Published:Updated:

தொல்லை தரும் தொடர் விக்கல்

தொல்லை தரும் தொடர் விக்கல்

தொல்லை தரும் தொடர் விக்கல்

சிவசங்கரன், கோவை.

''எனக்கு வயது 20. நான் கடின உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்கிறேன். வீட்டில் உடற்பயிற்சி செய்தால், ஊட்டச் சத்துக் குறைபாடு ஏற்படும்; ஜிம்முக்குச் சென்றால்தான், புரோட்டீன் பவுடர் பரிந்துரைப்பார்கள் என்கிறான் என் நண்பன். ஊட்டச் சத்துக் குறைபாட்டைத் தவிர்க்க வழி உண்டா?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காயத்திரி பத்மநாபன், உணவு ஊட்டச் சத்து நிபுணர், திருச்சி.

##~##

'வீட்டிலேயே அதிகப்படியான உடற்பயிற்சி செய்வதால், கண்டிப்பாக ஊட்டச் சத்துக் குறைபாடு ஏற்படும். இதைத் தவிர்க்க கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு மற்றும் நார்ச் சத்து, வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்த உணவை சரிவிகிதத்தில் சேர்ப்பது அவசியம். முட்டை, பால், பயறுவகைகள், மூக்கடலை, பட்டாணி, சோயா பீன்ஸ், அனைத்துப் பருப்பு வகைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் புரதச்சத்து, உங்கள் தசை வளர்ச்சிக்கும், உடல் வலுப்பெறுவதற்கும் உதவும். அசைவ உணவு சாப்பிடுபவராக இருந்தால், கோழி, மீன். இவை இரண்டையும் குழம்பாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். கோழி தோல் நீக்கியதாக இருத்தல் அவசியம்.

கடின உடற்பயிற்சியில், அதிக கலோரி செலவிடப்படுவதால், விரைவில் சோர்வு, களைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்க நாள் ஒன்றுக்கு மூன்று லிட்டர் நீர், ஆரஞ்சு, தர்ப்பூசணி, வெள்ளரி, தக்காளி, பூசணி, சுரைக்காய் போன்ற நீர்ச் சத்துள்ள உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்கிறீர்கள், உங்களுக்கு எவ்வளவு புரதம் உள்ளிட்ட சத்துக்கள் தேவை என்பதைக் கண்டறிய, உணவு மற்றும் ஊட்டச் சத்து நிபுணரைக் கலந்து ஆலோசனை பெறுவது நல்லது.'

ஆதிராஜன், செங்கல்பட்டு.

'எனக்குத் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேலாக விக்கல் இருந்தது. 'அதிர்ச்சி வைத்தியம் தந்தால், உடனே சரியாகிவிடும். தண்ணியைக் குடிச்சா சரியாகும்’ என்று ஆளாளுக்கு அட்வைஸ் செய்தார்கள். ஆனால், விக்கல் விடவில்லை. மாத்திரை வாங்கிச் சாப்பிட்டு, இப்போது ஓரளவு பரவாயில்லை. இப்படித் தொடர்ந்த விக்கல் ஏன் வருகிறது? அதை நிறுத்த வழி உள்ளதா?'

டாக்டர் கு.கணேசன், பொதுநல மருத்துவர், ராஜபாளையம்.

'விக்கல் எடுத்தால் கொஞ்சம் தண்ணீர் குடித்தால், சட்டென நின்றுவிடும். தண்ணீர் குடிக்காமலேயே இருப்பது, அரக்கப்பரக்க உணவை அள்ளிப் போட்டுக்கொள்வது, சூடாகச் சாப்பிடுவது, மிக அதிகமாக உணவை உண்பது போன்ற காரணங்களால் விக்கல் ஏற்படுகிறது. மேலும், கொழுப்பு சார்ந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது, புரதச் சத்து உணவுகளைச் சாப்பிடாமலே இருப்பது, பயம், மனரீதியான பிரச்னைகளாலும் விக்கல் வரலாம். விக்கலினால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் மூன்று, நான்கு நாட்கள் தொடர்ந்து விக்கல் இருந்தால், சிறுநீரகம், கல்லீரல் கோளாறு, மாரடைப்பு, நரம்பு வாதம், நுரையீரல் பிரச்னை, சர்க்கரை நோய் போன்ற பல நோய்களுக்கு வழிவகுத்துவிடும். இதற்கு, பிராணாயாமப் பயிற்சி சிறந்த பலனைத் தரும்.  

• ஒரு காகிதக் கவரை வைத்து ஊதி, திரும்பவும் அந்தக் காற்றை சுவாசிக்க வேண்டும். இதுபோல் இருபது முறை செய்ய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் கரிமிலவாயு அளவு அதிகரித்து, பிராணவாயுவின் அளவு குறையும். இதனால் விக்கல் நிற்கும்.

• உட்கார்ந்த நிலையில் மூச்சை உள்ளிழுத்து வெளியேவிட வேண்டும்.

• 20 எண்ணும் வரை மூச்சை நன்றாக அடக்கிக்கொள்ள வேண்டும். இப்படி ஐந்து முறை செய்ய வேண்டும்.

• தும்மலைக்கூட வரவழைத்துக்கொள்ளலாம்.'

பெயர் வெளியிட விரும்பாத வாசகர், திருநெல்வேலி.

'நான் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவன். நன்றாகப் படிப்பேன். சமீபத்தில் எனது தந்தை இறந்துவிட்டார். இதனால் கடந்த செமஸ்டர் தேர்வில் மதிப்பெண்ணும் குறைந்துள்ளது. எதிலும் ஆர்வம் இல்லை. எனக்கு என்ன பிரச்னை, இதைச் சரிசெய்ய முடியுமா?'

டாக்டர் கே.தியாகராஜன். மனநல மருத்துவர், தஞ்சாவூர்.

தொல்லை தரும் தொடர் விக்கல்

'நெருக்கமான உறவினர் இறந்து ஆறு மாத காலத்துக்கு சிலருக்கு இதுபோன்ற பிரச்னைகள் வரலாம். இது இயல்புதான். இருப்பினும் இறப்பு என்பது எவராலும் தடுக்க முடியாது என்பதைப் புரியவைத்து, இயல்புநிலைக்குக் கொண்டுவர வேண்டும். இந்தப் பிரச்னை ஆறு மாத காலத்துக்கு மேல் நீடித்தாலோ, படிப்பு, வேலை போன்ற விஷயங்கள் பாதிக்கும் அளவுக்குச் சென்றாலோ, அதை நோய்த் தன்மைக்கான பிரிவுத் துயரம் (Pathological grief) அல்லது ரியாக்டிவ் டிப்ரஷன் (Reactive depression) என்போம். இவர்களுக்கு கவுன்சலிங் மட்டுமல்லாது, மனத்துயர் நீக்கும் உற்சாக மாத்திரைகளும் (Antidepressants) அளித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

உங்கள் தந்தை இறந்து எவ்வளவு காலம் ஆகிறது? உங்களுக்கு உள்ள கவனச் சிதறல் பிரச்னை, உங்கள் தந்தை இறப்புக்கு முன்பே சிறிய அளவில் இருந்து பிறகு அதிகரித்ததா? என்ற விவரங்கள் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். எந்தப் பிரச்னையையும் சரிசெய்துவிடலாம். உடனே, உங்கள் அருகில் உள்ள மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது. உங்கள் கவனக் குறைவுப் பிரச்னையும் சரிப்படுத்தப்படும்.'

படங்கள்: கே.குணசீலன், ஜெ.வேங்கடராஜ்,

தே.தீட்ஷித், மாடல்: முகேஷ்