பிரீமியம் ஸ்டோரி
##~##

ட்டகத்தைவிட, அதிகமாக அசைபோடும் இளசுகளுக்காகவே, பலவித வண்ணங்கள், சுவை, மணங்களில் சுயிங்கம்கள் கிடைக்கின்றன. ஓய்வு நேரத்தில் சுயிங்கம் மெல்லுவது என்பது நிறையப் பேருக்கு பழக்கமாகவே மாறிவிட்ட நிலையில், சுயிங்கம் மெல்லுவதால் வரும் நன்மைகள், பாதிப்புகள் குறித்து, கோவையைச் சேர்ந்த வயிறு மற்றும் குடல்நலச் சிறப்பு மருத்துவர் முருகேஷிடம் கேட்டோம்.

'நாம் அதிகம் பயன்படுத்தும் சுயிங்கம்கள் சர்க்கரையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. இது எல்லாக் கடைகளிலும் கிடைக்கும் சாதாரண வகை. மற்றொன்று, செயற்கைச் சர்க்கரையைக்கொண்டு தயாரிக்கப்படும் 'சுகர் ஃப்ரீ சுயிங்கம்’.  

ஆரோக்கியத்தைக் கவனத்தில்கொண்டு, தற்போது மார்க்கெட்டில், புதுமையாக 'சுகர் ஃப்ரீ’ இனிப்புகளைப் போல, இந்த 'சுகர் ஃப்ரீ சுயிங்கம்கள்’ வந்துவிட்டன.  

அசைபோடுவதும் ஆரோக்கியமே!

சுகர் ஃப்ரீ சுயிங்கம் மெல்லுவதன் மூலம், நன்மைகளும் உண்டு.  சுயிங்கம் மெல்லும்போது நம்முடைய மூளையில் நினைவாற்றலுக்குப் பொறுப்பான பகுதி தூண்டப்படுகிறது என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. மேலும், மன அழுத்தம், பதற்றத்தைப் போக்குகிறது. மன அழுத்தம், பதற்றமான சூழ்நிலையில் ஒரு சுயிங்கம் மெல்லும்போது அது மனதை அமைதிப்படுத்துகிறது' என்கிற டாக்டர் முருகேஷ், சுயிங்கம் பற்றி மேலும் விரிவாகப் பேசினார்.

'சுயிங்கம் மெல்வது செரிமானத்துக்கும் உதவியாக இருக்கிறது. குறிப்பாக சாப்பிட்டதற்குப் பிறகு சுயிங்கம் மெல்வது மிகவும் நல்லது. இப்படிச் செய்யும்போது அதிக அளவில் எச்சில் சுரக்கப்பட்டு இரைப்பைக்குள் அனுப்பப்படுகிறது. இது வயிற்றில் உள்ள அமிலங்களைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், புளித்த ஏப்பம் பிரச்னை உள்ளவர்கள், இதனை மெல்லும்போது உருவாகும் உமிழ் நீர், அமில - காரத்தன்மையைச் சீர்செய்கிறது.

அசைபோடுவதும் ஆரோக்கியமே!

உணவு உண்ட பின் இதனை மெல்லுவதன் மூலம், பல் இடுக்குகளில் உள்ள உணவுத் துகள்கள் வெளியேற்றப்படும். இதனால், உணவுக்குப் பின் பல் தேய்ப்பது, மவுத் வாஷ் உபயோகிப்பது போன்றவற்றுக்கு அவசியமே இருக்காது. இது பல் மற்றும் தாடைகளுக்கு நல்லதொரு பயிற்சியாகவும் அமைகிறது.

அசைபோடுவதும் ஆரோக்கியமே!

வாய் துர்நாற்றம் இருப்பவர்கள், இந்த சுயிங்கத்தை மெல்லுவதன் மூலம், சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும். 'ஜிராக்ஸ்டோமியா’ எனப்படும் இயற்கையாகவே விழி நீர், உமிழ் நீர் சுரப்பு, குறைவாக உள்ள குறைபாடு உள்ளவர்கள், இந்தச் செயற்கைச் சர்க்கரை சுயிங்கம்களை மெல்லுவதன் மூலம், அதிலிருந்து மீள முடியும்' என்றவர் சுயிங்கம் மெல்வதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பட்டியலிட்டார்.

'சர்க்கரைகொண்டு தயாரிக்கப்படும் சுயிங்கம்களை தொடர்ந்து மெல்லுவதன் மூலம், பற்சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. காரணம், அதில் உள்ள சர்க்கரை, பல் இடுக்குகளில் படிந்துள்ள பாக்டீரியாக்களுக்கு உணவாகிவிடுவதால், அவை வேகமாக வளர்ந்து பற்களைச் சிதைக்கும். இதனால் சிறுவர்கள், சிறுவயதிலேயே பல் சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்கு ஆளாகலாம்.

மற்றொரு பிரச்னை, சுயிங்கம்மைத் தெரியாமல் விழுங்கிவிடுவது. சுயிங்கம்மை விழுங்கினாலும் பாதிப்புகள் பெரிய அளவில் இருக்காது. காரணம், இது உடலுக்குள் எங்கும் ஒட்டாமல் நமது குடலை அடைந்துவிட்டால், மிக எளிதாக மலத்தில் வெளியேறிவிடும். மாறாக இது உணவுக்குழாயில் ஒட்டிக்கொள்ளும்போதுதான், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும். சுயிங்கம்மைத் தெரியாமல் விழுங்கிவிட்டால், உடனடியாக அதிகப்படியான நீர் அருந்த வேண்டும். இது, சூவிங்கம் குடலை அடைந்து வெளியேறி விடுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இல்லையெனில் அறுவைசிகிச்சை மூலமே வெளியேற்ற இயலும்.

சுயிங்கம் பிரியர்கள் சுகர் ஃப்ரீ சுயிங்கம் மெல்லுவதால், முகத்துக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.'  

- ஞா.சுதாகர்

படங்கள்: ர.சதானந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு