ஸ்பெஷல்
Published:Updated:

பச்சை முட்டை நல்லதா?

பச்சை முட்டை நல்லதா?

என்.ராமமூர்த்தி, சேலம்.

'கல்லூரி மாணவன் நான். என் உதடு, பல், ஈறில் அடிக்கடி புண் ஏற்படுகிறது. இதனால், சரியாகச் சாப்பிட முடிவதில்லை. அடிக்கடி வெண்ணெய் வைப்பேன். வாய்ப் புண் எதனால் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?'

டாக்டர் எம்.கணேஷ்,

வயிறு மற்றும் இரைப்பை மருத்துவர், கோவை.

பச்சை முட்டை நல்லதா?

'வாய்ப் புண் வர பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது ஊட்டச்சத்துக் குறைபாடு. மன அழுத்தம், தூக்கம் இன்மை போன்ற காரணங்களாலும் வாய்ப் புண் வரும். இவை தவிர வைரஸ், பாக்டீரியா போன்ற நுண் கிருமி தாக்குதல்களாலும் வாய்ப் புண் அடிக்கடி ஏற்படக்கூடும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலும், வாய்ப் பகுதியில் எதிர்ப்பு சக்தி அதிகளவில் இருந்தாலும் வாய்ப் புண் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடல் புண் காரணமாகவும் வாய்ப் புண் ஏற்படும். தொடர்ச்சியாக புகையிலை, குட்கா பயன்படுத்துவது, சிகரெட் புகைப்பது போன்றவற்றால்கூட வாய்ப் புண் ஏற்படலாம்.

வாய்ப் புண் வராமல் தடுக்க, புரதச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். காய்கறி, பழங்கள், கீரை வகைகளை அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பாதாம் பருப்பு, மாதுளம் பழம், பப்பாளி, மணத்தக்காளி கீரை, பீட்ரூட் போன்றவற்றை எடுத்துக்கொள்வது நல்லது. மன அழுத்தத்துடன் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 8 மணி நேரம் தூக்கம் மிகவும் அவசியம். இதற்குப் பின்னரும் தொடர்ச்சியாக வாய்ப் புண் ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.'

பச்சை முட்டை நல்லதா?

க.ரமேஷ், விராலிமலை.

'எனக்கு வயது 20. உடற்பயிற்சியோ, உணவுக்கட்டுப்பாடோ இதுவரை எதுவும் நான் மேற்கொண்டது இல்லை. ஆனாலும் ஸ்லிம்மாகத்தான் இருக்கிறேன். இப்போது எனக்கு உடல் சோர்வும், அதிகமான தூக்கமும் வருகிறது. இதற்கு என்ன காரணம், இவற்றைத் தவிர்க்க என்ன செய்யவேண்டும்?  

டாக்டர் ரமேஷ் குமார்,

ஆயுர்வேத மருத்துவர், தேனி.

'பொதுவாக நாம் உண்ணும் உணவு செரிக்கப்பட்டு குளுக்கோஸ், அமினோ அமிலம் என

பச்சை முட்டை நல்லதா?

பல்வேறு பொருள்களாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் போதுமான அளவு ஆற்றல் கிடைக்கும்போது சோர்வு, அடிக்கடி தூக்கம் போன்ற பிரச்னைகள் வராமல் இருக்கும். அந்த நிலையில் நாம் தாராளமாக உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். குடல் புண், பசியின்மை, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் உடல் உறுப்புகளுக்கு ஆற்றல் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படலாம். இதனால், அதிகப்படியான உடற்சோர்வு, தூக்கம் போன்றவை ஏற்படுகின்றன. இந்த நிலையில் உடற்பயிற்சி செய்வது வேறு பிரச்னையை ஏற்படுத்திவிடலாம். எனவே, உங்கள் அருகில் உள்ள மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று உடற்பயிற்சியோ, உணவுக் கட்டுப்பாடோ மேற்கொள்வது அவசியம்.'

தேவிபிரியா, பொள்ளாச்சி.

'வளரும் குழந்தைகளுக்கு 'பச்சை முட்டை’ கொடுத்தால் உடல் வலுப்பெறும் என்கிறார்களே அது உண்மையா? மேலும் பூப்படைந்த பெண்களுக்கு 'பச்சை முட்டை’ தருவது எந்த அளவுக்குச் சிறந்தது? நாட்டுக் கோழி முட்டைக்கும், லகான் கோழி முட்டைக்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா? எந்த முட்டையைக் கொடுப்பது சிறந்தது?'

டாக்டர் மைக்கேல் ஜெயராஜ்,

சித்த மருத்துவர், திருநெல்வேலி

பச்சை முட்டை நல்லதா?

'குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்த உணவு முட்டை. இதில் அதிக அளவில் புரதச்சத்து கிடைக்கிறது. இருப்பினும் முட்டையைப் பச்சையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதில், சில கிருமித் தொற்றுகள் இருக்கலாம். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகவே இருக்கும். முட்டையில் ஏதேனும் கிருமித் தொற்று இருந்து, அதைப் பச்சையாகக் கொடுக்கும்போது, அது அவர்களுக்கு மிக விரைவில் நோய் பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே, வெந்நீரில் சில நிமிடங்கள் முட்டையை வேக வைத்து அரை வேக்காடாகக் கொடுக்கலாம். அதனுடன் சிறிது மிளகுத் தூள் சேர்த்துக் கொடுப்பது மிகவும் நல்லது. பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் அதிக அளவு புரதச்சத்து இழப்பு ஏற்படும் என்பதால்தான் பூப்பெய்தியவுடனும், மாதவிலக்கு நேரத்திலும் முட்டையும், உளுந்தங்களியும் கொடுப்பார்கள். இது உடனடியாக உடலுக்குத் தேவையான புரதச்சத்தை அளிக்கும்.

ஹார்மோன் ஊசி மருந்து செலுத்தி, கறிக்கோழிகள் கொழுகொழுவென வளர்க்கப்படுவதாக புகார்கள் உள்ளன. அதனால் அந்தக் கோழி இறைச்சியைத் தவிர்ப்பது நல்லது. லகான் கோழி முட்டை தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை. இருப்பினும், நாட்டுக்கோழி முட்டை வாங்கிப் பயன்படுத்துவதே சிறந்தது!'