Published:Updated:

ஐம்பதிலும் ஆரோக்கியம்!

ஐம்பதிலும் ஆரோக்கியம்!

ஐம்பதிலும் ஆரோக்கியம்!
##~##

ளமையில், உற்சாகத்தை மட்டுமே நினைக்கும் மனம், உடல் நலத்தின் மீது அதிகக் கவலைகொள்வது இல்லை. சதா சர்வ காலமும் வேலை, சம்பாத்தியம் பற்றிய சிந்தனையே நம்மை ஆக்கிரமிக்கிறது. வேலையில் இருந்து ஓய்வு பெறும்போதுதான் நம்மைப் பற்றியும், நம் குடும்பத்தைப் பற்றியும் நினைக்கத் தோன்றுகிறது. ''ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இப்போதிலிருந்தே ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து, சில ஆரோக்கியப் பழக்கங்களைப் பின்பற்றினால், இனிவரும் காலங்களைப் பிரச்னையின்றிக் கடக்கலாம்'' என்கிறார் முதுமை சிறப்பு மருத்துவர் வி.எஸ்.நடராஜன். அவரிடம் முதுமைக்கே உரிய சில சந்தேகங்களை முன்வைத்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''என்ன மாதிரியான பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்?''

''வயதான காலத்தில் வரக்கூடிய தொல்லைகளை, மூன்றுவிதமாகப் பிரிக்கிறோம். முதலாவது, கண் புரை, செவித்திறன் குறைபாடு, மலச்சிக்கல், கை நடுக்கம் போன்றவை. இவை நோய்கள் அல்ல. முதுமையின் விளைவே. இவைகளுக்கு தக்க சிகிச்சை அளிக்க முடியும்.

இரண்டாவது, 40-50 வயதில் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்பட்டு, 60 வயதில் சிக்கல் ஏற்படுத்தக்கூடிய நோய்கள். இவைகளைக் கட்டுப்படுத்த முடியும். மூன்றாவது, 70 வயதுக்குப் பிறகு வரக்கூடிய சிறுநீர்க்கசிவு, டிமென்ஷியா என்னும் மறதி நோய். இவற்றுக்கு இப்போது நல்ல சிகிச்சைகள் வந்துகொண்டு இருக்கின்றன.  

முதுமையை நோய்களின் மேய்ச்சல் காடு என்பர். எனவே, இந்த வயதில் நோய் இருக்கிறதோ இல்லையோ, ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதில், ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அளவு, செரிமான மண்டலத்தை ஆய்வு செய்ய அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட பரிசோதனைகள் அடங்கும். வருடத்துக்கு ஒரு முறை கண் நல மருத்துவரைச் சந்தித்துப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். 75 வயதைக் கடந்தவர்கள், ஆறு மாதத்துக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பரிசோதனை செய்துகொள்வதற்கு முன்பு, உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது முதுமைக்கான சிறப்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.''

ஐம்பதிலும் ஆரோக்கியம்!

''நோய்களின் பிடியில் இருந்து தப்ப வழி உண்டா?''

ஐம்பதிலும் ஆரோக்கியம்!

''தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதன் மூலம், தொற்றுநோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். ஃப்ளூ, டெட்டனஸ் உள்ளிட்ட சில நோய்களுக்கு, தடுப்பூசிகளும் நிமோனியா தடுப்பூசியும் பரிந்துரைக்கப்படும். ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிடுவது மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைக்கும். இதைப் பற்றி டாக்டரிடம் கேட்கலாம்.

ப்ராஸ்டேட் புற்றுநோய் ஆண்களுக்கு ஏற்படக்கூடியது. ப்ராஸ்டேட் பெரிதாவதற்கும், புற்றுநோய்க்கும் ஒரே அறிகுறிதான். பி.எஸ்.ஏ. பரிசோதனை செய்வதன் மூலம் மட்டுமே இதைக் கண்டறிய முடியும். எனவே, ஆண்கள் இந்தப் பரிசோதனையைக் கட்டாயம் செய்துகொள்வது அவசியம். 50 வயதைக் கடந்துவிட்ட பெண்கள், கட்டாயம் தைராய்டு பரிசோதனை, மார்பகப் புற்றுநோய்க்கு மேமோகிராம் பரிசோதனை, கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய பேப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.''

''எப்படிப்பட்ட உணவை உட்கொள்ள வேண்டும்?''

''வயதுக்கு ஏற்ற வகையில் ஊட்டச் சத்துமிக்க உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இந்தக் காலத்தில் அதிகம் வைட்டமின் டி, கால்சியம், நார்ச் சத்து மற்றும் பொட்டாசியம் தேவை. சோடியம், சாச்சுரேட்டட் கொழுப்பு போன்றவை மிகக் குறைவாக இருக்க வேண்டும். இது, இதய நோய் வராமல் தடுக்க உதவும். குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, டயட் சார்ட் உருவாக்கிக்கொள்ள வேண்டும். வயது ஏற ஏற, சாப்பாட்டின் அளவு குறைந்தாலும், தரம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வாரத்துக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு அரிசி உணவைக் குறைத்து, கோதுமை, ராகி சேர்த்துக்கொள்ளலாம். இவற்றில் கொழுப்பு, சர்க்கரை இல்லை. புரதம், கால்சியம், நார்ச் சத்து போதுமான அளவும், க்ளைசிமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் உள்ளது. முடிந்த அளவுக்கு கேழ்வரகைச் சேர்த்துக்கொள்வது நல்லது.''  

''ஊட்டச் சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாமா?''

''மல்டிவைட்டமின் மற்றும் இதர ஊட்டச் சத்து மாத்திரைகள், தேவையான ஊட்டச் சத்தை அளிக்கக்கூடியவைதான். ஆனால், குடும்ப நல மருத்துவரின் ஆலோசனையின்றி, இதை எடுத்துக்கொள்வதும் நல்லதல்ல. ஏதேனும் ஊட்டச் சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்பவராக இருந்தால், அதுபற்றி டாக்டரிடம் விரிவாகத் தெரிவித்து ஆலோசனை பெற வேண்டும். ஊட்டச் சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாதவர் எனில், நம் உடலுக்கு என்ன மாதிரியான ஊட்டச் சத்து தேவை என்பதைக் கேட்டறிந்து அதன்படி கடைப்பிடிக்கலாம்.''  

''என்ன மாதிரியான உடற்பயிற்சி செய்யலாம்?''

''முதுமையைத் தாமதப்படுத்துவதில் உடற்பயிற்சிக்கு முக்கியப் பங்கு உண்டு. மலச்சிக்கலைப் போக்கும். தூக்கத்தைத் தரும். எலும்பு முறிவு பிரச்னையில் இருந்து தற்காத்து, எலும்பு மற்றும் தசைக்கு வலிமை சேர்க்கும். இதயத்தை வலுவாக்கும். சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பிரச்னைகளில் இருந்து காக்கும். உடலின் தன்மைக்கு ஏற்ப, என்ன உடற்பயிற்சிகள் செய்யலாம், எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்று ஆலோசனை பெற வேண்டும். ஏரோபிக் பயிற்சி, வலுவூட்டும் பயிற்சிகள் செய்வது நல்லது. ஒரே நேரத்தில் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், பத்து, பத்து நிமிடங்களாக நடைப்பயிற்சி செய்யலாம்.''

- பா.பிரவீன் குமார்

படங்கள்: ஜெ.பி.ரினி