Published:Updated:

மனநலம் பாதித்தவர்களை அவமானப்படுத்தும் `பிக் பாஸ்’..! - கொந்தளிக்கும் மருத்துவர்கள் #BiggBossTamil

மனநலம் பாதித்தவர்களை அவமானப்படுத்தும் `பிக் பாஸ்’..! - கொந்தளிக்கும் மருத்துவர்கள் #BiggBossTamil
மனநலம் பாதித்தவர்களை அவமானப்படுத்தும் `பிக் பாஸ்’..! - கொந்தளிக்கும் மருத்துவர்கள் #BiggBossTamil

`பிக் பாஸ்’... ஒளிபரப்பாவதற்கு முன்னர் `இது என்ன நிகழ்ச்சி?’ என்கிற எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டது. ஒளிபரப்பாகத் தொடங்கியதும், ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சி குறித்த சர்ச்சைகள்... `பிக் பாஸ் வீட்டில்’ இருப்பவர்களுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் ஒலிக்கும் குரல்கள்... `இது தனி மனிதத் தாக்குதல்’, `இது உரிமை மீறல்’... என்பது போன்ற கண்டனங்கள்... எல்லாம் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், வழக்கம்போல ஒன்றாக நேற்று ஒளிபரப்பான நிகழ்வைக் கடந்து போக முடியவில்லை. காரணம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய தவறான சித்தரிப்பு! அதற்கு எதிரான குரல்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகி வருகின்றன.

இந்த முறை கண்டனங்களும் எதிர்ப்புக் குரல்களும் மாணவர்கள், பெண்கள் என பாதிக்கப்பட்ட ஒரு சாராரிடமிருந்து மட்டும் வரவில்லை. தங்களுக்கென தனி அமைப்புகளையோ, போராடும் சங்கங்களையோ வைத்துக்கொள்ள முடியாத மனநல பாதிப்புக்கு உள்ளானவர்களின் குரலாக, மனநல மருத்துவர்களிடமிருந்து குரல்கள் எழுந்துள்ளன. `ஏற்கெனவே, மனநலம் பாதித்தவர்களைப் பற்றி பொதுமக்களுக்கு சரியான புரிதல் இல்லாத நிலைதான் நிலவுகிறது. இந்த நிலையில் நேற்றைய `பிக் பாஸ்’ நிகழ்ச்சி மனநலம் பாதித்தவர்களை தவறாக சித்தரித்திருக்கிறது’ என உரத்து ஒலிக்கின்றன மனநல மருத்துவர்கள், ஆலோசகர்களின் குரல்கள்.

நேற்றைய `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது மனநல மருத்துவமனை. அதில் மருத்துவர்களாக, மருத்துவ சிப்பந்திகளாக, மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக கருதிக்கொண்டு அந்த வீட்டில் இருந்தவர்கள் நடித்தார்கள். சினிமாக்களில் காட்டப்படும் மனநலம்

 பாதித்தவர்களை உதாரணமாகக் கொண்டு நடிக்க வேண்டும் என்பது அவர்களுக்கான இலக்காகக் கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின், குறிப்பிட்ட இந்த எபிசோடுக்கான கண்டனக் குரல் முதலில் வந்தது பிரபல மனநல மருத்துவரும், சமூகச் செயற்பாட்டாளருமான ஆர்.கே.ருத்திரனிடமிருந்து. அவர் தன் எதிர்ப்பை அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் `மனநலம் குன்றியவர் குறித்து பல மூடக் கருத்துகள் பலர் மத்தியில் இருக்கையில், `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அது குறித்த விகார விமர்சனமும், `வேடிக்கை’ எனும் பெயரால் காலங்காலமாய் இந்நோய் பற்றிய மட்டமான, மடத்தனமான சித்தரிப்பும் நேற்று ஒளிபரப்பப்பட்டது. எது குறித்தும் ஆழமான புரிதல் இல்லாத ஊடக ஆவேசத்தின் அவசர ஆட்டமாய் இதை ஒதுக்கிச் செல்ல முடியவில்லை.

பிறமுட்டாள்கள் இன்னமும் `நவராத்திரி’ பட மனநோயாளிகளின் அபத்த நகைச்சுவையே பிரதான சித்தரிப்பாய் நினைத்துக்கொண்டிருந்தாலும், அந்தக் கூட்டத்தில் இருக்கும் ஒரு செவிலியருக்கும் மனநோயால் பாதிக்கப்பட்டவர் எப்படி இருப்பார், நடந்துகொள்வார் என்பது தெரியவில்லை என்பதுதான் கேவலம். சமூகத்தில் இப்படித்தான் பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளவர்களும் இருக்கிறார்கள். இதில் மருத்துவர்களும் அடக்கம்.

1986 முதல் 2001 வரை என் எல்லாச் செயல்பாட்டிலும் மனநலம் + மனநோய் விழிப்புஉணர்வுக்காக உழைத்தவன் என்பதில் எனக்கு ஒரு தற்பெருமை உண்டு, அத்தனையும் போதவில்லை என வருத்தமும் கோபமும் நேற்று என்னுள் பொங்கியது.ஏற்கெனவே சமூக வலைத்தளங்களில் மூடநம்பிக்கைகள் பரவலாகப் பரவுகின்றன. மனநோய்கள் குறித்து மக்களிடையே மீண்டும் ஒரு தீவிர விழிப்புஉணர்வை உருவாக்கும் பணி பொறுப்பானவர்களுக்கு அவசியமாகிறது. வியாபார நிமித்தம் கமல் இதை விமர்சிக்காமல்விட்டாலும், இது குறித்து வேறேதாவது தளத்திலாவது பேசுவது இந்நிகழ்ச்சியில் சம்பாதிப்பதற்கான பிராயச்சித்தமாகும். இதெல்லாம் அதீத எதிர்பார்ப்பு என்பதும் தெரியும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

மனநல ஆலோசகர் சித்ரா அரவிந்த் சொல்கிறார்... " `மனநலம் பாதித்தவர்கள் என்றாலே இப்படித்தான் நடந்துகொள்வார்கள். இப்படித்தான் இருப்பார்கள்' என்று சினிமா பார்த்து தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். தெருவில் அனாதையாகச் சுற்றித் திரிபவர்களைப் போன்றவர்கள் என நினைக்கிறார்கள். சாதாரணமாக நம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கேகூட மனநல பாதிப்பு இருக்கலாம்.

தங்களுக்கு மனநல பிரச்னைகள், மனநல பாதிப்புகள் இருப்பது தெரியாமலேயே இருப்பவர்களும்கூட உண்டு. இந்த நிலையில் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் கொஞ்சம்கூட சமூகப் பொறுப்புஉணர்வு இல்லாமல், மனநலம் பாதித்தவர்களைத் தவறாகச் சித்தரிப்பது மட்டமான, கண்டிக்கவேண்டிய செயல். பொதுவாகவே, மனநல பாதிப்புள்ள பலரும் மருத்துவர்களைச் சந்திக்கவோ, ஆலோசனை பெறவோ தயக்கம் காட்டி வருகிறார்கள். மனநல மருத்துவர்களான நாங்கள், `பைத்தியம்’ என்ற வார்த்தையையே தவிர்க்கச் சொல்கிறோம். அதற்குப் பதிலாக வேறு வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். இந்த நிலையில் மறந்த வார்த்தையை மீண்டும் நினைவுபடுத்துவது பிற்போக்குத்தனமானது, கண்டிக்கவேண்டியது. இதனால், மனநல பாதிப்பு பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்த முடியாமல் போகும். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சையின் அவசியத்தை எல்லோருக்கும் உணர்த்த மனநல ஆலோசகர்கள் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் பலரும் பார்க்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர்களைப் பற்றிய தவறான சித்தரிப்பைக் காட்டுகிறார்கள். இது, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மருத்துவர்களை அணுகுவதில் தடையை ஏற்படுத்தும். உளவியலாக அதிக பாதிப்பை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களிடம்கூட தாங்கள் சந்திக்கும் உளவியல் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளத் தயக்கம் காட்டும் நிலை ஏற்படும்."

மனநல மருத்துவர் யாமினியிடம் பேசினோம்... ``மன பாதிப்பும் மற்ற நோய்களைப்போல ஒரு வகையான பாதிப்புதான். ஆனால், இதை மட்டும்தான் சமூகத்தில் கேலியாகவும் கேவலமாகவும் பார்க்கும் வழக்கம் உள்ளது. இதய பாதிப்பால் துடித்துக்கொண்டிருக்கும் ஓர் இதய நோயாளியைப் பார்த்து சிரிக்க மனம் வருமா என்று நினைத்துப் பார்க்க வேண்டும். நோயாளி மட்டுமல்ல... யாருடைய கஷ்டத்தையும் பார்த்துச் சிரிக்கும் வழக்கம் கண்டிப்பாக இருக்கக் கூடாது. தமிழ் சினிமாக்களிலும், இது போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் மனநல பாதிப்புக்கு உள்ளானவர்களை கேலிப் பொருளாகச் சித்தரித்து, அவர்களின் குணநலன்கள் மிகைப்படுத்திக் காட்டப்படுகின்றன. மனநல பாதிப்புகளில், மனச் சிதைவு நோய் என்பது வெறும் ஒரு விழுக்காடுதான். காதலில் தோல்வி அடைவது, வியாபாரத்தில் நஷ்டமாவதால்கூட மனச் சிதைவு நோய் ஏற்பட்டுவிடும் என்ற எண்ணம் பார்ப்பவர்கள் மத்தியில் தவறாக விதைக்கப்படுகிறது. பெண்ணின் உடையை ஓர் ஆண் அணிந்துகொள்ளும் கதாப்பாத்திரமாக சினேகன் நடித்திருப்பதில், மனநலச் சிக்கல் என்பதே கிடையாது. அதை ஆங்கிலத்தில் 'Gender dysphoria' மற்றும் 'Gender identity disorder' என்று சொல்வார்கள். இது மனம் தொடர்பான நோய் மட்டுமே கிடையாது. ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படக்கூடியது. பொதுவெளியில், அதுவும் அதிகம் பிரபலமான ஒரு

நிகழ்ச்சியில் இதுபோன்ற தவறான சித்தரிப்பால், அத்தகைய நபர்களையும் சக மனிதர்களைப் பைத்தியமாகப் பார்க்க வைக்கும். ஏற்கெனவே மனதளவில் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களிடம் மேலும் இது வலியை உருவாக்கும்.

உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) தொடங்கப்பட்ட நாளான ஏப்ரல் 7-ம் தேதி, ஒவ்வொர் ஆண்டும் உலக சுகாதார தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொது சுகாதாரக் கவலையைக் கருத்தில்கொண்டு ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு கருப் பொருள்கள் தேர்வு செய்யப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான உலக சுகாதார தினத்தின் கருப்பொருளாக, `மனச்சோர்வு பற்றி வெளிப்படையாக பேசுங்கள்’ (Depression: let's talk) என்ற தலைப்பு உலக அளவில் விழிப்புஉணர்வை உருவாக்கி வருகிறது. நடைமுறை வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளால் மனச்சோர்வு அதிக அளவில் ஏற்பட்டு, அது குறித்து மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவே தயக்கம் காட்டுகின்றனர் பலர். இந்த நிலையில் இது போன்ற மக்களின் வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்வில், இதன் ஆழமும் நுண்ணறிவும் சிறிதும் இல்லாமல் போகிற போக்கில் நகைச்சுவைக்காகப் பயன்படுத்திவிடுகிறார்கள். அந்த வகையில், ஓரளவுக்குப் புரிதல் உள்ளவர்களையும் பின்னோக்கிப் பயணிக்க வைத்திருக்கிறது இந்த நிகழ்ச்சி. மருத்துவத் துறையில் பணியாற்றுபவரும், தன்னை ஒரு போராளியாகக் காட்டிக்கொள்பவருமான ஜூலியும் சேர்ந்து நடித்திருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது’’ என்று தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார் யாமினி.

மனநலப் பிரச்னைகள், இவர்கள் விளையாட்டுக் காட்டுவதுபோல கேலியான விஷயமல்ல. இது போன்ற நுண்ணறிவு இல்லாத விளையாட்டுகளை நடத்துவதில் `பிக் பாஸ்’ கவனமாக இருக்க வேண்டும். `எறும்புக்கும் வாழ்வு உண்டு, அது வாழ்வதற்கும் வாழ்க்கை உண்டு’ என்பதுபோல மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் நினைத்துக்கொள்ளுங்கள். சக மனிதர்களாக அவர்களை நினைக்காவிட்டாலும், கேலிப் பொருளாகப் பார்ப்பதையோ, அவர்களைப் பார்த்தாலே அஞ்ச வேண்டும் என்ற மனநிலையையோ தூக்கி எறியுங்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள் இந்த மருத்துவர்கள்.