Published:Updated:

`பிக் பாஸ்' வீட்டில் மிகச் சிறந்த நடிகை யார்? - ஓர் உளவியல் பார்வை #BiggBossTamil

`பிக் பாஸ்' வீட்டில் மிகச் சிறந்த நடிகை யார்? - ஓர் உளவியல் பார்வை #BiggBossTamil
`பிக் பாஸ்' வீட்டில் மிகச் சிறந்த நடிகை யார்? - ஓர் உளவியல் பார்வை #BiggBossTamil

`பிக் பாஸ் வீட்டில், எல்லோரும் எந்தவித ஸ்கிரிப்ட்டும் இல்லாமல் உண்மையாகவே வாழ்ந்துவருகிறார்கள்' என்கிறது ஒரு தரப்பு. `இல்லை இல்லை. இது முழுக்க முழுக்க ஸ்கிரிப்ட்தான், இதுவும் ஒரு சீரியல்தான்' என்கிறது மற்றொரு தரப்பு. ஆனால், இரு தரப்புமே எதை மறந்தாலும் `பிக் பாஸ்’ பார்ப்பதை மட்டும் மறப்பதில்லை. விமர்சனம் செய்வதற்காக பார்க்கத் தொடங்கிய சிலர், பிக் பாஸ் ஏற்படுத்திய ஈர்ப்பால், தினமும் தவிர்க்க முடியாமல் பார்த்துவருகிறார்கள். அதிலும் ஓவியா மீதுதான் எல்லோருக்கும் தனிப் பிரியம்.

ஓவியா சினிமாவில்

நடிக்கும்போது, அவருக்கு இருந்த ரசிகர் பட்டாளத்தைவிட, இப்போது ரசிகர்கள் அதிகமாகியிருக்கின்றனர். `ஓவியா ரசிகர் மன்றம்’, `சேவ் ஓவியா’, `ஓவியா புரட்சிப்படை’  என்று ஓவியாவுக்கான ஆதரவு கோஷங்கள் சமூக வலைதளங்களில் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

மேலும், ஓவியாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஏழு குணங்களையெல்லாம் பட்டியலிட்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். ஓவியாவை விரும்புவதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் சரியானவைதானா? உண்மையில், பிக் பாஸ் வீட்டில் ஓவியாதான் மிகச் சிறந்த நடிகையா?

மனநல மருத்துவர் அசோகனின் விளக்கத்தைப் பார்ப்போம்...

வெளிப்படையாக இருத்தல் (Be straight forward):

`பிக் பாஸ்’ நிகழ்ச்சியை மட்டும் அடிப்படையாகவைத்துக்கொண்டு, அவர் வெளிப்படையாக இருக்கிறார் என்று சொல்வது தவறு. வெளிப்படையாக இருப்பது என்பது வேறு. `பிக் பாஸ்’-ல் ஒவ்வொருவரின் தோற்றத்துக்கு, அவர்களின் உடல்மொழிகேற்ப ஒவ்வொரு கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில், ஓவியாவின் கேரக்டர் இது. மற்ற கேரக்டர்களைவிட ஓவியாவின் கேரக்டர் ரசிக்கும்படி இருப்பதால் அப்படிச் சொல்கிறார்கள்.

தன்னைத் தானே விரும்புதல் (Love and respect yourself)

பொதுவாக, இந்தக் குணம் யாருக்கும் இருக்கக்கூடாது. தன்னை விரும்பிக்கொண்டு அடுத்தவரை விரும்பாமல் இருப்பது நல்ல குணம் ஆகாது. அடுத்தவருக்கும் ஸ்பேஸ் கொடுப்பதுதான் நல்ல குணமாக இருக்க முடியும். நம்மீது நமக்கு நம்பிக்கை, உறுதி இருப்பது தவறல்ல. ஆனால், சேர்ந்து வாழும் இடத்தில் அடுத்தவருக்கு மரியாதை கொடுப்பது மிக அவசியமான ஒன்று. இதை முன்மாதியாக யாரும் எடுத்துக்கொள்ளக்கூடாது.

துணிச்சல் நிறைந்த பெண் (Be brave and strong)

ஒரு புதிய சூழ்நிலையை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதில்தான் நம் துணிச்சல் வெளிப்படும். ஒரு புரோகிராமை வைத்து அவர் துணிச்சலானவர் என்பதை நாம் முடிவுசெய்ய முடியாது. ஆனால், இந்த புரோகிராமில்கூட அவர் பலமுறை அழுதிருக்கிறார்.

அக்செப்ட் அண்ட் மூவ் ஆன் (Accept and move on)

ஒரு கூட்டமாகச் சேர்ந்து வாழும் இடத்தில், எதிலுமே பங்குபெறாமல் இருப்பது மூவ் ஆன் அல்ல. `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், எல்லா பொறுப்புகளையும் தவிர்க்கும் கேரக்டராகச் செயல்படுகிறார் ஓவியா. ஏதாவது ஒரு வேலையில் அவரை கமிட் செய்துகொள்ள வேண்டும். அப்படி கமிட் ஆகி, அதனால் ஏற்படும் பிரச்னைகளை எளிதாக எடுத்துக்கொள்வதுதான் மூவ் ஆன்.

புறம்பேசுதலைத் தவிர்த்தல் (Ignore backstabbers)

ஓவியாவிடம் உள்ள இந்தக் குணம், நல்ல குணம்தான். இது, கண்டிப்பாக அனைவரும் பின்பற்றவேண்டிய ஒன்று.

பிறர் மீது அக்கறை (Be caring and concerned)

அனைவரிடமும் பேசுகிறார், சிரிக்கிறார். ஆனால், பெரிதாக அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அவர் விருப்பப்படி  மட்டுமே நடந்துகொள்கிறார்.

எப்போதும் சந்தோஷமாக இருப்பது (Enjoy yourself)

சந்தோஷமாக இருக்கிறார் என்பது உண்மைதான். இது அனைவரும் பின்பற்றவேண்டிய ஒரு குணம். அனைவரும் வாழ்க்கையை சந்தோஷமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

நல்ல அறிமுகமான ஒரு நபர். அழகாகவும் இருக்கிறார். அவரின் கேரக்டரும் குழந்தைத்தனமாக இருப்பதால், அனைவராலும் விரும்பப்படுகிறார். இந்த விருப்பம் சிறிது சிறிதாக அதிகரித்து, அவர் தவறே செய்தாலும் அதைக் கொண்டாடும் மனநிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டார்கள். கேரக்டராகவே பார்த்தாலும், இது கொண்டாடக்கூடிய ஒரு கேரக்டர் அல்ல. திரையில் இது போன்ற கேரக்டர்களை ரசிக்கும்  நாம், உண்மையில் இப்படி ஒருவர் இருந்தால் ரசிப்போமா என்றால் கேள்விக்குறிதான். மனிதர்கள் பொதுவாக, இப்படி கண்மூடித்தனமாக யாரையும் விரும்பக்கூடாது. எது சரி, எது தவறு என்பதை ஆராய்ந்துதான் விரும்ப வேண்டும்..." என்கிறார், மனநல மருத்துவர் அசோகன்.

யதார்த்த வாழ்வுக்கும் சினிமா சீரியல் நிகழ்ச்சிகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகளைச் சரியாக உணர்ந்து, அனைவரையும் மதித்து, அனைவருடனும் உரையாடி வாழ்தலே சிறப்பான வாழ்க்கையாக இருக்கும்.