Published:Updated:

இதுவும் கடந்து போகும்!

மெனோபாஸ் முக்கியமான 3 கட்டங்கள்!

##~##

பெண்கள் கடக்கும் முக்கியமான காலகட்டங்களில், மிகவும் அக்கறையோடும் பரிவோடும் கவனிக்கப்பட வேண்டிய கடினமான காலகட்டம், 'மெனோபாஸ்’ எனப்படும் மாதவிலக்கு நிற்கும் பருவம்தான். 'மெனோபாஸ்’ சமயத்தில், பெண்களின் வயது, தனிமை, முதுமையின் ஆரம்பகட்டம் என எல்லாமே சேர்வதால், அதிகமாக ஆதரவும் அரவணைப்பும்  தேவைப்படும்.  

40 வயதைக் கடந்த பெண்களுக்கு 'மெனோபாஸ்’ குறித்த பயம் இருக்கத்தான் செய்யும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'இது ஒன்றும் கவலைப்பட வேண்டிய விஷயம் இல்லை. இயற்கையின் மாறுதல்களை எதிர்கொள்ளும் மனப்போக்குடன், மனதளவில் தயாராக இருந்தால், மாதவிலக்கு நிற்கும் காலகட்டத்தையும், ரிலாக்ஸ்டாக எதிர்கொள்ளலாம்'' என்கிறார், சென்னை எழும்பூர் தாய் சேய் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநரும் மகளிர் - மகப்பேறு மருத்துவருமான வி.மாதினி.

இதுவும் கடந்து போகும்!

'பெண் பூப்பெய்துதலை 'மெனார்க்’ (menarche) என்போம். அதற்கு அப்படியே நேர்எதிர் விஷயம்தான் 'மெனோபாஸ்’. இந்தியப் பெண்களுக்கு 45 முதல் 50 வயதுக்குள் மாதவிலக்கு நின்றுவிடுகிறது. ஒரு சிலருக்கு மட்டும் விதிவிலக்காக, அவர்களின் மரபுவழியாக, அம்மா, பாட்டிக்கு நின்றதைப் போல இன்னும் சில ஆண்டுகள் முன்பாகவோ அல்லது பின்பாகவோ நிற்கும்.  

வயதுக்கு வருவதற்கு முன் பெண்ணுக்கு, உடல் வளர்ச்சி, ஹார்மோன் சுரப்புகள், முகப்பொலிவு, எண்ணங்களில் மாற்றம் எனப் பலவித உள் - வெளி மாற்றங்கள் நிகழும். அதேபோல்தான் மாதவிலக்கு நிற்பதற்கு முன்னும் உடல் தளர்ச்சி, ஹார்மோன் சுரப்பது குறைவு, மனச்சோர்வு, முகவாட்டம் என அறிகுறிகள் தோன்றுகின்றன. மாதவிலக்கு நிற்கும் சமயத்தில், மூன்று கட்டங்களில் பெண்கள் பயணிக்கவேண்டியுள்ளது. 'மெனோபாஸ்’க்கு முன்பு உள்ள காலம் 'பெரி மெனோபாஸ்’ என்றும், மாதவிடாய் நிற்கும் காலத்தை 'மெனோபாஸ்’ என்றும், மாதவிடாய் நின்ற பிறகு 'போஸ்ட் மெனோபாஸ்’ என்றும் மருத்துவ உலகில் கூறுகிறோம்.  

1 பெரி மெனோபாஸ்

மாதவிடாய் நிற்பதற்கு நான்கு முதல் எட்டு வருடங்களுக்கு முன்பிருந்தே ஆரம்பித்துவிடுவதுதான் 'பெரிமொனோபாஸ்’. இவர்களுக்கு மாதவிடாய் முன் பின்னாக வரும். உதிரப்போக்கும் சீராக இருக்காது. அதற்காக பயப்படவேண்டாம். ஆனால், 15, 20 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வந்தால் அல்லது அளவுக்கு அதிகமான உதிரப்போக்கு இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.  இந்தச் சமயத்தில், உடலில் சில மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும்.

'மாதவிலக்கு படிப்படியாக நிற்க ஆரம்பிப்பதன் அறிகுறி இது’ என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இதுவும் கடந்து போகும்!

என்ன செய்யலாம்?

• உடற்பயிற்சிகள், யோகாசனப் பயிற்சிகள், தியானம் மேற்கொள்வது நல்லது. இந்த சமயத்தில் உடல் எடை அதிகரிக்கக் கூடாது.  இதனால், முட்டி வலி வரலாம்.

• காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

• நெஞ்செரிச்சல், அஜீரணம், வயிற்றுப் பொருமல் போன்ற பிரச்னைகள் அடிக்கடி இருந்து, அவை கைவைத்தியத்தில் சரியாகவில்லை என்றால், மருத்துவரை சந்திக்க வேண்டும். ஏனெனில், அது வேறு சில பிரச்னைகளின் அறிகுறியாக இருக்கலாம்.

2 மெனோபாஸ்

கடைசி மாதவிடாய் வந்து ஒரு வருடம் ஆகிவிட்டால், அவர்களுக்கு 'மாதவிலக்கு நின்றுவிட்டது’ என்று அர்த்தம். இந்தச் சமயத்தில், 'ஹாட்ஃப்ளஷ்’ (hot flashes) எனப்படும், உடல் முழுவதும் உஷ்ணம் பரவும் நிலை ஏற்படும். உடைகள் நனைவதுபோல வியர்த்துக் கொட்டும். இரவில் தூக்கத்தில்கூட இது ஏற்படலாம். உடம்பே நனைந்துவிட்ட உணர்வில், தூக்கம் கலைந்து எழுந்துவிடுவார்கள். இது படிப்படியாக 2, 3 வருடங்களில் குறையும்.

இதுவும் கடந்து போகும்!

அதிக வியர்வை, படபடப்பு, கால்வலி போன்ற பிரச்னைகள் ஏற்படுவதுடன் மனதிலும் மாற்றங்கள் உண்டாகும். மனச்சோர்வு, அதிகக் கவலை, எதைப் பார்த்தாலும் எரிச்சல் என அவர்களின் மனநிலையே மாறிவிடும். தனிமையில் இருக்கும்போது, 'என்னால் யாருக்கு என்ன பிரயோஜனம்?’ என்ற கழிவிரக்கமும் வாட்ட ஆரம்பித்துவிடும்.

சிலருக்கு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அவசரமாக சிறுநீர் கழித்தல் போன்ற அந்தரங்கப் பிரச்னைகளால் மன உளைச்சல் அதிகமாகும். சிலருக்கு ஞாபகமறதி எட்டிப்பார்க்கும். கவனக்குறைவு ஏற்படும். அதோடு, உடல் அசதி, தூக்கமின்மை போன்ற பிரச்னைகளும் வரலாம். தூக்கம் தொலைவதாலேயே, மறுநாள் உற்சாகமாக வேலை செய்ய முடியாமல் போவதோடு, எல்லோர் மேலும் எரிச்சல் அதிகரிக்கும். குடும்பத்தினர் புரிந்துகொண்டு அனுசரிக்க வேண்டும்.

என்ன செய்யலாம்?

• உடல் உழைப்பு மிகவும் அவசியம். வீட்டுவேலைகள், அலுவலக வேலைகள் இருப்பவர்களுக்கு பிரச்னை இல்லை. இரண்டும் இல்லாதவர்கள், ஏதேனும் ஒரு தன்னார்வப் பணியில் ஈடுபடுதல், குழந்தைகளுக்குச் சொல்லித்தருதல், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளுதல், யோகப்பயிற்சி, தியானம் என்று நேரத்தை உபயோகமாக செலவிடலாம்.

• நடுத்தர வயதில், வீடு, வசதி, வாகனம் என எல்லாமே கிடைத்திருக்கும் மனநிறைவில் கணவர், மனைவியிடம் தாம்பத்திய உறவை எதிர்பார்ப்பது இயற்கை. ஆனால், 'மெனோபாஸ்’ ஆன நிலையில், மனைவிக்கு உறவில் ஆர்வம் குறைந்திருக்கும். உறவில் வலி ஏற்பட்டால் மகளிர் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்கலாம்.

• ஈஸ்ட்ரோஜென் சுரப்பு வெகுவாகக் குறையும் என்பதால், சோயா உணவுகள் சேர்க்கலாம்.

3 போஸ்ட் மெனோபாஸ்

மாதவிலக்கு நின்ற பிறகான இந்தக் காலகட்டம்தான், பெண்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய பருவம். மெனோபாஸ் ஆன சில வருடங்கள் கழித்து, தோலுக்கு வேண்டிய கொலாஜன் குறைவதால், தோல் சுருக்கம் வரும். சீக்கிரம் காயம் படும். அடியிறக்கம், இருமும்போது, தும்மும்போது சிறுநீர்க்கசிவு போன்றவை ஏற்படும். ஈஸ்ட்ரோஜென் குறைவதால், எலும்புகள் தேய ஆரம்பிக்கும். ஆஸ்டியோபெரோசிஸ் போன்ற நோய்கள் தலைதூக்கும். சிலருக்கு 'டிமென்ஷியா’ பாதிப்பும் வரலாம்.

சுலபமாக எலும்புமுறிவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒரு சிலருக்கு முதுகுத்தண்டு வளைவதால், முதுகுவலியும் வரலாம். இந்தச் சமயத்தில் வெள்ளைப்படுதலோ, உதிரம் படுதலோ இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்த்துவிடவேண்டும்.

என்ன செய்யலாம்?

• பெண்களின் சராசரி ஆயுட்காலம் தற்போது அதிகரித்திருப்பதால், 45 வயதுக்குப் பிறகு, வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதி முதுமையில் கழிப்பதுபோல ஆகிவிடுகிறது. இந்தத் தருணத்தில்தான், மனத் தெளிவும் தன்னம்பிக்கையும் அதிகம் இருக்கவேண்டும்.

• மூளைக்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டும். அதற்கு, ஸ்லோகங்கள் படிப்பது, ஏதாவது பாடல்களை மனப்பாடம் செய்வது, குறுக்கெழுத்துப் புதிர்களை விடுவிப்பது போன்ற பயிற்சிகள் பலன் தரும். மறதி நோய் வராமல் தடுக்கலாம்.

• வைட்டமின் டி 3 மற்றும் கால்சியம் சத்து மிகவும் தேவை. பால், தயிர், கீரை போன்ற உணவுகளாகவும் மாத்திரைகளாகவும் எடுத்துக்கொள்ளவேண்டும். வாரத்துக்கு 3 முறை, மதிய நேரத்தில் (12 - 3 மணி) சூரிய ஒளி படுவது போல இருக்கவேண்டும். இரு கைகளிலும் ஏதாவது சுமை தூக்கி நடப்பது, முதுகெலும்பை வளையாமல் நேராக வைத்திருக்கும்.  

எல்லாவற்றுக்கும் மேலாக, 'இது நமது உடலுக்கு இயற்கையாக நேரும் நிகழ்வு.. இதுவும் கடந்து போகும்’ என்ற 'ஏற்றுக்கொள்ளும்’ மனப்பான்மை மட்டுமே எல்லாப் பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் அசாத்திய வலிமையைத் தரும்.

- பிரேமா நாராயணன்,

படங்கள்: ர.சதானந்த்

மாடல்: கலைச்செல்வி