பிரீமியம் ஸ்டோரி
விகடன் பிரசுரம்
##~##

'நம் பாரம்பரிய உணவுப் பொருட்களுக்கே உரிய பிரத்யேகச் சுவைதான், அவற்றுக்கான மருத்துவக் குணம்’ என்கிறது சித்த, ஆயுர்வேத மருத்துவம். ஆனால், இப்போது மாறிவரும் உணவுமுறை நாவின் சுவைக்காக மட்டுமே தவிர, அதில் எந்த மருத்துவக் குணமும் இல்லை. இயற்கை தரும் காய்கனிகளையும், சிறுதானியங்களையும் நாம் பயன்படுத்தினால், நோயற்ற வாழ்வு வாழலாம் என்கிறார் மருத்துவர் கு.சிவராமன்.

'பையில் கொஞ்சம் சிவப்பரிசி அவலும், சிறு துண்டு பனை வெல்லமும் எடுத்துச் சென்றால், மாலைப் பசிக்கு உடனடி அவல் இனிப்பு ரெடி. ஊறவைத்த அவலும் வெல்லமும் உடலுக்கு உறுதியும்கூட!’ என்கிற மருத்துவர், மனித இனம் நோய் இல்லாமல் வாழ அர்த்தமுள்ள யோசனைகளை இந்த நூலில் விவரிக்கிறார்.

எந்தக் காய்களை எப்படிப் பயன்படுத்துவது... குதிரைவாலி, சாமை, தினை, வரகு போன்ற சிறு தானியங்களால் ஏற்படும் பயன்கள் என்ன... அவை மனிதனுக்குத் தரும் சத்து எத்தகையது என்பன போன்ற அத்தனை அம்சங்களும் அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம். ஆனந்த விகடனில் வந்த தொடர் இப்போது நூல் வடிவில்.

'ஆறாம் திணை’... 'ஆரோக்கியத் துணை’!

விகடன் பிரசுரம்

எப்படி வாழ்ந்தால் நோயற்ற வாழ்க்கை வாழ முடியும் என்பதைச் சொல்லித்தருகிறது ஆயுர்வேதம். கருவில் தோன்றியது முதல் கடைசி மணித்துளி வரை பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்ற ரகசியத்தை உணர்த்தும் விதத்தில் எழுதப்பட்ட அரிய நூல் ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்.  

குழந்தைப் பருவம், வளர் இளம் பருவம், தாய்மை, முதுமை என அந்தந்தப் பருவத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளமாக இருந்தாலும் அவற்றைத் தவிர்க்கும் வழிகள், எளிய வீட்டு வைத்திய சிகிச்சைகள் என மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழிவகுக்கும்விதத்தில் எளிய நடையில் எழுதியிருக்கிறார் ஆசிரியர் கே.ஜி.ரவீந்திரன்.

நிம்மதியான தூக்கத்துக்கு என்ன வழி... எப்படிச் சாப்பிட வேண்டும்... ஒழுங்கற்ற மாதவிடாயைச் சரிசெய்ய வழிகள்... பிரசவத்துக்குப் பிறகு கவனிக்கவேண்டியவை என்ன... இப்படி பக்கத்துக்குப் பக்கம் பயனுள்ள தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. பெண்களுக்கான நூல் என்றாலும் ஆண்களும் அவசியம் படித்து, பெண்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப ஒத்துழைக்கும் விதமாகப் பல்வேறு குறிப்புகள் அணிவகுக்கின்றன. 'ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்’, வரப்பிரசாதம்!

விகடன் பிரசுரம்

'யோகா என்பது மனம் மற்றும் உடல் பயிற்சிக் கலைகளுக்குள் நுழைவதற்கான ஒரு நுழைவு வாயில்’ என்கிறது இந்த நூல். யோகாவின் முக்கியத்துவம், யோகாவை நாம் ஏன் செய்ய வேண்டும், யோகா செய்வதன் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகள், எந்தப் பயிற்சியை எப்படிச் செய்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பன போன்ற பல தகவல்கள் அனுபவப்பூர்வமாக இதில் படங்களோடு விளக்கப்பட்டுள்ளன.

நடப்பது, ஓடுவது, குதிப்பது, தாண்டுவது, குனிவது, நிமிர்வது போன்றவை எல்லாமே நாம் அன்றாடம் செய்யக்கூடிய சாதாரண வேலைகள். ஆனால், இன்றைய தொழில்நுட்பக் காலத்தில் இத்தகைய வேலைகளை இயந்திரத்திடம் வாங்கிக்கொண்டிருக்கிறோம்.

துள்ளித் திரியும் மாணவர்களுக்கும் யோகா என்பது அத்தியாவசியம். மாணவப் பருவத்தின் இயல்பு, வளர்ச்சி, தேவைக்கு ஏற்ப பயிற்சிகளையும், ஒவ்வொரு மாணவ, மாணவியும் உதவியாளரின் துணையின்றி, தாங்களே யோகாவை சரியாக எளிதில் பின்பற்றக்கூடிய அளவுக்குப் பயிற்சி முறைகளை, படங்களுடன் தந்திருக்கிறார்கள்.

13 வயது முதல் 25 வரையுள்ள மாணவ - மாணவியருக்கு ஏற்ற வகையிலும், யோகா வகுப்புகளில் பங்கேற்பவர்களின் அனுபவங்களோடு பகிர்ந்துகொள்ளப்பட்டிருக்கும் இந்த நூல், உடலையும் மனதையும் ஒருங்கே வலுவாக்கும்.

விகடன் பிரசுரம்

உலகில் கண் பார்வை இழந்தவர்களில் ஐந்தில் ஒருவர் இந்தியர். கண்புரை, நீரிழிவு, விபத்து போன்ற பலவிதக் கண் பிரச்னைகளால் பார்வை இழந்தோர் சுமார் இரண்டு கோடிப் பேர்.

கண் பார்வையில் பிரச்னை வராதவரை பார்வையின் முக்கியத்துவத்தை எவரும் உணர்வது இல்லை. கண் பாதிப்புகள் யாருக்கும் எந்த நேரத்திலும் நேரலாம். எந்தெந்த அறிகுறிகள் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும், அதற்கு மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன, அவற்றுக்கான மருத்துவத் தீர்வுகள் என்ன, எப்படிப்பட்ட வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது போன்ற நுμக்கமான அம்சங்களை மிகுந்த அக்கறையுடனும் எளிதில் புரியும்படியும் தங்கள் களஅனுபவத்துடன் எழுதியுள்ளனர்.

கண்ணுக்கு ஏற்படும் பிரச்னைகளில் இருந்து கண்ணைப் பாதுகாப்பது எப்படி என்ற விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டிருக்கும் இந்த நூல், ஒரு பொக்கிஷம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு