்களை, நாம் உண்ணும் உணவின் மூலமே பெற முடியும். ஆனால், சரியான உணவுப்பழக்கமின்மைதான் பிரச்னை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த ஊட்டச் சத்துக் குறைபாட்டைப் போக்க, வைட்டமின், தாது உப்பு, சத்து மாத்திரைகள், புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்கிறோம். ஆனால், உண்மையில் நமக்கு எந்தச் சத்து குறைவாக இருக்கிறது, அதற்கு என்ன தேவை என்பது பற்றிய விழிப்பு உணர்வு இல்லை. உடல் உழைப்பு, ஆரோக்கியத்துக்கு ஏற்ப எதைத் தேர்ந்தெடுப்பது, எவ்வளவு சாப்பிடலாம் என்பது பற்றி உணவு மற்றும் ஊட்டச் சத்து நிபுணர்கள் ரேவதி மற்றும் ஷைனி சந்திரன் விரிவாக விளக்குகின்றனர்.

ஆரோக்கிய உடலுக்கு அடிப்படைச் சத்துகள்!

வைட்டமின்டி:

சூரியனில் இருந்து கிடைக்கும் வைட்டமின் இது. வெப்பமண்டல நாடாக இந்தியா இருந்தாலும், இங்குதான் வைட்டமின் டி குறைபாடும் அதிகம். ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் சூரிய ஒளி, உடலில் பட்டாலே போதும், வைட்டமின் டி-யை சருமம் உற்பத்திசெய்துவிடும். கொழுப்பில் கரையக்கூடியது. எலும்பு மற்றும் பற்கள் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவற்றைக் கிரகிக்க இந்த வைட்டமின் மிகவும் அவசியம். ஆஸ்டியோபெரோசிஸ், ரிக்கட்ஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள், பற்சிதைவு, முடிகொட்டுதல் போன்ற பிரச்னைகள் இந்த வைட்டமின் சத்துக் குறைவினால் ஏற்படுகிறது.

ஒரு நாளைய தேவை: ஐந்து மைக்ரோகிராம் அளவே உடலுக்குத் தேவை. இந்த வைட்டமின் குறைபாடு இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனை பெற்று ஒரு நாளைக்கு 3,000 ஐ.யு. என்ற அளவுக்கு மாத்திரை வடிவில் எடுத்துக்கொள்ளலாம். கொழுப்பில் கரையக்கூடியது என்பதால், சாப்பிட்டவுடன் இதைச் சாப்பிட வேண்டும்.  

ஆரோக்கிய உடலுக்கு அடிப்படைச் சத்துகள்!
ஆரோக்கிய உடலுக்கு அடிப்படைச் சத்துகள்!

மீன் எண்ணெய்

ஒமேகா என்ற நல்ல கொழுப்பு இதில் உள்ளது. உடம்பில் கெட்ட கொழுப்பு சேர்வதைத் தடுத்து, இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் மன அழுத்தம், புற்றுநோய், கண் தொடர்பான நோய்கள், மூட்டு நோய்கள், தோல் வறட்சி போன்றவற்றைத் தடுக்கிறது. குறைந்த எடையில் குழந்தை பிறத்தல், குறைப்பிரசவம் போன்ற பிரச்னைகளில் இருந்தும் காக்கிறது. மூளை வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. எண்ணெய் வடிவிலும், மாத்திரைகளாகவும் இது கிடைக்கிறது.

ஒரு நாளைய தேவை: நாள் ஒன்றுக்கு ஒன்று முதல் நான்கு கிராம் எடுத்துக்கொள்ளலாம். அவரவர் உடல் அமைப்புக்கு ஏற்ப இது மாறுபடலாம்.

ஆரோக்கிய உடலுக்கு அடிப்படைச் சத்துகள்!
ஆரோக்கிய உடலுக்கு அடிப்படைச் சத்துகள்!

மக்னீசியம்

தூக்கத்துக்கு மிக முக்கியமான தேவை, இந்தத் தாது உப்பு. இதயம், சிறுநீரகம் என நம் உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும், செல் வளர்ச்சிக்கும் மிகமிக அவசியம். இதயம் சீராக இயங்க வழிவகைசெய்கிறது. ரத்தச் சிவப்பணுக்களை அதிகம் உற்பத்திசெய்ய உதவும். இந்தச் சத்து குறையும்போது தூக்கமின்மை, மனப் பதற்றம் போன்ற பாதிப்புகள் வருகின்றன.

ஒரு நாளைய தேவை: 350 மி.கி. கட்டாயம் தேவை. தானியங்கள், பருப்பு வகைகளில் இது அதிகம் உள்ளது. மேலும் நட்ஸ், கீரை, பச்சைக் காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம். மக்னீசியம் சத்து மாத்திரையை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு வரும். சாப்பிட்ட பிறகே இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆரோக்கிய உடலுக்கு அடிப்படைச் சத்துகள்!

துத்தநாகம்

நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். இரும்புச் சத்துக்கு அடுத்து உடம்புக்கு அதிகச் சத்துக்களைக் கொடுக்கிறது. செல்களின் உற்பத்திக்கும், ஆரோக்கிய வாழ்வுக்கும் அவசியம். ஒரு பொருளின் வாசனையை நுகர்வதற்கும், உணவுகளின் சுவைகளை அறியவும் இந்த தாது உப்பு அவசியம். மேலும் சமீபத்திய ஆய்வு ஒன்றில், ஜலதோஷம் ஏற்பட்டால் 'ஜிங்க்’ அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக்கொண்ட 24 மணி நேரத்துக்குள் சரியாகிவிடுவதாகக் கண்டறிந்து உள்ளனர்.

ஆரோக்கிய உடலுக்கு அடிப்படைச் சத்துகள்!

ஒரு நாளைய தேவை: 40 மி.கி. வரை தேவைப்படுகிறது. இந்தச் சத்தை நம் உடலால் சேமித்துவைக்க முடியாது. எனவே, குறிப்பிட்ட அளவு இந்தத் தாது உப்பு கட்டாயம் கிடைத்தாக வேண்டும். சத்து மாத்திரை தவிர்த்து இறைச்சி, கடல் உணவுகள், பால், முட்டை, ஈரல், தானியங்களில் இது கிடைக்கிறது. காபி குடிப்பதற்கு முன்பும், குடித்த பிறகும் இந்த சத்து மாத்திரையை எடுத்துக்கொள்ளக் கூடாது. இது உடலில் துத்தநாகம் கிரகிப்பதைத் தடுத்துவிடும்.

ஆரோக்கிய உடலுக்கு அடிப்படைச் சத்துகள்!

கால்சியம்

குழந்தைகளுக்கு எலும்பு, பற்கள் ஆரோக்கியமாக உருவாகவும், தசைகள் மற்றும் இதயம் தன்னுடைய வழக்கமான செயல்பாட்டை மேற்கொள்ளவும் கால்சியம் அவசியம். இந்தச் சத்து குறையும்போது, எலும்புகள் தேய்மானம் அடைந்து வலுவிழந்துபோகும்.

ஒரு நாளைய தேவை: 1000 முதல் 1200 மி.கி. தேவை. கீரை, பால் பொருட்களில் அதிகம் இருக்கிறது. பெண்களுக்கு கால்சியம் குறைபாடு அதிக அளவில் இருக்கும். எனவே, டாக்டரிடம் பரிசோதனை செய்து பரிந்துரையின்பேரில் கால்சியத்தை மாத்திரைகளாக எடுத்துக்கொள்ளலாம். எந்த ஓர் ஊட்டச்சத்தையும் நாமாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது அல்ல.

இந்த வைட்டமின் அளவுகள் அனைத்தும் ஒரு சராசரி மனிதனுக்குத் தேவைப்படுவதுதான். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் என அவரவர் உடல்நிலையைப் பொருத்து இது மாறுபடும். டாக்டர்களின் ஆலோசனைபெற்று எடுத்துக்கொள்வதே நல்லது.

- ஹெச்.ராசிக் ராஜா

படங்கள்: எஸ்.பி.ஜெர்ரி ரினால்டு விமல்