Published:Updated:

தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா? உண்மை நிலை என்ன? - விளக்கும் ராதாகிருஷ்ணன்!

தமிழகத்தில் கொரோனா பரவல் நிலை குறித்தும், மக்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்தும் விளக்குகிறார் சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக அரசு கொரோனாவை படிப்படியாகக் கட்டுப்படுத்திய சூழலில், மீண்டும் கொரோனா தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த முடியுமா... மீண்டும் தமிழகத்தில் லாக்டவுன் வருமா... போன்ற பல்வேறு கேள்விகளை சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம்.

``திடீரென கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் என்ன?"

``மூன்று வாரங்களுக்கு முன்பே சராசரியாக நாளொன்றுக்கு 450 பேர் பாதிக்கப்பட்டுவந்தார்கள். அந்த எண்ணிக்கையிலிருந்து குறையாமல், அப்படியே அந்த எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. முக்கியமான காரணம், பிப்ரவரி மாதம் பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழகத்தில் நடந்தன. கல்யாணம், பிறந்தநாள் கொண்டாட்டம், அரசியல் கூட்டங்கள் என எங்குமே முறையாக சமூக இடைவெளியோ, மாஸ்க்கோ அணியாத சூழலில்தான் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கிறது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை இறப்பு விகிதம் குறைவுதான். ஆனாலும் இறப்பே இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்றுதான் முயன்றுவருகிறோம்."

``உலகத்தில் பல்வேறு நாடுகளிலும் கொரோனா எண்ணிக்கை உயர்ந்துகொண்டேதான் வருகிறதே..."

``ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள். பிரேசிலில் மாஸ்க் தேவையில்லை என்று அந்த ஜனாதிபதியே சொன்னார். அடுத்து அமெரிக்கா போன்ற நாடுகளில் அண்மையில் நிறைய விழாக்களைக் கொண்டாடினார்கள். இது ஒரு நுண்கிருமி. இதற்கு நாடு தெரியாது. ஊர் தெரியாது, பழக்கம் தெரியாது. கூட்டத்தில் கவனக்குறைவாக இருந்தால் நிச்சயம் கொரோனா தொற்று ஏற்படும்."

கொரோனா சோதனை
கொரோனா சோதனை

``தமிழகத்தில் பரவுவது கோவிட் 19 வகை வைரஸா அல்லது உருமாறிய வைரஸா?''

``ஆர்.என்.ஏ வைரல் மியூட்டேஷன் நடப்பது இயல்புதான். தமிழகத்தில் இதுவரை 11 பேர் உருமாறிய வைரஸால் பாதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் அனைவரும் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். நாம் புது கொரோனாவா, உருமாறிய கொரோனாவா என்று பார்க்காமல் அனைவரும் கட்டாயம் உள்ளாடை அணிவதுபோல முகக்கவசம் அணிய வேண்டும். அதுமட்டும்தான் நம்மை முதலில் காக்கும்."

``மக்களுக்கு அரசாங்கத்தின்மீது உள்ள பயம் போய்விட்டதா அல்லது அலட்சியமாக இருக்கிறார்களா?"

``இரண்டையும் சொல்ல மாட்டேன். மக்களுக்குச் சற்று தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இங்கு மட்டுமல்ல உலக அளவிலும் இந்தத் தொய்வைப் பார்க்க முடிகிறது. முதலில் மக்கள் பயந்தார்கள். இறப்பு எண்ணிக்கையைப் பார்த்து கவனத்துடன் இருந்தார்கள். நாட்களாக ஆக, இறப்பு எண்ணிக்கையை அரசாங்கம் குறைத்ததும் இனி ஒன்றும் ஆகாது, கொரோனா நம்மைவிட்டுப் போய்விட்டதாக எண்ணி முகக்கவசம் அணிவதைத் தவிர்க்கவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் இருக்கிறார்கள். அதுதான் இந்த எண்ணிக்கை உயர்வுக்குக் காரணம்."

``தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்கிறது?"

``சென்னையைப் பொறுத்தவரை தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அம்பத்தூர், பெருங்குடி, மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் உயர்கிறது. சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும், கோவை, திருப்பூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களிலும் உயர்கிறது. மற்ற மாவட்டங்களில் ஒரு விழுக்காடுக்குக் கீழ் பாதிப்பு இருக்கிறது.''

``இதே நிலைமை நீடித்தால், மீண்டும் தமிழகத்துக்கு லாக்டடௌன் வருமா?"

``இது குறித்து நிறைய வதந்திகள் பரவுகின்றன. இது கொள்கைரீதியான முடிவு. இதற்கு முடிவெடுக்கும் அதிகாரி நான் அல்ல. தமிழக அரசும், உள்துறை அமைச்சகமும் எடுக்க வேண்டிய முடிவு. வரும் காலங்களில் கொரோனாவைச் சுற்றி பணியாற்றுவதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் தேவையற்ற பதற்றம் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். அதை கவனக்குறைவாக மக்கள் எடுத்துக்கொள்வார்கள். கவனம்... மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமிது."

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

``கொரோனாவை முற்றிலும் ஒழிக்க முடியுமா?"

``கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் யாருக்காவது கொரோனா வந்திருக்கிறதா?"

``கோவிஷீல்டு, கோவாக்ஸின் இரண்டில் சிறந்த தடுப்பூசி எது?"

``ஒருவரே இரண்டு தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள முடியுமா?''

``இந்தியாவில் ஆறு மாநிலங்களில்தான் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கிறது. அப்படி என்றால் மீதி மாநிலங்களில் மக்கள் அனைவரும் சமூக இடைவெளி, முககவசம் முறையாக அணிகிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?"

``நீங்கள் கோவிஷீல்டு போட்டீர்களா அல்லது கோவாக்ஸினா?"

இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு