Election bannerElection banner
Published:Updated:

உலகம் அணு ஆயுதங்களை மட்டுமல்ல; உயிரி ஆயுதங்களையும் கைவிட வேண்டும்! - ஓர் அலசல்

War (Representational Image)
War (Representational Image)

பொதுவாக, ஒரு பொருளை உயிரி ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு அதற்குச் சில குணாதிசயங்கள் இருக்க வேண்டும்.

உயிரி ஆயுதங்கள் என்பவை கிருமிகள் அல்லது அவற்றின் நச்சுகளை ஆயுதங்களாக மாற்றிப் பயன்படுத்தப்படுபவை. வரலாற்றில் தெரிந்தவரை முதன்முதலில் 14-ம் நூற்றாண்டில் ஹிட்டிதில் இனத்தவர் டுலரீமியா (Tularemia) கிருமியைத் தள்ளுவண்டியில் வைத்து, எதிரிகளின் கூடாரத்துக்கு அனுப்பியது தெரியவருகிறது. பின்பு, பல்வேறு காலகட்டங்களில் பலவகையான உயிரி ஆயுத ஆராய்ச்சிகளும் தாக்குதல்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இருந்தாலும், இதுவரை ஒரு மிகப்பெரிய உயிரி ஆயுத தாக்குதல் நடத்தப்படவில்லை. ஆனால், 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் தபால்கள் மூலம் ஆந்த்ராக்ஸ் விதைகள் பலருக்கு அனுப்பப்பட்டன. அதில் பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து பேர் கடைசியாக உயிரிழந்தனர். அதிலிருந்து உயிரி ஆயுதங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டன.

பொதுவாக, ஒரு பொருளை உயிரி ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு அதற்குச் சில குணாதிசயங்கள் இருக்க வேண்டும். அவை அதிக இழப்புத்திறன், எளிதில் பரவக்கூடிய தன்மை, காற்றில் தெளித்தால் பரவக்கூடிய தன்மை, சரியான பரிசோதனைகள் இல்லாமல் சரியான மருத்துவம் மற்றும் தடுப்பூசிகள் உடனே கிடைக்காமை, சேமித்து வைக்கக்கூடிய தன்மை மற்றும் எளிதில் ஆயுதமாக்கக்கூடிய வாய்ப்பு போன்றவை ஆகும்.

பெரியம்மை வைரஸ்
பெரியம்மை வைரஸ்

உயிரி ஆயுதங்கள் இருவகையாகப் பயன்படுத்தப்படும். ஒன்று உயிரிப்போர் (Bio-war). இது அதிக நோய்களையும் உயிரிழப்புகளையும் உண்டாக்கும். இரண்டாவது உயிரி பயங்கரவாதம் (Bio terrorism) இது மக்களிடையே அதிக பீதியை உண்டாக்குவது. உதாரணத்துக்கு அமெரிக்காவில் தபாலில் அனுப்பப்பட்ட ஆந்த்ராக்ஸ் விதைகள் போல.

பாதுகாக்கப்பட்டிருக்கும் பெரியம்மை வைரஸ்!

ஆம்! பெரியம்மையை பூமியிலிருந்து விரட்டிவிட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உலகில் இரண்டு நாடுகளில் இன்றளவும் பெரியம்மை வைரஸ் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால், ஒருவேளை மீண்டும் பெரியம்மை வந்தால், அதற்குத் தடுப்பூசி தயாரிக்க பாதுகாக்கப்பட்ட இந்த வைரஸ் உதவும் என்பதுதான்.

ஆனால், ஒருவேளை மீண்டும் பெரியம்மை வந்தால், அந்த நோயாளிகளிடமிருந்து வைரஸை எடுத்து தடுப்பூசி தயாரிக்கலாம் என்பதுதான் உண்மை. பெரியம்மை வைரஸ் அமெரிக்காவின் அட்லான்டாவில் உள்ள சி.டி.சியிலும் ரஷ்யாவின் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைரஸ் பிரிபரேஷனிலும் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

சென்னை: 21.5 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா எதிர்ப்பு திறன்... செரோ ஸ்டடி முடிவுகள்!

இந்த வைரஸைத் தெளிக்கும் வைரஸாக மாற்ற முடியும். அப்படியானால் விமானத்தில் இந்த வைரஸை நிரப்பி, பறந்துகொண்டே மக்கள் மீது தெளிக்க முடியும். பிரச்னை என்னவென்றால், சோவியத் யூனியன் உடைந்த பிறகு, இந்தப் பெரியம்மை வைரஸ் மற்ற நாட்டினரிடமும் இன்னும் சொல்லப்போனால் பயங்கரவாதிகளிடமும் கிடைத்திருக்க வாய்ப்புள்ளது என அஞ்சப்படுகிறது.

Dr.Dileepan Selvarajan
Dr.Dileepan Selvarajan

கொரோனா ஓர் உயிரி ஆயுதமா?

சீனாவின் வுகான் மாநிலத்தில் உருவாகி, சீனாவின் பெரும் பகுதியைப் பாதித்து பின் உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் ஓர் உயிரி ஆயுதமா என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது. அதே வுகான் நகரில் ஒரு வைரஸ் பரிசோதனைக் கூடமும் இயங்கி வருவது, இந்தச் சந்தேகத்துக்கு மேலும் வலுசேர்க்கிறது.

ஆனால், தற்போதைய COVID-19-க்கு காரணமான கொரோனா வைரஸ் மரபணுக்களை ஆராய்ந்தால் அதில் மனித தலையீட்டுக்கான தடயங்கள் கிடைக்கப்பெறவில்லை. இருந்தாலும், வுகான் வைரஸ் பரிசோதனைக் கூடத்தைப் பன்னாட்டுக் குழு விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அந்தக் கோரிக்கையிலும் நியாயம் உள்ளது. இது போன்ற உயிரி ஆயுதங்களை அழிப்பதற்கு அனைத்து நாடுகளும் தங்கள் உயிரியில் ஆராய்ச்சிகளைக் கைவிட வேண்டும். இவற்றை என்னதான் பாதுகாப்பாக வைத்திருந்தாலும் என்றைக்கு வேண்டுமானாலும் அவை பாதுகாப்பு வளையத்தை மீறி, வெளியே வந்து உலகைப் பாதிக்க வாய்ப்புள்ளது. அதுவரை அனைத்து நாடுகளும் அவற்றுக்கான மருந்துகளையும் தடுப்பூசியையும் இருப்பில் வைத்திருக்க வேண்டும்.

War (Representational Image)
War (Representational Image)

கொரோனா வந்து இந்த உலகத்தையே ஆட்டி வைத்துள்ளது. வல்லமை வாய்ந்த, உலகிலேயே பணக்கார நாடு, தன்னை பலசாலி என்று சொல்லிக்கொள்ளும் அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்ப்பலிகள் நடந்துவிட்டன. என்னதான் அணு ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்தும் பயனில்லை. ஒரு நோய்க்கு முன் யாராலும் ஒன்றும் எளிதில் செய்துவிட முடியாது என்று மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. ஆகவே, அணு ஆயுதங்கள் போல, இந்த உயிரி ஆயுதங்கள் மிக ஆபத்தானவை. அவை மனிதகுலத்துக்கு வேண்டாதவை.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு